பொதுக் காலம் இரண்டாம் ஞாயிறு : சமூக அக்கறை சாத்தியமாகட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் ( I. எசா 62: 1-5 II. 1 கொரி 12: 4–11 III. யோவா 2: 1-12)
இன்று நாம் பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் சமூகத்தின் மீது அக்கறை கொள்ளவும் அதனைச் சாத்தியமாக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. சமூகம் என்பது ஒரு நபர், அவரைச் சுற்றி வாழ்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் என எல்லாரையும் உள்ளடக்கிய ஓர் அழகிய கட்டமைப்பு. கூட்டமாக இருப்பது வேறு. சமூகமாக இருப்பது வேறு. கூட்டமாக இருப்பதில் சுயநலம் வெளிப்படும். ஆனால் சமூகமாக இருப்பதில் பொதுநலன் வெளிப்படும். அதுமட்டுமன்றி, ஒரு சமூகம் என்று கூறும்போது, அதில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் பிறர்மீது அக்கறையும் பொறுப்புணர்வும் இருக்கின்றது என்பதும் பெருள்படுகிறது. இந்தச் சமூகத்தின் வெளிச்சம் நான்தான் என்று நம்மில் ஒவ்வருவரும் நினைக்கும்போது, அங்கே சமூக அக்கறை பிறக்கிறது. நான் மட்டும் வாழ்ந்தால் போதாதது என்னைச் சுற்றி வாழும் அனைவரும் நலம்பெற வேண்டும் என்று யார் ஒருவர் நினைக்கின்றாரோ, அவர் சமூக அக்கறை கொண்டவர் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் சமூகத்தின்மீதான கடவுளின் அக்கறையைக் காண்கின்றோம். 'ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். ‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு ‘பெயுலா’’ என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்' என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளில் கடவுளின் சமூக அக்கறை வெளிப்படுகிறது. இங்கே 'எப்சிபா' என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில், ‘அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பொருள்.. அவ்வாறே, 'பெயுலா' என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில், ‘மணமுடித்தவள்’ என்று பொருள். இஸ்ரயேல் சமூகம் மணமுடித்த பெண்ணைப்போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக அமைகிறது. மேலும் இயேசுவும் மரியாவும் கானாவில் மணமுடித்துக்கொண்ட அத்தம்பதியினர் வீட்டில் தங்களின் சமூக அக்கறையினால் மாபெரும் அருளடையாளம் ஒன்றின் வழியாக மகிழ்வைக் கொண்டுவருவதை இவ்விடத்தில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இன்றைய இரண்டால் வாசகத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகள் குறித்து பேசும் புனித பவுலடியார், "பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது" என்றவொரு அருமையான கருத்தை முன்வைக்கின்றார். ஒரு தோட்டத்தில் உள்ள பூக்கள் ஒரே நிறத்தில் இருந்தால் அதன் உண்மை அழகை அங்கே நாம் கண்டு இரசிக்க முடியாது. அதேவேளையில், அத்தோட்டத்தில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும்போதுதான் அது காண்பவர்களின் கண்களை பரவசப்படுத்தும். இதன் அடிப்படையில்தான், மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமைகளை தூய ஆவியார் வழங்குகிறார் என்று குறிப்பிடும் புனித பவுலடியார், அத்திறமைகள் ஒவ்வொன்றும் பொதுநலன்களுக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும், அச்சமூகத்தில் வாழும் அனைத்து மக்களின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். அதாவது, ஞானம் நிறைந்த சொல்வளம் அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், தூய ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை நம் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்துள்ள தூய ஆவியார், இவற்றை சமூக அக்கறையுடன் நாம் பயன்படுத்த வேண்டுமெனவும் நமக்கு அழைப்புவிடுகிறார்.
