ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்: பிறர் வாழ காணிக்கையாவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் (I. மலா 3:1-4 II. எபி 2:14-18 III. லூக் 2:22-40)
கடந்த 2011-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நக்கீரன் வார இதழில் ஜெய சீலி என்ற பெண் ஆசிரியைப் பற்றி அருமையான செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். எத்தனையோ ஆசிரியர்கள் மத்தியில் 'இவர்தான் ஆசிரியர்' என்று தனது அர்ப்பணம் நிறைந்த ஆசிரியர் பணியால் அனைவரையும் சொல்லவைத்திருப்பவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர். அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் இன்றும் இவரை கல்விக் கடவுளாகப் பார்க்கும் அளவிற்கு அவர்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர். இவர் பணி ஓய்வு பெற்று விருதுநகருக்குச் சென்ற பிறகும் கூட, இன்றுவரை வடக்கம்பட்டியில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்வும் இவர் இல்லாமல் நிகழ்வதில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் அம்மக்களின் மனங்களில் ஆழமாக வேறூன்றிப்போயுள்ளார். அங்கு அவர் பணியாற்றியபோது, அவ்வூரில் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பட்ட எல்லா குழந்தைகளையும் தடுத்து பள்ளிக்குக் கூட்டிவந்து கல்வி கற்பித்திருக்கிறார். ஒருநாள் ஆசிரியை ஜெயசீலி உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மக்கள் தங்களின் சொந்த வேலைகளை விட்டுவிட்டு குடும்பம் குடும்பமாக விருதுநகருக்குச் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்துள்ளனர். அப்போது அவரைச் சந்திக்க வந்தவர்களில் ஒருசிலர் அப்பத்திரிகையின் நிருபரிடம் பேசினர். அவர்களில் ஒருவரான அன்னலட்சுமி என்ற கல்லூரி மாணவி, "நான், எனது அம்மா, அப்பா எல்லாருமே ஜெயசீலி ஆசிரியையிடம்தான் படித்தோம். தன்னுடைய சொந்த பிள்ளைகளைப் போல எங்களைப் பார்த்துக்குவாங்க. பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகவாட்டத்துடன் வந்தால், அவர்களைக் கூப்பிட்டு, என்ன எது என்று விசாரித்து நம்பிக்கையாப் பேசுவாங்க. அந்தளவுக்கு எங்கமேல ரொம்பவும் அக்கறையா இருந்தாங்க" என்று கூறினார். அடுத்து மணியம் என்பவர் பேசியபோது, வடக்கப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் எங்க அப்பா என்னை சேர்க்க வந்தபோது, அங்கிருந்த தலைமையாசிரியர், ‘இவன் தேறமாட்டான், மக்குப் பையன்’ என்று சொல்லி என்னை சேர்க்க மறுத்துவிட்டார். ஆனால் அங்கிருந்த ஜெயசீலி ஆசிரியைதான், ‘இந்தப் பையனை நல்ல மாணவனாகக் கொண்டுவர வேண்டியது என் பொறுப்பு’ என்று எனக்கு பொறுப்பேற்றுக்கொண்டு என்னைப் பள்ளியில் சேர்க்க வைத்தார். இன்று நான் சென்னை ஆவடியிலுள்ள 'போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி' நிறுவனத்தில் தொழிநுட்ப அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றேன்” என்று சான்று பகிர்ந்தார். அடுத்து செய்யது முகமது என்பவர், “குடும்ப வறுமையால் ஆடுமேய்க்கச் சென்ற என்னை, பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு தனது சொந்த பணத்திலிருந்து 10 ரூபாய் கொடுத்து (அப்போது இதன் மதிப்பு அதிகம்) விண்ணப்பப் படிவம் வாங்கி தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கவைத்து என் வாழ்க்கையை மாற்றினார். அதன் பின்னர் நான் சென்னை மற்றும் புனேயில் படித்தேன். இப்போது புதிய இராணுவ டேங்க், ஏவுகணைகளை ஆராட்சி செய்வது, கட்டமைப்பது, அவற்றை போர்முனையில் எப்படிப் பயன்படுத்துவது என்று பயிற்சி கொடுக்கிறேன். எனது அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காக இந்திய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கையால் அண்மையில் விருது பெற்றேன்” என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார். இறுதியாக, உணவகம் ஒன்றை நடத்தி வரும் இராமசாமி என்பவர், “என்னை சிறுவயதில் தன் வீட்டில் உணவு கொடுத்து படிக்க வைத்தவர் ஆசிரியை ஜெயசீலி” என்று புளங்காகிதமடைந்தார். இப்படியாக இவரிடம் படித்த இன்னும் எத்தனையோ பேர் மேலாளராக, கல்லூரி விரிவுரையாளராக, காவல்துறை ஆய்வாளராகப் பல்வேறு துறைகளில் பணியாற்றிக்கொண்டு வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் உதவிகேட்டு வரும்போது இரத்த உறவுகளே நம்மைக் கைவிட்டுச் செல்லும்போது, தனது அர்ப்பணம் நிறைத்த ஆசிரியப் பணியால் ஓர் ஊரையே தனது உறவாக்கிக்கொண்டுள்ளார் ஆசிரியை ஜெயசீலி.
