தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

இறைவனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் செபம்

அடம்பிடிக்கும் குழந்தைகள், தாங்கள் விரும்பியதை பெற்றோரிடமிருந்து பெறுவதைப்போல, விடாமுயற்சியும், இறைவனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் திறமையும் கொண்டு செபிக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் கேட்டதை உடனே பெற்றுத்தரும் மந்திரக்கோல் அல்ல, நமது செபம் என்றும், எனவே, நமது தொடர்ந்த முயற்சிகள் செபத்தில் தேவை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தனது உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நள்ளிரவில் வந்து சேர்ந்த நண்பருக்கு உணவு வழங்க, தன் அயலவரை அணுகிய ஒருவரைக் குறித்து, இயேசு கூறிய உவமையை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

நமது நண்பரான இறைவனிடம், நம் தேவைக்காக அணுகிச் செல்லும்போது, மனம் தளராமல் செபிக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரஸ் நகரில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை, தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

கண்டுபிடிக்க இயலாத ஒரு நோயால் இறந்துகொண்டிருந்த தன் மகளை, மருத்துவ மனையில் சேர்த்த ஒரு தொழிலாளி, இரவோடிரவாக லூஜான் (Luján) திருத்தலத்தில் உள்ள அன்னை மரியாவைத் தேடிச்சென்றார். இரவு நேரமானதால், திருத்தலக் கோவிலின் கதவுகள் மூடியிருந்தாலும், அவர், இரவு முழுவதும், அக்கதவுக்கு முன் அமர்ந்து, தன் மகளை உயிரோடு தரும்படி, அன்னையின் பரிந்துரையோடு மன்றாடினார். காலையில், அவர் மருத்துவமனைக்குத் திரும்பிய வேளையில், அவரது மகளுக்கு எந்தவித குறையுமில்லை என்ற செய்தியை, மருத்துவர்கள் கூறினர் என்ற உண்மை நிகழ்வை, திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

சிலவேளைகளில், அடம்பிடிக்கும் குழந்தைகள், தாங்கள் விரும்பியதை பெற்றோரிடமிருந்து பெறுவதை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய விடாமுயற்சியும், இறைவனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் திறமையும் கொண்டு செபிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:07
அனைத்தையும் படிக்கவும் >