தேடுதல்

தொழுகைக் கூடத்தில் வாசிக்கும் இயேசு தொழுகைக் கூடத்தில் வாசிக்கும் இயேசு  

பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு : விடுதலை தரும் இயேசுவின் கொள்கை அறிக்கை!

நமது தனிப்பட்ட வாழ்வில் நமது கொள்கை அறிக்கைகள் எவை என்பதைக் குறித்து இப்போது சிந்திப்போம். மானுட விடுதலையை மையப்படுத்திய இயேசுவின் பணிவாழ்வு நமது மையமாக வேண்டும்.
பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு : விடுதலை தரும் இயேசுவின் கொள்கை அறிக்கை!

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் (I. நெகே 8: 2-4a, 5-6, 8-10; II. 1 கொரி 12: 12-30; III. லூக் 1: 1-4; 4: 14-21)

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். பொதுவாக, அரசியல் கட்சிகளும், பெருநிறுவனங்களும் தங்களின் நோக்கங்கள். இலட்சியங்கள், மற்றும் இலக்குகள் குறித்து ஓர் அறிக்கையாக வெளியிடும். இதனைத்தான் கொள்கை அறிக்கை (manifesto) என்கின்றோம். அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளுடன் இந்தக் கொள்கை அறிக்கை என்ற வார்தை மிகவும் பொருந்திப் போகின்றது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு அரசியல் கட்சியும்  தேர்தல் அறிக்கையை (election manifesto) வெளியிடுகின்றது. இந்தத் தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள், குறைந்தபட்ச செயல்திட்டங்கள், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிகள், கால அளவுகள் ஆகியவை அடங்கியிருக்கும். அதாவது, மக்கள் தங்களுக்கு ஓட்டளித்து ஆட்சியில் அமரவைத்தால் என்னென்ன நற்காரியங்களை எல்லாம் அவர்கள் செய்வார்கள் என்பதை இந்தத் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடுவார்கள். இவற்றைக் குறித்துத் தேர்தல் பரப்புரைகளின்போது மக்களுக்கு எடுத்துச்சொல்லி ஒட்டு கேட்பார்கள். ஆனால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை எல்லாம் அவர்கள் முழுமையாக நிறுவேற்றுவார்களா என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு நாம் இல்லையென்று கூறிவிடலாம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், தற்போது இந்தியாவை ஆளும் பிஜேபி கட்சியினர் முதல்முறை மோடியின் தலைமையில் தேர்தல் பரப்புரை செய்தபோது, தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த கவர்ச்சிக்கரமான பல்வேறு இலக்குகள் குறித்துப் பேசினார்கள். அவற்றில் முக்கியமான ஒன்றுதான், தாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் வெளிநாடுகளிலிருந்து அத்தனை கருப்புப் பணத்தையும் அப்படியே அலேக்காக மீட்டுக்  கொண்டுவந்து ஒவ்வொருவருடைய சேமிப்புக் கணக்கிலும் 15 இலட்சம் போடுவோம் என்பது. ஆனால் இன்றுவரை அவர்கள் அதைச் செய்யவே இல்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூ.15 லட்சம் கொடுப்போம்’ என்று பிரதமர் மோடி சொன்னாரே’ என்று, எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியபோது, ‘அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா’ (சும்மா சொன்னோம்) என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கூறி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், நம் நாட்டு அரசியல்வாதிகள் கடந்ததை எல்லாம் மறந்துவிட்டு புதுப்புது தேர்தல் அறிக்கையுடன் வருவார்கள். அதனால்தான் அவர்களின் தேர்தல் அறிக்கைகள் நம்பகத்தன்மையை இழந்து நிற்கின்றன. இந்நிலை உலகளவிலும் காணப்படுகிறது.

ஆனால் அதேவேளையில், நம்பகத்தன்மைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் இருக்கத்தான் செய்கின்றன. நெல்சன் மண்டேலா 1962-ஆம் ஆண்டு  சிறையில் அடைக்கப்பட்டார். 27 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியன்று, நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 71. உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் யாரும் கிடையாது. அதனைத் தொடர்ந்து, 1994-ஆம் ஆண்டு, மே மாதம் 10-ஆம் தேதி அந்நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அரசுத் தலைவராவார். அதன் பிறகு, 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) கொள்கை அறிக்கை வெளியீட்டு விழாவில் நெல்சன் மண்டேலா உரையாற்றினார். அதில், சிறந்ததொரு தென்னாப்பிரிக்காவை உருவாக்குதல், அதற்கொரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துதல், மக்களாட்சியைக் கட்டமைத்தல், தங்கள் கட்சியின்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், இவற்றை செயல்படுத்துதல் என ஐந்து கொள்கை அறிக்கையை எடுத்துக்காட்டிப் பேசினார். இவற்றை தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியும் காட்டினார். பின்னர் 1999-ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகினார். ஆனால் பிறருக்கு வழிவிட்டு 2-வது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட மறுத்துவிட்டார் மண்டேலா.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா

யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதும், பாலைநிலத்தில் அலகையின் சோதனைகளை வென்றவராய், கலிலேயாவில் தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்குகிறார் இயேசு. தொழுகைக் கூடத்தில் எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசிக்கும் இந்தப் பகுதியை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே எடுத்துரைக்கின்றார். பின்னர் 'தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்' என்று லூக்கா கூறுவதன் வழியாக, இயேசு யூத வழிபாட்டு முறைகளை மதித்துப்போற்றி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, எசாயா நூலில், 'ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது' என்றுதான் தொடங்குகிறது. இவ்விதத்தில் பார்க்கும்போது, தூய ஆவியின் அருள்பெற்ற நிலையில்தான் எசாயாவின் இந்த வார்த்தைகளை அவர் வாசிக்க எழுகிறார். மேலும் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்’ (வச 1) என்று நற்செய்தியாளர் கூறுவதிலிருந்து இயேசுவுடனான தூய ஆவியின் உடனிருப்பும் உறுதிப்படுத்தபடுகிறது.  பொதுவாக, லூக்கா நற்செய்தி ‘இரக்கத்தின் நற்செய்தி’ என்றே அழைக்கபடுகிறது. "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" (6:36) என்று இயேசு கூறுவதாகக் காட்டும் லூக்கா, இவ்விரக்கச் செயலை அவர் தனது பணிவாழ்வு முழுவதும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றார். குறிப்பாக, இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசிக்கும் பகுதியை இங்கு உட்புகுத்தியிருப்பதற்கு காரணமே, கடவுளின் பரிவிரக்கத்தைக் காண்பிப்பதற்காகத்தான். இப்போது இப்பகுதியைக் குறித்த சிந்தனைகளை இன்னும் சற்று ஆழப்படுத்துவோம்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுகிறார். இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டுச் சுருளில் தன்னைக் குறித்து கூறப்பட்ட இறைவார்த்தைகளை வாசிக்கிறார். அதிலிருந்து ஐந்துவிதமான இலக்குகளை தனது கொள்கை அறிக்கையாக (manifesto) மக்களுக்கு முழங்குகிறார். அவை: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தல், சிறைப்பட்டோரை விடுதலை செய்தல், பார்வையற்றவருக்குப் பார்வை வழங்குதல், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புதல், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவித்தல். இன்றைய முதல் வாசகத்தில் வரும் திருநூல் வல்லுநரான எஸ்ராவைப் போல இயேசு மறைநூலிலிருந்து வாசிக்கிறார். எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதி அன்பும், இரக்கமும், சமூக நீதியும் கொண்ட இறையாட்சியின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இயேசுவின் இந்தக் கொள்கை அறிக்கையில் கூறப்படும் ஏழ்மை, சிறைப்பட்ட நிலை, பார்வையற்ற நிலை, ஒடுக்கப்பட்ட நிலை யாவும் பாடுகள் மற்றும் மரணத்தின் வெளிப்பாடுகளாகத் தோன்றுகின்றன. ஆனால் இயேசு, சாவை விளைவிக்கும் இவற்றை அழித்து அதற்கு மாற்றான என்றுமுள்ள விடுதலை வாழ்வைத் தருவார் (1 கொரி 15:54-55) என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆக, இயேசுவின் கொள்கை அறிக்கையில் விடுதலை வாழ்வு முதன்மைத்துவம் பெறுகிறது. இங்கே ‘அருள்தரும் ஆண்டினை அறிவிப்பது' என்றதொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. லூக்கா நற்செய்தியாளர். இது 50-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் யூபிலி ஆண்டைக் குறிக்கிறது.  அப்படியென்றால், இவ்வாண்டில் ஆண்டவராகிய கடவுளின் அருளும் இரக்கமும் அறிவிக்கப்பட வேண்டும். (திபா 111:4 அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்).

இன்றைய உலகின் ஆட்சியில் பல காரியங்கள் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றன. செல்வம் படைத்தவர்கள் ஒருமாதிரியாகவும், செல்வமற்ற ஏழைகள் வேறுமாதிரியகவும் இவ்வுலகின் அரசுகளால் நடத்தப்படுகின்றனர். ஆனால் இயேசு எல்லாருக்குமான இறையாட்சியை இவ்வுலகில் அமைக்க விரும்பினார். அதனால்தான், “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று குறிப்பிடுகின்றார். மேலும் இறையாட்சியை கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிட்டு மத் 13:31-34 தான் அமைக்கவிருக்கும் இறையாட்சி எல்லா இடங்களுக்கும் பரவக்கூடியது என்று உரைக்கும் இயேசு, "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்" (காண்க லூக் 13:29) என்று கூறி, அது  எல்லாருக்குமானது என்றும் எடுத்துக்காட்டுகின்றார். ஆக, ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் கடைபிடிக்கும்போது இயேசு தனது கொள்கை அறிக்கையில் வெளிப்படுத்திய அந்த விடுதலை வாழ்வு சாத்தியமாகும். இதன் அடிப்படையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில் 'உடல் ஒன்று உறுப்புகள் பல' என்ற  தலைப்பில் புனித பவுலடியார் கூறும் கருத்துகள் நம் மனங்களுக்கு நிறைவை அளிக்கின்றன. “உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. “நான் கை அல்ல; ஆகவே, இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? “நான் கண் அல்ல; ஆகவே, இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான், பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை என்றோ சொல்ல முடியாது" எனத் தெளிவுபடக் கூறுகின்றார்.