முதலிலும் முடிவிலும் அன்னை மரியா
கானா திருமணத்தில் இயேசு மற்றும் மரியாவிடம் வெளிப்படும் சமூக அக்கறையை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த அருளடையாளம் யோவான் நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகிறது. ஒத்தமை நற்செய்தியாளர்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லை. இந்நிகழ்வில், யோவான் நற்செய்தியாளர் ஆன்மிகப் பார்வை, சமூகப் பார்வை என இரண்டு பார்வைகளை முன்வைக்கின்றார். முதலாவதாக, ஆன்மிகப் பார்வையில் தொடக்கமுதல் இறுதிவரை இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியா இனணமீட்பர் என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” (தொநூ 3:15) என்று மரியாவைக் குறித்து தொடக்கநூலும், 'அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது' (திவெ 11:19) என்று புதிய ஏற்பாட்டின் இறுதி நூலான திருவெளிப்பாடும் கூறுகின்றன. இங்கே, கடவுளின் கோவில் என்பது அன்னை மரியாவையும், உடன்படிக்கையின் பேழை என்பது அவரது மகன் இயேசுவையும் குறிக்கின்றது. இதன் அடிப்படையில், யோவான் நற்செய்தியாளரும் தனது நற்செய்தியின் தொடக்கத்திலும் (கானா திருமணம்), இறுதியிலும் (சிலுவை அடியில்) இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்களிப்பையும், ஈடுபாட்டையும், சமூக அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றார்.
இயேசுவே புதிய திராட்சை இரசம்!
கானா ஊர் திருமண நிகழ்வில் இயேசு புதிய திராட்சை இரசத்தைக் கொடுக்கின்றார். அப்படியென்றால், பழைய திராட்சை இரசம் என்பது யூத முறைமைகளைக் குறிப்பிடுகின்றது என்பதையும் அது அர்த்தமற்று போய்விட்டது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. நன்னூல் என்ற இலக்கண நூலின் சொல் அதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்றுள்ள 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்ற தொடரானது வழக்கிழந்த இலக்கணக் கருத்துக்களை நீக்குவதும், புதிய வழக்குகளை ஏற்பதும் தவறில்லை என்கிறது. ஆக, பழைய யூத முறைமைகளைப் கழிப்பதும் இயேசுவின் புதிய முறைமைகளைப் புகுத்துவதும் அவசியம் என்ற கருத்து யோவான் நற்செய்தி முழுவதும் இழையோடுகிறது. தன்னை புதிய எருசலேம் கோவிலாகக் காட்டுவதும் (அதி 2) நிக்கதேமிடம் புதிய பிறப்பு குறித்துக் கூறுவதும் (அதி 3), சமாரியப் பெண்ணிடம் (அதி 4) புதிய வழிபாடு குறித்துப் பேசுவதும், தானே புதிய மன்னா (அதி 6) என்று குறிப்பிடுவதும், தானே இவுலகின் இருளைப் போக்கவந்த புதிய ஒளி எனப் பறைசாற்றுவதும், பிறவியிலேயே பார்வையற்றவருக்குப் புதிய பார்வை கொடுப்பதும் (அதி 9) இயேசு தரும் புதுவாழ்விற்கான அடையாளங்களாக (புதிய திராட்சை இரசம்) அமைவதைப் பார்க்கின்றோம்.
இயேசு மற்றும் மரியாவிடம் வெளிப்படும் சமூக அக்கறை
இரண்டாவதாக, சமூகப் பார்வையில், கானாவில் நிகழும் இந்தத் திருமணத்தில் இயேசு மற்றும் மரியாவிடம் வெளிப்பட்ட சமூக அக்கறையைப் பார்க்கின்றோம். இறைத்தந்தைக்கும் மக்களுக்குமான உறவில், ஓர் இடைநிலையாளராக இருந்து இயேசு, ‘மகிழ்ச்சி’ என்னும் வாழ்வை மாந்தருக்கு அளித்தார். இந்த உயரியப் பண்பைப் பெற்ற இயேசுவின் தாய் மரியாவும் புதிய இஸ்ரயேல் மக்களின் துயர்துடைத்து மகிழ்ச்சி தரும் நீரூற்றாய் விளங்குகிறார். மேலும் இந்த அருளடையாளம் வழியாக இயேசுவின் பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கி வைக்கிறார் அன்னை மரியா. "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (யோவான் 2: 3) என்ற தனது வார்தைக்குப் பணிந்து தன் மகன் நிகழ்த்தும் முதல் அருளடையாளம் வழியாக அந்தக் குடும்பத்திற்கு நிறைமகிழ்வை அளிக்கின்றார் மரியா. ஆனால் அதேவேளையில், பந்தியில் பங்கேற்கும் கடைநிலை மக்களுக்கும் அதாவது, ஒதுக்கப்பட்டோருக்கும் இந்தத் திராட்சை இரசம் கிடைக்க வேண்டும் என்பதில் மரியாவின் சமூக அக்கறை வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். இதுகுறித்து வேறு யாரும் கவலைப்படாத நிலையில் மரியாவின் கரிசனைப் பார்வை இந்தக் கடைநிலை மக்கள்மீது விழுகின்றது. ஆக, மரியாவின் இந்தச் சமூக அக்கறைக்கு முழுமைத்தரும் விதமாக, இயேசு செயல்படுவதால், இந்த அருளடையாளம் வழியாக அவரும் தனது சமூக அக்கறையை வெளிக்கொணர்கிறார்.
