தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

இறைவனால் ஆறுதலளிக்கப்பட நம்மை அனுமதிப்போம்

துன்புறும்வேளையில், இறைவனின் ஆறுதலை நாம் உணராமல் இருக்கலாம், ஆயினும், அக அமைதியை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆறுதல் அளிப்பது என்பது, கிறிஸ்தவர்களின் வாழ்வில் சாதாரணமாக விளங்கவேண்டிய பண்பாகும், ஆனால், இன்றைய உலகில், இரக்கம் என்ற சொல் அகராதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், ஆறுதலளிக்க நாம் அழைக்கப்படுவது பற்றிக் கூறும் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, தன் குழந்தை அழுகின்றபோது, தேற்றும் அன்னையர் போன்று, நமக்கும், தம் இரக்கத்தால் இறைவன் ஆறுதலளிக்கிறார் என்று கூறினார்.  

எதிர்ப்பு மனப்பான்மையை விட்டுவிட்டு, இறைவனால் ஆறுதலளிக்கப்பட நம்மை நாம் அனுமதிப்போம் என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவர், எவ்வாறு நமக்கு ஆறுதலளிக்கிறார் என்பதை விளக்கினார்.

ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள், ஏனெனில் அவர்கள் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்றுரைக்கும் இறைவாக்கினர் எசாயா நூல் (எசா.40,1-11) பகுதியை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கு குறிப்பிடப்படும் ஆறுதல் என்பது, நாம் மீட்கப்பட்டுள்ளோம் என்பதாகும் என்றும் கூறினார்.

இறைவனால் ஆறுதலளிக்கப்பட நம்மை அனுமதிப்பது, கிறிஸ்மஸ்க்கு நம்மைத் தயாரிப்பதற்கு உதவுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இத்திருப்பலியின் தொடக்க செபத்தில் நாம் செபித்தது போன்று, உண்மையிலே மகிழ்வாய் இருப்பதற்கு, கடவுளிடம் அருளை மன்றாடுவோம் என்றும் கூறினார்.

துன்புறும்வேளையில், இறைவனின் ஆறுதலை நாம் உணராமல் இருக்கலாம், ஆயினும், ஆண்டவரிடமிருந்து கொடையாகப் பெறுகின்ற அக அமைதியை, கிறிஸ்தவர்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது என்று மறையுரையில் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஆயனைப்போல, ஆண்டவர் நம்மைக் காக்கின்றார் என்றும் கூறினார்.

மறைசாட்சிகள், பாடிக்கொண்டே கொலோசேயத்திற்குள் நுழைந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, லிபியா கடற்கரையில், கழுத்து அறுக்கப்பட்டவேளையில், இயேசு, இயேசு என்று சொல்லிக்கொண்டே இறந்த காப்டிக் மறைசாட்சிகள் போன்ற இக்காலத்து மறைசாட்சிகளையும் நினைத்து பார்க்கிறேன் என்றும், மறைசாட்சிய நேரத்திலும் மகிழ்வுடன் அதனை எதிர்கொண்டனர் என்றும் கூறினார்.

மேலும், இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” (எசா. 40,1) என்றுரைக்கும் கடவுள், தம் கனிவன்பால் ஆறுதல் கூறுகிறார் என்று எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2018, 13:00
அனைத்தையும் படிக்கவும் >