தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி - 301118 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி - 301118  (Vatican Media)

கிறிஸ்துவை அறிவிப்பது, வர்த்தக விளம்பரம் போன்றதல்ல

திருத்தூதர் அந்திரேயாவைப் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ சபையுடன் நெருக்கமாக இருக்க கத்தோலிக்கருக்கு அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தனது பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் கான்ஸ்தாந்திநோபிள் கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபையுடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, அச்சபைக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30, இவ்வெள்ளி காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தூதர் அந்திரேயாவின் விழா திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காகச் செபித்தார்.

திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, மற்றும் யோவான் போன்று, கிறிஸ்துவை அறிவித்து அவருக்குச் சான்று பகர்வதில் முன்னோக்கிச் செல்வதற்கு நமக்குத் தடையாய் இருக்கும் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி, நற்செய்தி அறிவிப்பு பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துவை அறிவிப்பது என்பது, வர்த்தக விளம்பரம் போன்றதல்ல, மாறாக, வாழ்வோடு ஒன்றிணைந்து செல்வதாகும் என்றும் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு பற்றி பவுலடிகளார் கூறுவதை மேற்கோள் காட்டி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை மீட்பதற்காக இறந்து உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது, சாதாரண செய்தி அல்ல, அது மாபெரும் நற்செய்தி என்றும் கூறினார்.

நற்செய்தியை அறிவிப்பது, மதம் மாற்றுவதோ, விளம்பரம் செய்வதோ அல்லது வர்த்தக விளம்பரமோ அல்ல என்றும் உரைத்த திருத்தந்தை, இறைவார்த்தையை அறிவிப்பது என்பது, அதற்கு நம்பத்தகுந்த சான்றுகளாய் வாழ்வதாகும் என்றும் கூறினார்.

இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது போல நாம் வாழ வேண்டும், நாம் போதிப்பது, நம் வாழ்வோடு இணங்கிச் செல்வதாய் இருக்க வேண்டும், இவ்வாறு வாழவில்லையெனில் நாம் பிறருக்கு இடறலாய் இருப்போர் எனவும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நற்செய்தி அறிவிப்பதிலும், சான்று பகர்வதிலும் முன்னோக்கிச் செல்வதற்கு, திருத்தூதர்கள் பேதுரு மற்றும் அந்திரேயா போன்று, எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்று கூறியுள்ளார். 

30 November 2018, 15:12
அனைத்தையும் படிக்கவும் >