விவிலியத் தேடல்: திருப்பாடல் 65-3, இயற்கையைப் பேணுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், “வல்லமை ஆண்டவரின் இடைக்கச்சை!” என்ற தலைப்பில் 65-வது திருப்பாடலில் 5 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 9 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது அந்த வார்த்தைகளை இறை அமைதியில் வாசிப்போம். மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! (வச. 9-13). இந்தத் திருப்பாடலை நாம் மூன்று பகுதிகளாக சிந்தித்து வருகிறோம். முதல் பகுதியில் எருசலேம் திருநகரை சீயோன் மலைக்கு ஒப்பிட்டு அங்கு உறைந்திருக்கும் கடவுளிடம் செலுத்தப்படும் பொருத்தனைகள், எழுப்பப்படும் இறைவேண்டுதல்கள் குறித்துத் தியானித்தோம். இரண்டாம் பகுதியில், கடவுள் அவர்தம் மக்களுக்கு அருளும் மீட்பு மற்றும் வல்ல செயல்கள் குறித்துத் தியானித்தோம். இம்மூன்றாம் பகுதியில், கடவுளின் முதல் படைப்பான இயற்கையைக் குறித்துத் தியானிப்போம். காரணம், இயற்கைமீது கடவுள் கொண்டிருக்கும் உயர் ஆதிக்கம் குறித்து பாடி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இப்போது ஒரு கதையுடன் நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம்.
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட மன்னர் ஒருவர் வந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்த ஞானி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்டு, “குருவே, உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழ்ந்து வரும் நிலையில், நீங்கள் மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே! உங்களுக்கு இத்தகைய மகிழ்வின் வழியைக் கற்றுக் கொடுத்த குரு யார் என்று எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த ஞானி, "எனக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல குருக்கள் இருக்கின்றனர். அதில், இந்தப் பூமிதான் எனது முதல் குரு. இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன். தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன். எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன். பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்தத் தொடர்பற்ற நிலையை வானவெளி எனக்குப் படிப்பித்தது. ஒரே சூரியன் என்றாலும், அது எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, ஒரே ஆன்மா பல்வேறு உடல்களைக் கொண்டிருப்பதை அறிந்தேன். வேடனின் வலையில் சிக்கிய தனது குஞ்சுகளைக் கண்டதும், அதில் தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன். உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்குக் காரணம் என்பதை அறிந்தேன். தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவர் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்” என்று, அடுக்கிக் கொண்டே போனார். அப்போது கடவுள் தான் படைத்த இந்த இயற்கை வழியாக மனிதருக்குக் கற்பிக்கும் எவ்வளவு பெரிய ஆசிரியராகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்தார் அம்மன்னர். உடனே அந்த ஞானியிடம், “குருவே, கடவுளை எப்பொழுதும் மகிமைப்படுத்தவும், இந்த இயற்கையைப் பேணவும் இன்று நான் உங்களிடமிருந்து அரியதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்” என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகளில் கடவுளின் படைப்பாற்றல் திறனையும், அவரது படைப்பில் நிகழும் பல்வேறு வியப்புக்குரிய செயல்களையும் நினைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தாவீது. மேலும் "உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?" (திபா 8:3-4) என்றும், "ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது" (திபா 104:24) என்றும் கடவுள் தான் படைத்த இயற்கையின்மீது நிகழ்த்தும் விந்தை குறித்து, தாவீது வியந்து போற்றியிருப்பதையும் பார்க்கின்றோம்.
இப்போது இயற்கை நிகழ்த்தும் விந்தையைக் குறித்த சில செய்திகளைப் பார்ப்போம். இது நமது கடவுளின் படைப்புத்திறனை கண்டு இன்னும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். நமீபியாவில் நமீப் என்ற பெயரில் பாலைவனம் ஒன்று உள்ளது. இந்தப் பாலைவனம் எப்போதும் மூடுபனியால் சூழ்ந்தே கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் வீசும் காற்றிலிருந்து ஈரப்பதம் உருவாகி இப்படி மூடுபனி ஏற்படுகிறதாம். உலகில் அமைதியான எரிமலைகளும்கூட உண்டு. இவை பெரிய சத்தத்துடன் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தாது. உள்ளே பொங்கும் காலங்களில் அமைதியாக எரிமலைக் குழம்பை வழியவிட்டுக்கொண்டேயிருக்கும். ஹவாய் பகுதியிலிருக்கும் ‘ஷீல்டு’ என்ற எரிமலை இந்த