தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா திருப்பலியின்போது....061118 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது....061118  (Vatican Media)

இயேசு நல்லவர், இரக்கமுடையவர், அதேவேளை நீதியானவர்

மீண்டும் மீண்டும் நம்மை அழைத்து, நமக்காக காத்திருக்கும் இறைவனை நாம் ஒதுக்கும்போது, நாமே ஒதுக்கப்பட்டவர்கள் ஆகிவிடுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பரிசேயர் ஒருவரது அழைப்பின் பேரில் விருந்துக்குச் சென்ற இயேசு, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் கூறும் விதமாக, விருந்துக்கு அழைக்கப்பட்டோர் குறித்த உவமை ஒன்றை எடுத்துரைத்ததை மையப்படுத்தி, இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி, விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, வர மறுத்தபோது, வீட்டு உடைமையாளர் தன் பணியாட்களை நோக்கி, ஏழைகளையும், ஊனமுற்றோரையும் நோயாளர்களையும் விருந்துக்கு அழைத்து வர கட்டளையிட்டது, நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தருகின்றது என்று கூறினார்.

இறைவன் நம்மை, மீண்டும், மீண்டும் அழைக்கிறார், நாம், மீண்டும், மீண்டும் மறுத்தாலும், அவர் காத்திருக்கின்றார், ஆனால், இறுதியில் நம் மறுப்புத் தொடரும்போது, நாம் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகிவிடுகிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 

பிறரன்பு நடவடிக்கைகளை ஆற்றுவதற்கு, பலவேளைகளில், தூய ஆவியார் வழங்கும் தூண்டுதல்களை நாம் பெற்றாலும், இயேசுவை சந்திப்பதற்கான அழைப்பை நாம் உணர்ந்தாலும், செபிப்பதற்கும் நம்மை மாற்றியமைப்பதற்குமான அழைப்பு நமக்கு விடப்பட்டாலும், எதாவது ஒரு காரணத்தைக் கூறி நாம் விலகிச் சென்று கொண்டேயிருக்கிறோம் என்று தன் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனை ஒதுக்காதவர்களும், அவரால் ஒதுக்கப்படாதவர்களுமே விண்ணரசில் நுழைய முடியும் என்றார்.

கடவுள் நல்லவர், இரக்கம் நிறைந்தவர், அதேவேளை, அவர் நீதியானவரும் கூட என தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் உள்ளிருந்து நம் மனக் கதவுகளை பூட்டி விட்டோமென்றால் அவரால் அதனை திறக்க முடியாது, என மேலும் கூறினார்.

06 November 2018, 14:55
அனைத்தையும் படிக்கவும் >