தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

உலகப்போக்கில் நம்மை வீழ்த்தும் படித்த, பகட்டான சாத்தான்கள்

நம் உள்ளத்தில் நுழையும் தீய ஆவி, தனியே வருவதில்லை, மாறாக, உலகம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் உடன் அழைத்து வரும் – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படித்த, பகட்டான சாத்தான்கள், நம்மை, உலகப்போக்கில் அமிழ்த்திவிடும் ஆபத்து உள்ளது என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் விடுத்தார்.

ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி, பல இடங்களில் அலைந்து திரிந்து, பின்னர், மீண்டும், தான் விட்டுச் சென்ற இல்லத்திற்கே திரும்பும் என்று, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

உள்ளத்தை ஆக்ரமிக்கும் தீய ஆவி

தீய ஆவி, ஒருவருடைய உள்ளத்தை ஆக்ரமித்தால், அங்கு பெரும் போராட்டம் நிகழ்கிறது என்றும், சில வேளைகளில் இந்தப் போராட்டம் உடலளவிலும் வெளிப்படுகிறது என்றும், தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் போராட்டத்தைத் தீர்த்து வைக்க, இயேசு பலமுறை முன்வந்தார் என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் தோற்றுப்போகும் தீய ஆவி, வேறுவழிகளில், மீண்டும் நம் உள்ளங்களில் நுழைவதற்கு, தந்திரங்களை மேற்கொள்கின்றது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தீய ஆவி, நம்மை, எதிலும் ஆர்வம் கொள்ளாமல், மந்தமாக வாழச் செய்வதிலேயே குறியாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

பணிவுடன், நாகரீகமாக உள்ளத்தில் நுழையும் தீய ஆவி

இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் கூறப்பட்டுள்ள வரிகளில், திருத்தந்தை, தன் கூடுதல் கவனத்தைச் செலுத்தி பேசுகையில், சுத்தப்படுத்தப்பட்டு, அழகுடன் திகழும் இல்லத்தில் நுழைய விரும்பும் தீய ஆவி, மிகந்த பணிவுடன், மிக நாகரீகமாக நம் அனுமதியைக் கேட்டு உள்ளே நுழையும் தந்திரத்தை பயன்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இரண்டாம் முறை நம் உள்ளத்தில் நுழையும் தீய ஆவி, தனியே வருவதில்லை, மாறாக, உலகம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் உடன் அழைத்து வரும் என்றும், அவற்றை வரவேற்றால், நம் வாழ்வு, தீவிரமான அனைத்து நல்லுணர்வுகளையும் இழந்து மந்தமாகிவிடும் என்றும், திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2018, 15:29
அனைத்தையும் படிக்கவும் >