தடம் தந்த தகைமை - வானத்துப் பறவைகளை நோக்குங்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! (மத் 6:26) எனக் கேட்டார் இயேசு.
சின்னஞ்சிறு பறவைகளைக் கூர்ந்துப் பார்க்கின்றபோது அற்புதமான ஓர் உண்மையை உணரலாம். அவை மெல்ல மெல்ல அன்ன நடை இடுவதில்லை, பதுங்கிப் பதுங்கிப் பாய்வதில்லை. சீச், சீச் எனக் குரலெழுப்பி ஏவுகணை போல மின்னலாய் தாவித் தாவி விளையாடும், இரை தேடும், வான் கிழித்துப் பறக்கும். அவற்றுக்கு வருத்தமோ வைராக்கியமோ ஏதுமில்லை. மழையோ, பனியோ, வெயிலோ கிடைத்த உணவைக் கொத்தி எடுத்து இறக்கையடித்துப் பறக்கும். அடுத்த வேளை என்றோ நாளை என்றோ கவலைப்படத் தெரியாது.
எதையும் எதிர்பார்த்து வாழாத வானப் பறவைகளுக்குத் தேவையான உணவை ஊட்டி நிறைவு காணும் கடவுள் நம்மைக் கண்டுகொள்ளாமல் விடுவாரா? அவர் கடின நெஞ்சினர் அல்லவே! ஒவ்வொரு பறவையோடும் உறவு கொண்டாடும் இறைவன் தன் பாச மக்களைப் புறக்கணிப்பாரோ! பட்டினி போட்டுப் பார்த்து இரசிப்பாரோ! வாழும் கலைதனைப் பாடும் பறவைகள் கற்பிக்கின்றன. அதைக் கற்றுப் புரிய கொஞ்சம் நேரம்
ஒதுக்கினால் போதும். பாடப் புத்தகங்கள் கற்றுத் தராததைப் பறவைகள் புகட்டும்.
இறைவா! சிறகற்ற பறவை நான். நினைவுகளே என் சிறகுகள். பறவையாகவே என்னைப் பராமரித்தருளும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்