மாதிரியைச் சேர்ந்ததுதான். ஒர் ஆண்டு முழுவதும் அவ்வப்போது வீசும் மின்னல், பூமியின் மேல் 10 மில்லியன் டன் நைட்ரஜனைத் தள்ளிவிடுகிறது. மாலையில் மறையும் சூரியன் பூமியில் நமக்கு சிவப்பாகத் தெரிகிறது அல்லவா? அண்டார்டிகாவில் அது பச்சையாகத் தெரியும். நாம் விமானத்தில் பயணம் செய்யும்போது வானவில்லை முழு வட்டமாகப் பார்க்க முடியும். நிலத்தைவிட நீர் மெதுவாகவே வெப்பமடையும். குளிர்வதும் அப்படித்தான். அதனாலேயே கோடைக் காலத்தில் நீர், நிலத்தை விடக் குளிர்ச்சியாக இருக்கிறது. குளிர்காலத்தில் நிலத்தைவிட நீர் வெப்பமாக இருக்கிறது. அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் அதிவேகத்தில் அதிகமான நீரை கலக்கிறது. அதனால், அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூறு மைல்வரை இருக்கும் நீர், நல்ல நீர்தானாம். உப்பு நீரல்ல. அதைக் குடிக்கவும் செய்யலாம். உலர்ந்த காற்றைவிட ஈரப்பதமுள்ள காற்றில்தான் வெப்பம் அதிக நேரம் நிலைத்திருக்கும். இதனால்தான் இரவுகளில் வெப்பநாடுகள் மிதமான வெப்பமுடன் இருக்கின்றன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் குளிராகவும் இருக்கின்றன. அதிர்ச்சியைத் தாங்குவதில் இரும்புக்கு இணையானது மூங்கில். ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற பிறகு, அந்தப் பகுதியின் நடுவில் மூங்கில் புதர்கள் மட்டும் அப்படியே இருந்தன. வேறு எந்தப் புல் பூண்டும் இருக்கவில்லை. பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் தீவில் உள்ள ‘மவுன்ட் அவாய்’ என்ற இடத்தில் உலகிலேயே எப்போதும் மழை பெய்துகொண்டேயிருக்கும். இங்கு ஆண்டின் ஆறு நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருக்குமாம். ஜெர்மனியில் ‘ஹெம்லஸ் டார்பர்’ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி மற்ற ஏரிகளிலிருந்து மாறுபட்டது. இதன் மேல்புறத்தில் உள்ள நீர் தேனாக இனிக்குமாம். உள்பக்கம் உள்ள நீரோ வேம்பாகக் கசக்குமாம்.
புல் என்றாலே பச்சை வண்ணத்தில் இருக்கும் அல்லவா? அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் புல்லின் நிறம் பச்சையும் நீலமும் கலந்ததாக இருக்கும். மண் நீல நிறத்தில் இருப்பதால் புல்லும் நீல நிறமாகவே வளர்கிறது. நார்வே நாட்டில் ஏப்ரல் மாத கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம்வரை முழு இருளே கிடையாது. சூரியன் மறையும் நேரத்தில் காணப்படும் மங்கலான வெளிச்சம் போல எப்போதும் இருக்கும்! நார்வேயின் வடக்குப் பகுதிகளில் கோடையில் இரண்டு மாத காலத்துக்கு சூரியன் முழுவதும் மறைவதே கிடையாது. காற்றுதான் சூறாவளியாக வீசும் இல்லையா? ஆனால் நெருப்புகூட சூறாவளி போல சீறியிருக்கிறது தெரியுமா? பிரான்ஸில் ‘மார்ட்டினிக்யூ’ எனும் தீவு உள்ளது. இந்தத் தீவில் பீலி என்னும் எரிமலை 1902-ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அப்போது அந்த மலையில் இருந்து நெருப்புக் கோளம் பயங்கரமாக சூறாவளி காற்று போல சீறிப் பாய்ந்ததாம். அதன் காரணமாக, புனித பியரி என்ற நகரமே எரிந்து பொசுங்கிபோனது (நன்றி தி இந்து).
இவ்வளவு அதிசயங்களை நிகழ்த்தும் கடவுளின் படைப்பை பேணிக்காக்க வேண்டிய தலையாய பொறுப்பும் நமக்கு இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். “புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” (குறள் - 298) என்ற குறளில், ‘புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்’ என்கின்றார் வள்ளுவர். இங்கே புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமானது என்பதையும் உணர்ந்துகொள்வோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தாலும் அதை முறையாகப் பின்பற்றுவது சமூகத்தின் கடமை ஆகும். 1976-ஆம் ஆண்டு, 42-வது சட்டதிருத்தத்தின்படி மனிதக் கடமைகளில் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது. 'இந்தியக் குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாயக் கடமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய இந்த ஐந்தையும் சுற்றிதான் சுற்றுச் சூழல் செயல்படுகிறது. ஆனால் இவை ஐந்தும் இன்று அதிகளவில் மனிதரால் மாசுபடுத்தப்பட்டுள்ளது. காலங்காலமாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வந்த மனிதர் இன்று அதனை விட்டு வெகுதொலைவிற்கு வந்துவிட்டனர். எப்போது நாம் இயற்கையைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோமோ, அப்போதே நாம் மரணத்தின் வாசலுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம் என்பதை நாம் அவசியம் உணர வேண்டும். ஆகவே, கடவுளின் உன்னதமான படைப்பாகத் திகழும் இந்த இயற்கையைப் பேணவேண்டியது நமது தலையாயக் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்