சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியில்... சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியில்...  (Vatican Media)

அமைதியுடன் வளர்ந்துவரும் திருஅவை - திருத்தந்தை

தாங்கள் செய்வதனைத்தையும், எக்காளம் ஒலித்து, பறைசாற்றும் பரிசேயர்களுக்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்துவின் மணப்பெண்ணான திருஅவை, அமைதியான முறையில் தன் பணிகளை ஆற்றி வருகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவை, கண்ணைக்கவரும் காட்சிகளைக் காட்டாமல், அமைதியில் வளர்கிறது என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையின் மையப்பொருளாக்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது" என்று இன்றைய நற்செய்தியில் (லூக்கா 17:20-25) இயேசு கூறிய சொற்களை மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருப்பலியின் வழியாகவும், நற்பணிகள் வழியாகவும் வளர்ந்து வரும் திருஅவை, ஊடகங்களில் செய்திகளாக வெளிவருவதில்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் செய்வதனைத்தையும், எக்காளம் ஒலித்து, பறைசாற்றிய பரிசேயர்களுக்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்துவின் மணப்பெண்ணான திருஅவை, அமைதியான முறையில் தன் பணிகளை ஆற்றி வருகிறார் என்று கூறினார்.

சாட்சிய வாழ்வு, செபம், ஆன்மீக வாழ்வினால் ஈர்த்தல் என்ற வழிகளில் திருஅவை வளர்ந்து வருகிறது என்று கூறிய திருத்தந்தை, தவறான வழிகளில் மக்களை ஈர்க்கும் சோதனைகளிலிருந்து இறைவன் தன் திருஅவையை தொடர்ந்து காத்தருள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

மக்களை ஈர்க்கும் செயல்களை ஆற்றும்படி, சாத்தான் இயேசுவை சோதித்தபோது, அந்தச் சோதனையை விரட்டியடித்த இயேசு, துன்பங்கள், சிலுவை மரணம், என்ற கடினமான வழிகளைத் தேர்ந்தெடுத்தார் என்று தன் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கடினமான வழியில் நடக்க, இன்றும், பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 14:28
அனைத்தையும் படிக்கவும் >