தேடுதல்

மன்னித்து கைத்தூக்கிவிட கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார் மன்னித்து கைத்தூக்கிவிட கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார்  (©paul - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - மனமார மன்னிக்காவிட்டால்

கடவுள் நமது தவறுகளை மன்னித்து ஏற்கிறாரெனில் அதே இயல்பை நம் சகோதர சகோதரிகளுக்கு ஈவதுதான் நாம் பெற்ற மன்னிப்புக்குச் செலுத்தும் மரியாதை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் (மத் 18:35) என்றார் இயேசு.

ஒருவரை மன்னித்தல் என்பது மேலோட்டமான செயல் அன்று. அது மனதார, மகிழ்வாக, மதிப்பாகச் செய்ய வேண்டிய மனிதாபிமானச் செயல். ஒப்புக்கு மன்னித்துவிட்டு ஓரங்கட்டுவதும், ஒருநாள் வரும் ஒரு கை பார்க்கலாம் என நினைப்பதும், நம்மையே நாம் மன்னியாததாகும். ஆயிரம் தவறுகளை செய்துவிட்டு, அறியாமல் ஒரு தவறு செய்தவரைப் பாடாய்ப் படுத்தும் பண்பாடு கொண்ட இச்சமூகத்தில் இயேசுவின் மனதார மன்னிக்கும் கூற்று ஒட்டுமொத்த மானுடப் பேணலின் நாற்று.

கடவுள் என்னை அன்பு செய்ய வேண்டும், மன்னிக்க வேண்டும், உதவ வேண்டும், உடனிருக்க வேண்டும், கேட்பதைத் தர வேண்டும் என்றெல்லாம் நாம் நினைப்பதுண்டு. நாம் விரும்புவதை அவர் தந்தாலும் அதை நமக்கென்று மட்டும் தக்க வைத்தால் அது சுயநலம். அவ்வாறே அவர் நமது தவறுகளை மன்னித்து ஏற்கிறாரெனில் அதே இயல்பை நம் சகோதர சகோதரிகளுக்கு ஈவதுதான் நாம் பெற்ற மன்னிப்புக்குச் செலுத்தும் மரியாதை. மனதார மன்னியாதவர்கள் மகிழ்வான எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

இறைவா! உம் அன்பை நான் மனம் நிறையப் பெற ஒரே வழி பிறரை மனதார மன்னிப்பதே. அதனைத் தயங்காமல் தொடர துணிவு தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 பிப்ரவரி 2025, 12:28