தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி   (ANSA)

உலகுசார் எண்ணங்கள் கலந்துவிடும் கிறிஸ்தவ வாழ்வு

நாம் வாழும் இன்றைய உலகிலும், பாபிலோனைப்போல் தங்களையே உயர்வாக கருதிய பல அரசுகள் வீழ்ந்துள்ளன – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாபிலோன், மற்றும் எருசலேம் மாநகரங்களின் அழிவுகள் பற்றி இவ்வியாழன் திருப்பலியின் வாசகங்கள் கூறும் எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை, திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருவெளிப்பாடு நூலிலும், லூக்கா நற்செய்தியிலும், இரு நகரங்கள் அழிவுறுவதைக் கூறும் சொற்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

புகழ்பெற்ற பாபிலோன் நகரம், தன்னிறைவு, அதிகாரம், சிற்றின்பங்கள் என்ற வலைகளில் வீழ்ந்தால், அழிவுற்றது என்றும், எருசலேம் நகரம், புனிதமானது என்று கருதப்பட்டாலும், அந்நகரில் வளர்ந்திருந்த உலகுசார் எண்ணங்கள் அதனை அழித்தது என்றும், திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவ வாழ்விலும், உலகுசார் எண்ணங்கள் கலந்துவிடும் ஆபத்து உள்ளது என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீரும், எண்ணெயும் ஒருபோதும் கலக்கமுடியாது என்பதுபோல், கிறிஸ்தவ வாழ்விலும், உலகு சார்ந்த எண்ணங்கள் கலக்கமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

நாம் வாழும் இன்றைய உலகிலும், பாபிலோனைப்போல் தங்களையே உயர்வாக கருதிய பல அரசுகள் வீழ்ந்துள்ளன என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அழிவுகளின் நடுவிலும், எளிய மனம் கொண்டோர், இறுதியில் வாழ்வர் என்பதையும், சிறப்பாக எடுத்துரைத்தார்.

தன் மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்த டுவிட்டர் செய்தியில், "வாழ்வின் கொடுமைகளைச் சந்திக்கும்போது, நாம் தொடுவானத்தைக் காண்பதற்கு அழைக்கப்படுகிறோம், ஏனெனில், நம்மைக் காக்க வரும் ஆண்டவரால் நாம் மீட்படைந்துள்ளோம்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2018, 15:13
அனைத்தையும் படிக்கவும் >