இன்று அன்னையாம் திருஅவை எருசலேம் கோவிலில் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய வாசகங்கள் மூன்றும் பிறரின் நல்வாழ்விற்காக நம்மையே நாம் காணிக்கையாக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை உள்ளங்களில் பதிக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இருவர் குறிப்பிடப்படுகின்றனர். முதலாமவர் திருமுழுக்கு யோவான், இரண்டாமவர் நமதாண்வடவர் இயேசு. 'இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்' என்பது திருமுழுக்கு யோவானையும், 'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்' என்பது ஆண்டவர் இயேசுவையும் குறிக்கின்றது. மேலும் ‘அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்?’ என்ற வார்த்தை தவறிழைத்தவர்கள், பாவம் புரிந்தவர்கள், தமது தீய செயல்களால் சமூகத்தைக் கறைபடுத்தியவர்கள், தப்பெண்ணம் கொண்டவர்கள் ஆகியோர் இயேசு என்னும் தலைவரின் வருகையை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பர் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அடுத்து, 'அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார்' என்ற வார்த்தைகள் அந்த உன்னதத் தலைவரின் உயர் பண்புகளாக அமைகின்றன. மேலும் திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து மக்களிடம் கூறும்போது, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால், என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” (காண்க. லூக் 16-17) என்று அவரது உயர் பண்புகளை எடுத்துரைக்கின்றார்.
மேலும் ‘அவர் லேவியரின் புதல்வரைத் தூய்மையாக்கி கடவுளுக்கு உகந்த காணிக்கையை கொண்டுவரும் அளவுக்கு மாற்றுவார்’ என்றும் முதல் வாசகம் மொழிகிறது. இங்கே மக்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, குருத்துவப் பணிக்குத் தங்களை முழுதும் அர்ப்பணித்துக்கொண்ட லேவியரிடத்தில் அவர் மாற்றத்தைக் கொணர்வார் என்பது புலனாகிறது.. இந்த மாற்றம் என்பது இந்த மனுகுலத்திற்கு இயேசு தன்னையே முழுமையாக வழங்குவதன் வழியாக, அதாவது, காணிக்கையாக்குவதன் வழியாக நிகழ்கிறது. இதனைத்தான், "கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் உரைக்கின்றார் புனித பவுலடியார். நமதாண்டவர் இயேசு, தூய்மைமிகு தியாகத்தையும் பாவமற்ற குருத்துவத்தையும் கொண்டவராக இருப்பதால் அவர் வழியாகத்தான் நம் வழிபாடு கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்க முடியும். ஆனால் நாம் கிறிஸ்துவின் வழியாக கடவுளிடம் வரும்போது, மக்களாகவும் (பொதுக் குருத்துவம்) அருள்பணியாளர்களாகவும் (பணிக் குருத்துவம்) உயிருள்ள பலிகளாக, அவருக்கு நம்மால் முடிந்ததைக் காணிக்கையாக்க வேண்டும். இங்கே, ‘காணிக்கையாக்குதல்’ என்பது இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணிப்பது என்று பொருளாகிறது. சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்புபவர்கள் அனைவரும் ஏதோவொரு வழியில் தங்களை முற்றிலுமாக அர்ப்பணிக்க (காணிக்கையாக்க) வேண்டும். இந்த அர்ப்பணம் அல்லது காணிக்கையாகுதல் இல்லமால் சமுதாய மாற்றம் சாத்தியமாகாது