தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 041218 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 041218  (Vatican Media)

இதயத்தில், குடும்பத்தில், உலகில் அமைதியைத் தேடுவோம்

கிறிஸ்மஸ்க்கு தயாரிப்பு - ஆன்மாவிலும், குடும்பத்திலும், உலகிலும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்பது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலம் என்பது, ஒருவர் தன் ஆன்மாவிலும், குடும்பத்திலும், உலகிலும் அமைதியைக் கட்டியெழுப்பும் வழிகளைத் தேடுவதற்குரிய காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், இன்றைய திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, ஒவ்வொருவரும், தன் ஆன்மாவிலும், குடும்பத்திலும், உலகிலும் அமைதியை உருவாக்க எடுத்துவரும்  முயற்சிகள் பற்றி சிந்தித்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆண்டவரின் வருகையின்போது எல்லாமே அமைதியில் வாழும் என்று இறைவாக்கினர் எசாயா உரைப்பதை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களில் கவலைகளும், போராட்டங்களும், சிறு சிறு சண்டைகளும், பிரிவினைகளும் நிலவும்வேளை, அவற்றில் ஒன்றிணைக்கும் பாலங்களை அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

உலகில் அமைதி நிலவ எனது பங்கு என்ன? எனது அயலவரில், பள்ளியில், பணியிடத்தில், அமைதி நிலவ எவ்விதத்தில் உதவுகின்றேன்? எல்லாவற்றிலும் மன்னிக்கும் பண்பை வளர்த்துக் கொள்கின்றேனா? போன்ற கேள்விகளை, இத்திருப்பலியில் பங்குபெற்ற விசுவாசிகளிடம் எழுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியை உருவாக்குவது, இறைவனைப் பின்பற்றி நடப்பதாகும் என்றும், ஆன்மாவிலும், குடும்பத்திலும், உலகிலும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு அமைதியின் இளவரசராம் ஆண்டவரின் உதவியை இறைஞ்சுவோம் என்றும், இச்செவ்வாய் காலை மறையுரையில், திருத்தந்தை கூறினார்.

மேலும், இத்திருவருகைக் காலம், குழந்தைத்தன்மை, தாழ்ச்சி, பிறருக்கு ஊழியம்புரிதல் ஆகிய பண்புகளில் நம்மை வளரச் செய்கின்றது. மேலும், அமைதியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சக்தியையும் வழங்குகின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று பதிவாகி இருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2018, 15:02
அனைத்தையும் படிக்கவும் >