தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் - சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி திருத்தந்தை பிரான்சிஸ் - சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு தயாரிப்பு - திருத்தந்தை

விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல; இருப்பினும், விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் - திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கையைப் பாதுகாப்பதும், அதைக் காக்க போராடுவதும், எளிதான செயல்கள் அல்ல என்பதால், கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு தயாரிப்பதற்குத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டுவோம் என்று இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், முடக்குவாதமுற்ற ஒருவருக்கு இயேசு குணமளிப்பார் என்ற நம்பிக்கையுடன், நண்பர்கள் சிலர், கூரைமேல் ஏறி, ஓடுகளைப் பிரித்து, நோயுற்றவரை இயேசு அமர்ந்திருந்த இடத்திற்கு முன் இறக்கிவிட்ட நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் மறையுரையை வழங்கினார்.

இயேசுவின் முன், அம்மனிதரைக் கொணர்ந்தால், அவர் குணம் பெறுவார் என்று, அவரது நண்பர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கண்டு, இயேசு வியப்படைந்தார் என்பதை, தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக் காலத்தின் இரண்டாவது வாரத்தில் இருக்கும் நாம், கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம்மையே தயாரிக்கும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறினார்.

விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல என்பதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

மூட பழக்க வழக்கங்களிலிருந்தும், உலகு சார்ந்த போக்குகளிலிருந்தும் நம் நம்பிக்கையைக் காப்பதற்கு, இந்நாள்களில், இறைவனை நோக்கி, "இறைவா உம்மை நம்புகிறேன். என் நம்பிக்கையை அதிகரிக்க உதவியருளும்" என்று வேண்டுவோம் என, தன் மறையுரையில் இறுதியில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2018, 14:49
அனைத்தையும் படிக்கவும் >