என்பதைத்தான் இயேசுவின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தியில், 'மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது' என்று பதிவு செய்கின்றார் லூக்கா நற்செய்தியாளர். இயேசுவின் அர்ப்பணிப்புச் சடங்கு என்பது, எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பெற்ற பாஸ்கா இரவில், எகிப்தின் தலைப்பேறுகள் கொல்லப்பட்டதையும், அதேவேளையில், இஸ்ரயேலின் தலைப்பேறுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டதையும் நிரந்தரமாக நினைவுகூரும் ஒரு சடங்காக அமைந்திருந்தது (காண்க விப 13:11-16). ஆக, ‘தலைப்பேறு மகனை அர்ப்பணித்தல்’ என்பது கடவுள் தரும் விடுதலையை (மீட்பை) நினைவூட்டும் ஒரு சடங்காவே கொண்டாடப்பட்டது. இதன் பின்னணியில் பாஸ்கா விருந்தைக் கொண்டாடும் இயேசு, இவ்வுலகின் அனைத்து மக்களுக்கும் மீட்பளிக்கும் மெசியாவாக தான் பலியாக இருப்பதை வெளிப்படுத்துகின்றார்.
சிமியோன் வெளிப்படுத்தும் பாடலில், இத்தனை நாளாகக் காத்திருந்து தான் கண்டுகொண்ட இந்த மெசியாவை, 'பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி' என்று குறிப்பிடுகின்றார். இதன் வழியாக, இயேசு என்னும் ஒளியாகிய மெசியா தரும் மீட்பானது, சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும் கடந்து அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை எடுத்துக்காட்டுகிறார் சிமியோன். காரணம், கடவுள் தரும் மீட்பு, தங்களுக்கு மட்டுமே உரியது என்று எண்ணி இறுமாப்பும், ஆணவமும், கர்வமும் கொண்டிருந்தனர் யூதர்கள். ஆகவே, அவர்கள் அந்தத் தவறான மனப்பான்மைகளிலிருந்து விடுபட்டு, கடவுள் தரும் மீட்பு 'அனைவருக்குமானது' என்பதை ஏற்க முன்வர வேண்டும் என்பதைத்தான் சிமியோனின் இந்த வார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. இறுதியாக, சிமியோன் அவர்களுக்கு ஆசி வழங்கி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்று கூறும் வார்த்தைகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. சிமியோனின் இந்த வார்த்தைகளில் மூன்று முக்கியமான உண்மைகள் வெளிப்படுகின்றன.
01. இயேசு பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார்.
முதலாவதாக, இயேசு வழங்கவிருக்கும் அனைவருக்குமான இந்த மீட்புக்காக அவர் அதிகம் விலைகொடுக்க வேண்டியிருக்கும். நாம் மேலே கூறியதுபோன்று, சமுதாயத்தில் மாற்றம் நிகழவேண்டுமெனில், சில வேளைகளில் உயிர்த்தியாகமும் அவசியமானதாக அமைகின்றது. உலக மக்கள் அனைவருக்கும் மீட்பைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு எழுச்சிக்கொண்டு எழுந்தபோது, அது பலருக்கு, குறிப்பாக, பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் ஆகியோருக்கு வீழ்ச்சியைக் கொடுத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் அடிமைத்தளையில் உழன்ற கறுப்பின மக்களுக்கு விடுதலையளிக்க வேண்டும் என்று ஆபிரகாம் லிங்கன் எழுச்சிக்கொண்டு எழுந்தபோது, அவர்களை அடிமைப்படுத்தி சுகம் கண்டவர்கள் பெரும் வீழ்ச்சியடைய நேர்ந்தது. இதனால் அங்கு உள்நாட்டுக் கலவரமே வெடித்தது. அவரது உயிரும் பறிக்கப்பட்டது.
02. இயேசு எதிர்க்கப்படும் அடையாளமாக இருப்பார்.
