தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார்  (à © Vatican Media)

திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள்

இவ்வுலகின் போக்கினைப் பின்பற்றாமல், சிலுவையின் மடைமையை வாழ்வது கிறிஸ்தவர்களின் அழைப்பு என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவராக வாழ்வது எளிதல்ல, ஆனால், அது நம்மை மகிழ்வுடன் வாழவைக்கும் என்றும், 'இரக்கமும்', 'உள்ளார்ந்த அமைதியும்' விண்ணகத் தந்தை நமக்குக் காட்டும் வழிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தியிலிருந்து (லூக்கா 6:27-38) வழங்கப்பட்ட பகுதியை மையப்படுத்தி, கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் குறித்து, தன் மறையுரையில் விளக்கிக் கூறினார்.

"உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்று இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளவை, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நான்கு சவால்கள் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

நம்மை இகழ்ந்து பேசுவோருடன் விவாதங்களைத் துவக்கினால், அது 'போரில்'தான் முடியும் என்ற எச்சரிக்கையை, தன் மறையுரையில் விடுத்த திருத்தந்தை, அதற்கு மாற்றாக, 'இறைவனிடம் வேண்டுவது' கிறிஸ்தவர்கள் பின்பற்றும் தனிப்பட்ட வழி என்று எடுத்துரைத்தார்.

நம் பகைவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவது நமக்கு மகிழ்வைத் தருவதுபோல் தெரியலாம். ஆனால், பகைவரை அன்புகூர்வது ஒன்றே கிறிஸ்தவர்கள் பின்பற்றும் வழி என்று கூறியத் திருத்தந்தை, இவ்வழி, இவ்வுலகிற்கு மடைமையாகத் தெரியும் சிலுவை வழி என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:16
அனைத்தையும் படிக்கவும் >