சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி - 091018 சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி - 091018  (Vatican Media)

இறைவன் மீது ஆழ்ந்த அன்புகொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை

ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வும், ஆழ்நிலை தியானத்தையும், பணியையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வில் தவறுகள் புரியாமல் இருக்கவேண்டுமெனில், இறைவன் மீது ஆழ்ந்த அன்புகொண்டவர்களாக, அவரது தூண்டுதலால் செயலாற்றுபவர்களாக இருத்தல் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை தன் மறையுரையில் கூறினார்.

பெத்தானியாவில், இலாசரின் இல்லத்தில், இயேசு இருந்தவேளையில், இலாசரின் சகோதரி மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவரது வார்த்தைகளுக்கு செவிமடுத்துக்கொண்டிருந்ததையும், மற்றொரு சகோதரி, மார்த்தாவோ, இயேசுவுக்கு பணிவிடை புரிவதிலேயே கவனமாக இருந்ததையும் விளக்கும் நற்செய்தியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, நம் வாழ்வு எவ்வழியில் செல்லவேண்டும் என்பதை இயேசு நமக்கு காட்டுகிறார் என்று கூறினார்.

பல கிறிஸ்தவர்கள், கோவிலுக்குச் செல்கின்றனர், ஆனால், மற்ற நேரங்களில் அவர்கள் எப்போதும் ஏதாவது ஒரு விடயத்தில் முற்றிலும் ஈடுபட்டு, தங்கள் குழந்தைகளோடு விளையாடவும் நேரமின்றி இருக்கின்றனர், ஞாயிறன்று கோவிலுக்குச் செல்வதைத் தவிர, மற்ற நேரங்களில், இறைவனைக் காண்பதும் கூட நேரத்தை வீணடிக்கும் செயல் என்று அவர்கள் கருதுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையோர், இறைவார்த்தைக்கு செவிமடுக்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்வும், ஆழ்நிலை தியானத்தையும், பணியையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், என்று தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவின் மறையுண்மைகளை தியானிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பது குறித்தும், நாம் செய்யும் பணிகள், நம் விசுவாசத்திற்கு இயைந்ததாக உள்ளதா என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கூடியிருந்தோருக்கு நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2018, 16:38
அனைத்தையும் படிக்கவும் >