சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை  (Vatican Media)

'அனுதின உணவாக' நாம் பயன்படுத்தும் முணுமுணுத்தல்

ஒருவரை ஒருவர் குறை கூறும் வழிகளைப் பின்பற்றும் உலக அரசுகள் போலவே, முணுமுணுத்தல் என்ற நோய், குடும்பம், பங்குத்தளம், மறைமாவட்டம், சமுதாயம் என்று, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் குடும்பங்களில், பங்குத்தளங்களில், மறைமாவட்டங்களில் மற்றும் சமுதாயத்தில் 'அனுதின உணவாக' நாம் பயன்படுத்தும் முணுமுணுத்தல் என்ற பாவத்தைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இயேசு பாவிகளை வரவேற்று உணவருந்துகிறாரே என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் முணுமுணுத்தனர் என்ற நற்செய்தி வாக்கியத்தைச் சுட்டிக்காட்டி, தன் மறையுரையைத் துவங்கினார்.

சாட்சி பகிர்தல், முணுமுணுத்தல், மற்றும் கேள்வி எழுப்புதல் என்ற மூன்று கருத்துகளை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவிகளைத் தேடிச் செல்லுதல், சுத்தமற்றவர்களையும், தொழுநோயாளர்களையும் தொட்டு குணமாக்குதல் என்ற செயல்களின் வழியே இயேசு புதியதொரு சாட்சியாக விளங்கினார் என்று எடுத்துரைத்தார்.

பழக்க வழக்கங்களை முறியடித்து, மாற்றங்களைக் கொணர்வது இயேசுவின் வாழ்வில் தலை சிறந்த ஒரு பணியாக இருந்தது என்றும், பலிகளைவிட இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற எண்ணத்திற்கு இயேசு தலைசிறந்த சாட்சியாகத் திகழ்ந்தார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

நடைபெறும் நல்லவை எதிலும் கவனம் செலுத்தாமல் குற்றம் காண்பதிலேயே குறியாய் இருந்த பரிசேயரும், மறைநூல் அறிஞர்களும், முணுமுணுப்பதையே தங்கள் தினசரி உணவாகக் கொண்டிருந்தனர் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முணுமுணுத்தல் என்ற செயல் எப்போதும், தெளிவில்லாத இரகசிய குரலாகவே வெளிவருகிறது என்று எடுத்துரைத்தார்.

ஒருவரை ஒருவர் குறை கூறும் வழிகளைப் பின்பற்றும் உலக அரசுகள் போலவே, முணுமுணுத்தல் என்ற நோய், குடும்பம், பங்குத்தளம், மறைமாவட்டம், சமுதாயம் என்று, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படுகிறது என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

"உங்களில் யார் இவ்வாறு செய்வார்?" என்ற கேள்வி வழியே, இயேசு நமக்கு சவால் விடுக்கிறார் என்பதை தன் மறையுரையின் மூன்றாவது எண்ணமாகப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 99 ஆடுகளை விட்டுவிட்டு காணாமல்போன ஓர் ஆட்டைத் தேடிச் செல்வது மதியீனம் என்று கூறும் உலக அளவுகோலை, இயேசு, கேள்விக்குள்ளாக்குகிறார் என்று கூறினார்.

உலக சிந்தனைக்கு எதிர் துருவமாக நற்செய்தியின் சிந்தனைகள் அமைந்ததாலேயே, இன்றும் நற்செய்தி நமக்கு பொருள் தருவதாக உள்ளது என்று, திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 10:18
அனைத்தையும் படிக்கவும் >