இன்றைய நம் உலகில் ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் அக்கறை என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. யாருக்கு எது நடந்தால் நமக்கென்ன என்ற எண்ணத்தில்தான் இன்று பலர் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். நூறு விழுக்காட்டு மக்களில் பத்து விழுக்காட்டு மக்களே துயருறுவோரின் கண்ணீரைத் துடைக்க முன்வருகின்றனர். இன்று உலகளவில் 34 நாடுகள் போரால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. உலக நாடுகளின் தலைவர்களில் எத்தனைபேர் இம்மக்களைக் குறித்துக் கவலைகொள்கின்றனர். தங்கள் நாடு பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற சுயநல எண்ணத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றனர். ஒருபுறம் மக்கள் போர்களாலும், மோதல்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும் துயரத்தில் மூழ்கிக்கொண்டிருக்க, மறுபுறம், எல்லாக் கொண்டாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும், களியாட்டங்களும் வழக்கம்போல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உடலில் ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் என்று கூறும் பவுலடியாரின் வார்த்தைகள் இன்று நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கின்றதா? நாம் உண்மையிலேயே கிறிஸ்துவின் உறுப்புக்கள் என்றால் அதனைச் செயலில் காண்பிக்க வேண்டும் அல்லவா? ஆனால் அது நம்மிடையே நிகழ்கிறதா? இல்லையே! திருஅவை மற்றும் துறவற அவைகளின் மறைப்பணியாளர்களாகவும், போதகர்களாகவும்,  தலைவர்களாகவும் இயேசுவைப் பின்பற்றும் அனைவரும் அவரவர்க்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். அவர்தம் பணிகளில் அவர்கள் ஏற்கும் கொள்கை அறிக்கைகள் (manifesto) நேரிய வழிகளில் செயலாக்கம் பெறவேண்டும். அப்போதுதான் இயேசு கொடுக்க விரும்பிய விடுதலையும் ஏற்படுத்தவிரும்பிய இறையாட்சியும் சாத்தியமாகும்.

ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனை பற்றி நாம் அறிவோம். அமெரிக்காவில் தலைவிரித்தாடிய அடிமைத்தனத்தை அடியோடு ஒழித்தவர் அவர். மனிதரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், மனித மாண்புகள் போற்றப்பட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தவர். இறைபக்தி, கடமையுணர்வு, துன்புறுவோரின் துயரங்களைப் புரிந்துகொள்ளுதல், பணிவாழ்வில் முழுமையான அர்ப்பணம், தோல்விகளை ஏற்கும் தூய மனம், துணிவுடன் போராடும் குணம் ஆகிய விழுமியங்களை விருதுவாக்குகளாகக் கொண்டு வாழ்ந்தவர். இவற்றையெல்லாம் அவருக்குள் விதைத்தது திருவிவிலியம்தான. “நான் பெற்ற எல்லா நற்குணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என் அன்னைதான். சிறுபிள்ளை முதல் திருவிவிலியத்தின் வார்த்தைகளை என்னுள் ஊட்டி வளர்த்தது அவர்தான்” என்று அவர் பெருமைபொங்க சொல்வதுண்டு. மேலும் “கடவுள் மனிதனுக்கு வழங்கிய உயரிய கொடை திருவிவிலியம்தான் என்று நான் நம்புகிறேன். காரணம், உலகத்தின் மீட்பரிடமிருந்து எல்லா நன்மைகளும், இதன் வழியாகவே நமக்குத் தெரிவிக்கப்படுகின்றன” என்று விவிலியம் குறித்து பெருமிதத்துடன் கூறினார் லிங்கன்.

இறைவார்த்தையைப் பொருளுணர்ந்து படிப்பவர்களின் வாழ்வு மாறுபடுகிறது என்பதற்கு ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் எடுத்துக்காட்டப்படும், ‘சிறைப்பட்டோரை விடுதலை செய்தல், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புதல்’ என்ற இரண்டு கொள்கை அறிக்கையையும் இயேசுவின் வழியில் நிறைவேற்றிக் காட்டியவர் ஆபிரகாம் லிங்கன். இந்தக் காரணத்திற்காக, தனது இன்னுயிரையும் ஈந்தவர் அவர். ஆகவே, நமது  தனிப்பட்ட வாழ்வில் நமது கொள்கை அறிக்கைகள் எவை எவை என்பதைக் குறித்து இப்போது சிந்திப்போம். மானுட விடுதலையை மையப்படுத்திய இயேசுவின் கொள்கை அறிக்கைகள் நமது வாழ்வின் மையமாகட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜனவரி 2025, 13:27