தேடுதல்

2018.09.06 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 2018.09.06 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பாவி என்ற உண்மை உணர்வே மீட்பளிக்கும் - திருத்தந்தை

இயேசு வழங்கும் மீட்பைப் பெறுவதற்கு, ஒருவர், தான் பாவி என்பதை உணர்ந்து, தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டுமே தவிர, அடுத்தவரைக் குற்றம் சாட்டக்கூடாது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு வழங்கும் மீட்பு, வெளிப்பூச்சாக பயன்படும் 'ஒப்பனை' அல்ல, மாறாக, உள்ளூர உருவாக்கும் மாற்றம் என்றும், இந்த மீட்பைப் பெறுவதற்கு, ஒருவர், தான் பாவி என்பதை உணர்ந்து, தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டுமே தவிர, அடுத்தவரைக் குற்றம் சாட்டக்கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இயேசுவின் சொற்களை நம்பி வலை வீசிய பேதுரு, மிகுதியான மீன்பிடிப்பைக் கண்டு, இயேசுவின் காலடியில் விழுந்து 'நான் ஒரு பாவி' என்று கூறிய நற்செய்தி (லூக்கா 5:1-11) நிகழ்வை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

இயேசுவின் சீடராவதற்கு, புனித பேதுரு எடுத்த முதலடி, தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த பணிவு என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் பணிவு, நம் அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

"நான் ஒரு மனிதன்" "நான் ஒரு இத்தாலியன்" என்று சொல்வதைப்போல், "நான் ஒரு பாவி" என்று மேலோட்டமாகக் கூறினால், அது, வெறும் வெளிவேடமாக, ஒப்பனையாக மாறிவிடும், அதற்கு மாறாக, 'நான் ஒரு பாவி' என்று கூறுவதை, ஒரு மாற்றத்தின் முதல் அடியாக உணரும்போது, அந்த சொற்கள் உள்ளார்ந்த மாற்றத்தைக் கொணரும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

நாம் ஒரு பாவி என்பதை உண்மையில் உணரவும், நமக்குள் முழுமையான மாற்றங்கள் தேவை என்பதை உணரவும், இறைவன் வரமருள மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2018, 14:54
அனைத்தையும் படிக்கவும் >