சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

இயேசுவை, தினசரி வாழ்வில் இணைக்க மறுக்கும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவகளில் பலர், கிறிஸ்தவ மதத்தை, கோவில் வழிபாடுகளோடு நிறுத்திவிட்டு, கிறிஸ்துவின் தாக்கத்தை தங்கள் தினசரி வாழ்வில் இணைக்க மறுக்கின்றனர் - திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவை, தினசரி வாழ்வில் இணைத்துக்கொள்ளாமல், அவரை, கோவிலில் வைத்து பூட்டிவிடுவோரின் போலித்தனத்தைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, தன்னைப் புறக்கணிப்பவர் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் எச்சரிக்கையை மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களை வழங்கினார்.

இயேசுவின் படிப்பினைகளையும் செயல்களையும் கண்ட கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நாகும் நகர்கள், அவரை புறக்கணித்ததைக் குறிப்பிடும் இயேசு, அன்னிய நகர்களான தீர், சீதோன் நகர்களையும் ஒப்பிட்டு பேசுவதை, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பலர், கிறிஸ்தவ மதத்தை, ஒரு சமுதாயக் கடமையாக மட்டும் கருதி, அதை, கோவில் வழிபாடுகளோடு நிறுத்தி விடுகின்றனர் என்றும், கிறிஸ்துவின் தாக்கத்தை, தங்கள் தினசரி வாழ்வில் இணைக்க மறுக்கின்றனர் என்றும், தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் என்ற பெயரை பெருமையுடன் தாங்கிச் செல்லும் நாம், கிறிஸ்துவை நம் வாழ்வில் வரவேற்கத் தயங்குவது, போலித்தனமான கிறிஸ்தவம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

தன் மறையுரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஒரு வேண்டுதலை, அவர், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.

"நமது உள்ளங்களின் கதவுகளை தூய ஆவியார் திறக்குமாறு வேண்டுவோம், அவ்வண்ணம், இயேசு, தன் மீட்புச் செய்தியுடன் நம் உள்ளங்களில் நுழையக்கூடும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2018, 15:29
அனைத்தையும் படிக்கவும் >