சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை  திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி   (Vatican Media)

இயேசுவின் அன்பும் சாத்தானின் போலித்தனமும்

இயேசு, உண்மையான அன்பைச் சொல்லித்தருகிறார் என்பதையும், சாத்தானோ, போலித்தனத்தைப் பயன்படுத்துகிறது என்பதையும், தன் மறையுரையின் மையப்பொருளாக, திருத்தந்தை கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருணையே உருவான இயேசுவை நம் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், மற்றவர்களைக் கண்டனம் செய்யாமல் வாழவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், இயேசு, உண்மையான அன்பைச் சொல்லித்தருகிறார் என்பதையும், சாத்தானோ, போலித்தனத்தை பயன்படுத்துகிறது என்பதையும், தன் மறையுரையின் மையப்பொருளாகக் கூறினார்.

திருத்தூதர் பவுலும், பாவியான பெண்ணும், வழிகாட்டிகள்

திருத்தூதர்களிடையே தான் கடையவன், திருத்தூதர் என்று அழைக்கப்பெறத் தகுதியற்றவன் என்று புனித பவுல் கூறும் வார்த்தைகளையும், மிகுதியாக அன்புகூர்ந்த பெண்ணின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறும் நற்செய்தியையும் மையப்படுத்தி, திருத்தந்தையின் மறையுரை அமைந்திருந்தது.

தன்னை ஒரு பாவி என்று கூற, திருத்தூதர் பவுல் தயங்கவில்லை என்றும், தான் ஊரறிந்த பாவி என்பதை உணர்ந்திருந்தாலும், இயேசுவை அணுகிவர அப்பெண் தயங்கவில்லை என்றும், தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்கள் இருவரின் வழயே, நாம் உண்மையான பணிவைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

போலித்தனமான கண்டனங்கள்

இயேசு ஓர் இறைவாக்கினர் எனில், தன்னைத் தொடுபவர் பாவி என்பதை உணர்த்திருப்பாரே என்று பரிசேயர் தன் மனதில் எண்ணியதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, இன்றைய காலத்திலும், யார் கோவிலுக்குள் வருவது, யார் வரக்கூடாது என்ற கண்டனக் குரல்கள் எழுவதை, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

பாவி என்று உணர்ந்து, கோவிலை நாடிவருவோரை, கருணையுடன் ஏற்பது ஒன்றே இயேசுவின் அடையாளம் என்றும், தங்களை நேர்மையாளர்கள் என்று கூறி மற்றவர்களை கண்டனம் செய்வது, சாத்தான் பயன்படுத்தும் போலித்தனத்தின் அடையாளம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

மறையுரையின் தொடர்ச்சியாக, டுவிட்டர் செய்தி

தன் மறையுரையின் தொடர்ச்சியாக, இவ்வியாழன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, கருணையை மையப்படுத்தி வெளிவந்துள்ளது.

"இயேசு, நம் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பு வழங்கி, தம் திருஅவையை தன் இரக்கத்தால் எப்போதும் பாதுகாத்து வருவாராக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 13:42
அனைத்தையும் படிக்கவும் >