சாந்தா மார்த்தா திருப்பலியின்போது....-121118 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது....-121118  (Vatican Media)

ஆயர்கள், பொறுப்பாளர்களே தவிர, இளவரசர்கள் அல்ல

திருஅவையின் கண்காணிப்பாளர்கள், அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகிய குறைகளைக் கொண்டிருக்கக் கூடாது – திருத்தூதர் பவுலின் சொற்களை நினைவுறுத்திய, திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயராகப் பொறுப்பேற்றுள்ளவர், பணிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டும் என்றும், அவர் ஓர் இளவரசர் அல்ல என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருத்தூதர் பவுல், தீத்துவுக்கு எழுதிய திருமுகத்தையும், நவம்பர் 12, இத்திங்கள் சிறப்பிக்கப்பட்ட புனித ஆயர் ஜோசபாத் திருநாளையும் இணைத்து, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருஅவை வரலாற்றின் துவக்கத்திலிருந்தே, ஆர்வமும், குழப்பமும் நிலவி வந்தன என்பதை, புனித பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகம் நமக்குச் சொல்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழப்பங்கள் நிகழ்வதைக் கண்டு நாம் அச்சம் கொள்ளாமல், நம்மை உருவாக்க வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பாக, அவற்றைக் கருதவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

தீத்துவுக்கு எழுதிய திருமுகத்தில் கிறிஸ்தவ சமுதாயத்தின் கண்காணிப்பாளர்களைக் குறித்து புனித பவுல் எழுதியுள்ள வரிகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, ஆயர்களாகப் பொறுப்பேற்பவர்கள், இறைவன் பணிக்கு பொறுப்பாளர்களாய் இருக்கவேண்டுமே தவிர, சொத்துக்கள், பணம் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களாய் இருக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கூறினார்.

மூப்பர்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவர்களாய் இருக்கவேண்டும் என்று புனித பவுல் கூறும் அதே சொற்கள், மக்களின் தலைவராக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாமிடமும் கூறப்பட்டது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

திருஅவையின் கண்காணிப்பாளர்கள், அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகிய குறைகளைக் கொண்டிருக்கக் கூடாது என்று புனித பவுல் கூறியுள்ளதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த குறைபாடுகளில் ஒன்று, ஆயர்களிடம் காணப்பட்டாலும், அது, திருஅவைக்கு பெரும் தீங்காக அமையும் என்று கூறினார்.

திருத்தூதர் பவுலின் கூற்றுகளின்படி, ஆயரும் மறைசாட்சியுமான புனித ஜோசபாத் வாழ்க்கையின்படி ஆயர்களாகிய நாம் வாழ்வதற்கு இறைவனின் அருளை வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2018, 15:09
அனைத்தையும் படிக்கவும் >