தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புறக்கணிப்பு, கடவுளின் அன்புக்கு எதிரானது

புறக்கணிப்பு கலாச்சாரத்திலிருந்து நம் இதயங்கள் குணமாக, இறைவனிடம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அன்புகூர்வது எப்படி எனத் தெரியாத மனித சமுதாயத்தை அன்புகூர கடவுளே முதலடி எடுத்து வைத்தார், ஏனெனில் அவர் பரிவன்பும், இரக்கமும் உள்ளவர் என்று, இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் பலுகியது பற்றிய நற்செய்தி வாசகம் (மாற்.6:34-44) மற்றும் கடவுள் முதலில் அன்புகூர்ந்தார் என்பது பற்றிப் பேசும் புனித யோவானின் முதல் மடல் (4:7-10) ஆகியவற்றை மையப்படுத்தி  மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் முதலில் அன்புகூர்ந்தார்

கடவுள் தம் மகன் இயேசுவை உலகிற்கு அனுப்பியதன் வழியாக, அவர் முதலில் மனித சமுதாயத்தை அன்புகூர்ந்தார், நம் வாழ்வுக்கு அர்த்தம் தந்தார் மற்றும், நம்மைப் புதுப்பித்து, புதுப்படைப்பாக்கினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

மக்கள்திரள் மீது இயேசுவின் பரிவு

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் பலுகியது பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, ஆயரில்லா ஆடுகள் போல் இருந்த மக்களைப் பார்த்து இயேசுவின் இதயம் இரங்கியது, அவரால் பாராமுகமாய் இருக்க இயலவில்லை, அன்பு ஓய்வின்றி இருக்கும், அன்பு, புறக்கணிப்பைச் சகித்துக் கொள்ளாது, மாறாக, அன்பு பரிவிரக்கமுள்ளது, அன்பு என்பது, ஒருவர் தன் இதயத்தில் இரக்கம் சுரக்க வைப்பது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இயேசுவின் சீடர்கள் மக்கள் மீது ஆர்வம் காட்டவில்லை, அன்புகூர்வதும், இரக்கம் காட்டுவதும் எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது என்றுரைத்த திருத்தந்தை, உரோம் நகரில் வீடின்றி வாழ்கின்ற ஒரு பெண் பற்றியும் கூறினார்.

பொதுவாக, கடவுளின் அன்புக்கு எதிரானது புறக்கணிப்பு மற்றும் வெறுப்பு என்றுரைத்த திருத்தந்தை, புறக்கணிப்பு கலாச்சாரத்திலிருந்து நம் இதயங்கள் குணமாக, இறைவனிடம் மன்றாடுவோம் என்றார்.

மேலும், சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருந்த, ஆஸ்ட்ரியாவுக்கான முன்னாள் திருப்பீட தூதர் பேராயர் Giorgio Zur அவர்கள், இத்திங்கள் இரவு காலமானதைக் குறிப்பிட்டு, அவரின் ஆன்ம நிறைசாந்தியடைய இத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 9, இப்புதனன்று தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், Neocatechumenal Way என்ற அமைப்பின் இணை நிறுவனர் Kiko Argüello அவர்களுக்கும், இத்திருப்பலியின் இறுதியில், தனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திருஅவைக்காக உழைக்கும் Kiko Argüello அவர்களின் திருத்தூது ஆர்வத்திற்கு திருத்தந்தை நன்றியும் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2019, 15:40
அனைத்தையும் படிக்கவும் >