சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில்  மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை   (Vatican Media)

செபமும், எளிமையும், மக்களோடு நெருக்கமும்

ஓர் ஆயரின் மூன்று பண்புகள் : செபத்தின் மனிதராகச் செயல்படுதல், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உணர்தல், மற்றும், மக்களுக்கு நெருக்கமாக இருத்தல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆயரும் செபத்தின் மனிதராகவும், தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை தாழ்ச்சியுடன் தெரிந்துள்ளவராகவும், மக்களோடு நெருக்கமாக இருப்பவராகவும் செயல்படவேண்டும் என, ஆயரின் மூன்று பண்புகளைக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த, பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்த பகுதி குறித்து, தன் சிந்தனைகளை வழங்கினார்.

இயேசு தம் 12 சீடர்களைத் தேர்ந்தெடுத்தது, அதாவது முதல் ஆயர்களை தேர்ந்தெடுத்தது குறித்த இந்த வாசகத்தையொட்டி திருத்தந்தை பகிர்ந்த சிந்தனைகள், தற்போது உரோம் நகரில் இடம்பெற்று வரும் புதிய ஆயர்களுக்கான பயிற்சி வகுப்புக்களையும் நினைவுறுத்துவதாக இருந்தது.

இயேசு இரவெல்லாம் செபத்தில் செலவிட்டார் எனக் கூறும் இன்றைய வாசகத்தின் முதல் பகுதி பற்றி குறிப்பிட்டு, ஓர் ஆயரின் முதல் பண்பாக, செபித்தல் என்பது இருக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகவும் இறைமக்களுக்காகவும் செபிக்கும் ஆயர், தனக்காக இயேசு செபிக்கிறார் என்பதை உணர்ந்திருக்கும்போது, துன்ப வேளைகளில் பெரும் ஆறுதலைப் பெறுகிறார் எனவும் தெரிவித்தார்.

இரண்டாவது பண்பு என்பது, தான் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதை உணர்ந்து, தாழ்ச்சியுடன் அதை ஏற்று, பாவியும் சிறியவனுமாகிய தன்னை இறைவன் தேர்ந்தெடுத்துள்ளது குறித்து அவருடன் உரையாடி, அதன்வழி பலத்தைப் பெறவேண்டும் என ஆயர்களை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இன்றைய வாசகத்தில் இயேசு, சீடர்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், அச்சீடர்களுடன் சமவெளிப் பகுதிக்கு கீழிறங்கி வந்து, மக்களை சந்தித்ததையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டியது அவர்களின் மூன்றாவது பண்பு என சுட்டிக்காட்டினார்.

உலகின் அனைத்து ஆயர்களுக்காகவும் செபிக்குமாறும் தன் மறையுரையின் இறுதியில் அழைப்பு ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2018, 15:05
அனைத்தையும் படிக்கவும் >