தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 091118 சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 091118  (Vatican Media)

அருளடையாளங்களுக்கு விலை பட்டியல் கிடையாது

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழாவன்று, இயேசு, எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வை (யோவான் 2:13-22) மையப்படுத்தி, திருத்தந்தை, தன் மறையுரைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமது ஆலயங்கள் இறைவனின் இல்லங்கள் என்றும், உலகம் சார்ந்த கருத்தியல்களைப் புகுத்தி, அவற்றை சந்தைகளாக மாற்றிவிடக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

நவம்பர் 9, இவ்வெள்ளியன்று, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, இயேசு, எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு (யோவான் 2:13-22) கூறப்பட்டுள்ள நற்செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் மறையுரைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆடு, மாடு, புறா, நாணயம் என்ற பல பொய் தெய்வங்கள் எருசலேம் ஆலயத்தை நிறைத்துவிட்டதை உணர்ந்த இயேசு, அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுவாக, பொய் தெய்வங்கள், நாணயங்களைப்போல், தங்க வண்ணத்தில், நம்மை ஈர்க்கின்றன என்று எடுத்துரைத்தார்.

தான் முன்பு பார்த்த ஓர் ஆலயத்தில், அருளடையாளங்களுக்கு விலை குறித்து பட்டியல் ஒன்று காணப்பட்டது என்று கூறியத் திருத்தந்தை, நம் ஆலயங்கள் மக்களின் மனமுவந்த காணிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, விலை பட்டியல்களால் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

நாம் ஒவ்வொருவரும் ஆலயம் என்று, இத்திருநாளின் முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கூறிய சொற்களை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உள்ளம் என்ற ஆலயத்தில் எவ்வகை பொய் தெய்வங்களை பீடமேற்றியிருக்கிறோம் என்ற ஆய்வில் ஈடுபடுவது நல்லது என்று பரிந்துரைத்தார்.

ஊழலில் சிக்கியிருக்கும் இன்றைய உலகில், பணம் என்ற பொய் தெய்வம் பீடமேற்றப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, நாம் விழிப்பாயிருக்கவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

மேலும், "எங்கெல்லாம் பாவம் உள்ளதோ, அங்கெல்லாம், பாவங்களை மன்னிக்கும் இரக்கம் நிறைந்த இறைவனும் உள்ளார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக நவம்பர் 9, இவ்வெள்ளியன்று வெளியாயின.

இதற்கிடையே, இரக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை வெளியிட்ட வியாழன் டுவிட்டர் செய்தியில், "இரக்கத்திற்குச் சாட்சியாக விளங்கும் நற்செய்தியில் காணப்படும் எண்ணங்களை புரிந்துகொள்ள இறைவன் நமக்கு உதவுவாராக" என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2018, 10:29
அனைத்தையும் படிக்கவும் >