தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி  (Vatican Media)

கைம்பெண்ணின் தாராள மனம் – திருத்தந்தையின் மறையுரை

உலகில் நிலவும் வறுமை, பட்டினி ஆகிய தீமைகளைக் களைய, நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துவாழும் தாராள மனம் பெரிதும் உதவும் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் தாராள மனம் நம்மை மேன்மையடையச் செய்யும் என்பதையும், நுகர்வோர் கலாச்சாரம், தாராள மனதிற்கு எதிரியாக அமைகிறது என்பதையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும், இத்திங்கள் காலை, தன் பொதுவான திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, கைம்பெண் அளித்த காணிக்கையைப் பற்றிக் கூறும் இன்றைய நற்செய்தியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

நற்செய்தியின் பல பகுதிகளில் செல்வந்தர்களையும் வறியோரையும் ஒப்புமைப்படுத்தி இயேசு பேசியுள்ளதை, சில எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நற்செய்தியில், மீண்டும் ஒருமுறை, அந்த ஒப்புமையை மீண்டும் நம் நினைவில் பதிக்கிறார் என்று கூறினார்.

இந்த ஒப்புமைகளில், பொதுவாக, செல்வந்தர்களின் சுயநலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இயேசு, கோவிலுக்குச் சென்று காணிக்கை வழங்கிய செல்வர்களை நல்ல முறையில் வெளிச்சமிட்டு காட்டினாலும், அவர்கள் அனைவரின் காணிக்கைகளைவிட, கைம்பெண்ணின் காணிக்கையை மிக உயர்வாகக் கருதினார் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

உலகில் நிலவும் வறுமை, பட்டினி ஆகிய தீமைகளைக் களைய, நமது தாராள மனம் பெரிதும் உதவும் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்வதே, உலகின் வறுமையைத் தீர்க்க முடியும் என்று கூறினார்.

தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் சென்ற வேளைகளில், தான் செலவு செய்த தொகையில், பத்து விழுக்காட்டை, வறியோருக்கு வழங்கிவந்தார் என்ற எடுத்துக்காட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

இன்றைய விளம்பர உலகம் வளர்க்கும் நுகர்வோர் கலாச்சாரத்தில் சிக்கிக்கொண்டால், பொருள்களை மேலும், மேலும் வாங்கி, சேர்த்துவைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, இந்த பழக்கத்தை ஒழிப்பதற்கு, நாம் தாராள மனதுடன் பகிர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2018, 10:36
அனைத்தையும் படிக்கவும் >