தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 310119 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 310119 

புனித போஸ்கோவின் திருநாளில் திருத்தந்தையின் மறையுரை

புனித ஜான் போஸ்கோ, இளையோரைத் தேடிச் சென்றபோது, மறைக்கல்வி நூலையும், சிலுவையையும் சுமந்து செல்லாமல், பாசத்தை சுமந்து சென்றதால், அவரால் இளையோரை அணுகிச்செல்ல முடிந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 31, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனித ஜான் போஸ்கோவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வழங்கிய மறையுரையில், அருள்பணியாளர்கள் இப்புனிதரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் புனித ஜான் போஸ்கோ திருநாள் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருப்பலியின் சபை மன்றாட்டில் கூறப்பட்டுள்ள புனிதரின் பண்புகளை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

சமுதாயத்தால் கைவிடப்பட்ட இளையோரைத் தேடிச்சென்றவர் புனித ஜான் போஸ்கோ என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர், இளையோரைத் தேடிச்சென்றபோது, மறைக்கல்வி நூலையும், சிலுவையையும் சுமந்து செல்லாமல், பாசத்தை சுமந்து சென்றதால், அவரால் இளையோரை அணுகிச்செல்ல முடிந்தது என்று கூறினார்.

அருள்பணியாற்றுவோர், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பணியாற்றும் அலுவலர்கள் அல்ல, மாறாக, முழு நேரமும், தன்னைச் சுற்றியிருப்போருக்காக உழைக்கவும், அவர்களுக்காகப் போராடவும் துணிந்தவர்கள் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

தன் குழந்தைப் பருவம் முதல் துன்பங்களைத் தாங்கி புடமிடப்பட்டதால், புனித ஜான் போஸ்கோ, பரந்து விரிந்த மனதுடன் இளையோரைத் தேடிச்செல்ல முடிந்தது என்று கூறினார் திருத்தந்தை.

அருள்பணியாளர் ஒருவர் சிறந்த முறையில் பணியாற்றுகிறார் என்பதற்கு என்ன அடையாளம் என்று, தன் மறையுரையின் இறுதியில் கேள்வி எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித கண்கொண்டும், இறைவனின் கண் கொண்டும் இவ்வுலகைப் பார்க்கவும், தன் பணியில் மகிழ்வை உணரவும் முடிந்த அருள்பணியாளர், நன்கு பணியாற்றுகிறார் என்று கூறி முடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2019, 10:02
அனைத்தையும் படிக்கவும் >