இரண்டாவதாக, புரட்சியாளர்களால் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். மாறாக, அவர்கள் ஒன்றுதிரண்டு வந்து அவரை எதிர்ப்பர். மேலும் அவர்கள் எல்லா வழிகளிலும் அப்புரட்சியாளருக்கு இடையூறுகள் விளைவிப்பர். யூதச் சமுதாயத்தில் புறக்கணிப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வந்த ஏழை எளியவர்கள், பெண்கள், தொழுநோயாளர்கள், பார்வையற்றவர்கள், முடக்குவாதமுற்றவர்கள், வரிதண்டுவோர், பாவிகள் என அனைவரிடமும் இயேசு உரையாடினார், உறவாடினார் மற்றும் உணவருந்தி மகிழ்ந்தார். அத்துடன், மனிதத்தை மையப்படுத்தி ஓய்வுநாள் சட்டத்தை மீறியது, பொருளற்ற வழிபாடுகளைக் கண்டித்தது, பல்வேறு அருளடையாளங்கள் வழியாக நலப்பணிகள் ஆற்றியது, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் வெளிவேடங்களைக் கண்டித்தது, குறிப்பாக, எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியது யாவுமே அவரை எதிர்க்கப்படும் அடையாளமாக மாற்றியது.
03. பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்
மூன்றாவதாக, பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகவும், பலரால் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் மாறிய இயேசுவின்மீது, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்பட்டன. அதாவது, இயேசுவைக் கொன்றொழிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இது. இயேசுவை 8 முறை கொல்ல முயன்றதாக நான்கு நற்செய்திகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இறுதியில் அவர்களின் கொடிய திட்டம் நிறைவேறியது. இயேசுவைக் கொன்றொழிக்க விரும்பிய யூதர்களுடன் பிலாத்தும் மறைமுகமாக ஒன்றுசேர்ந்துகொள்கின்றான். காரணம், அவனும் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினான். அதனால்தான் இயேசுவுக்கு நிகழ்ந்தது ஓர் அரசியல் சாவு என்கின்றோம். இந்த வழியில்தான் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், மகாத்மா காந்தி ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆக, மறைவான எண்ணங்கள் என்பவை, வஞ்சித்தல், சூழ்ச்சி செய்தல், எதிர்த்தல், சதித் திட்டம் தீட்டுதல், மறுதலித்தல், காட்டிக்கொடுத்தல், கொலைசெய்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடங்கியுள்ளன.
04. உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்
இறுதியாக, 'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்' என்று குழந்தையின் தாயான அன்னை மரியாவிடம் உரைக்கின்றார் சிமியோன். கடவுளின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாவும் இயேசுவுடன் இணைந்து பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்பதன் பொருள்தான் இது. அன்னை மரியாவின் உள்ளத்தை ஏழு வாள்கள் ஊடுருவிப் பாய்ந்ததாகப் பார்க்கின்றோம். ஆனால் இங்கே சிமியோன் ஒரு வாள் என்று குறிப்பிடுகிறார். இருப்பினும், இந்தத் துயரத்தின் வழியாக அன்னை மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் உடன்பங்காளர் ஆகின்றார். எனவேதான், யோசேப்பும் மரியாவும் காணாமல்போன சிறுவன் இயேசுவைத் தேடி அலைந்து எருசலேம் கோவிலில் கண்டுகொண்டபோது, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (வச. 49) என்று கூறுகிறார். அந்நேரமே, அன்னை மரியா துயரம் என்னும் வாள்கள் தனது உள்ளதை ஊடுருவிப்பாயும் என்பதை அறியத் தொடங்கிவிட்டார். இதன் காரணமாகவே, 'அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' (வச. 51) என்று லூக்கா குறிப்பிடுகின்றார். இயேசு தனது தூய்மைமிகு பாடுகள் மற்றும் மரணம் வழியாக, தந்தையின் நிலையான விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொண்டார். அதுபோலவே, அன்னை மரியாவும், தனது தூய்மைமிகு துயரங்கள் (பாடுகள்) வழியாக, மூவொரு கடவுளின் தாயாகி விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொண்டார். ஆகவே இவ்வுலகின் மீட்புக்காக இயேசுவுடன் இணைந்து அன்னை மரியாவும் தன்னையே காணிக்கையாக்கியது போன்று, நாமும் நம்மையே பிறரின் நல்வாழ்விற்காகக் காணிக்கையாக்குவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்