தேடுதல்

2018-06-14 சாந்தா மார்த்தா இல்ல காலை திருப்பலி 2018-06-14 சாந்தா மார்த்தா இல்ல காலை திருப்பலி  (Vatican Media)

பிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்

ஒருவரை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்கும்போது, அவரின் மாண்புக்கான உரிமையை பறிப்பதோடு அவரின் வருங்காலத்தையும் கொலை செய்கிறோம். இயேசு கற்பிக்கும் ஒப்புரவு என்பது, மற்றவர்களின் மாண்பையும், நம் மாண்பையும் மதிப்பதை உள்ளடக்கியதாக உள்ளது, என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன்,14,2018. ஒருவரை நாம் அவமதிக்கும்போது, அவரின் வருங்காலத்தைக் கொலை செய்கிறோம் என, இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்கும்போது, அவரின் மாண்புக்கான உரிமையை பறிப்பதோடு அவரின் வருங்காலத்தையும் கொலை செய்கிறோம் என்றார்.

ஒப்புரவின் அவசியம் குறித்துப் பேசும் இவ்வியாழன் நற்செய்தி வாசகத்தை (மத்.5,20-26) மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசு கற்பிக்கும் ஒப்புரவு என்பது, மற்றவர்களின் மாண்பையும், நம் மாண்பையும் மதிப்பதை உள்ளடக்கியதாக உள்ளது என்றார். ஒருவரை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்கும்போது, எல்லாமே அதோடு முடிந்துவிடுவதில்லை, ஆனால், அங்கு கதவு ஒன்று திறக்கப்பட்டு, கொலைபுரிதலை நோக்கி இட்டுச்செல்கிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தன் சகோதரர், சகோதரிகளிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.                

பிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது என்பது, பெரும்பாலும் பொறாமையிலிருந்து பிறக்கிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, நாம், அவமதிப்பதிலிருந்து ஒப்புரவை நோக்கியும், பொறாமையிலிருந்து நட்பை நோக்கியும் அடியெடுத்து வைக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்றார்.

பிறர்மீது பொறாமை கொள்ளாமல் நாம் வாழும்போது அவர்களை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்குவதில்லை, மேலும், அவர்கள் வளரவும் உதவுகிறோம் என, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2018, 10:55
அனைத்தையும் படிக்கவும் >