இயேசுவே அனைவருக்கும் மீட்பர்
இதனை இன்னொருவிதத்திலும் நாம் புரிந்துகொள்ளலாம். அதாவது, யூதர்கள் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்றும், தாங்கள் மட்டுமே கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட சிறப்புக்குரியவர்கள் என்றும், கர்வம் கொண்டிருந்தனர். இதனால்தான், சமாரியர், வரிதண்டுவோர், நோயாளர்கள், விலைமகளிர் ஆகியோரை சமுதாயத்தின் கடைநிலைக்குத் தள்ளி அவர்களை வெறுத்தொதுக்கினர். ஆனால் அவர்களின் கர்வத்தையும் தப்பெண்ணங்களையும் அழித்தொழிக்கும் விதமாக இயேசு கடைநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட இவர்கள் அனைவருடனும் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களுக்கும் கடவுளின் மீட்பு உண்டு என்பதை உறுதிபட எடுத்துக்காட்டினார். ஆக, கடைநிலை மனிதர்களுக்கும் புதிய திராட்சை இரசம் கிடைத்ததுபோல், மேற்கூறப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களுக்கும் தனது மகனின் மீட்பு உண்டு என்பதை அன்னை மரியாவின் சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது. மேலும் தனது பணிவாழ்வைத் தொடங்கவிருக்கும் தனது மகன் இயேசுவின் இலட்சியமும் இதுதான் (காண்க லூக் 4:12-18) என்பதையும் எல்லோருக்கும் சூசகமாகத் தெரிவிக்கின்றார் அன்னை மரியா. கானாவில் திருமணம் நடைபெற்ற இந்த வீடானது விண்ணகம் (இறையாட்சி) என்றும் நாம் பொருள்கொள்ளலாம். எப்படி இந்தத் திருமண வீட்டிற்கு எல்லாவிதமான மக்களும் வருகைதந்தனரோ அவ்வாறே, தனது மகன் இயேசு அமைக்கவிருக்கும் இறையாட்சியில் எல்லா இனத்தாருக்கும் இடமுண்டு (காண்க. லூக் 13:29) என்பதையும் அன்னை மரியா எடுத்துக்காட்டுகின்றார்.
கானாவூர் தரும் இரண்டு பாடங்கள்
கானாவூர் திருமண நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. முதலாவதாக, இன்றைய நமது சமுதாய வாழ்வில், தன் பெற்றோருக்குப் பின்னால், கணவருக்குப் பின்னால், பிள்ளைகளுக்குப் பின்னால், குடும்பத்திற்குப் பின்னால் என எல்லாவற்றிலும் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு எல்லாரையும் மகிழ்ச்சிநிறை வாழ்விற்குள் தள்ளும், பெண்மையையும் தாய்மையையும் நாம் எப்படி மதித்துப் போற்றுகிறோம் என்பதை இன்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் நற்செயல்களை ஏற்பதும், போற்றுவதும், பாராட்டுவதும், நமது அன்றாட வாழ்வில் நிகழ்கிறதா? என்று எண்ணிப் பார்ப்போம். இரண்டாவதாக, அன்னை மரியா நமக்கு சொல்லித்தருவது, நான் சொன்னதை என் மகன் இயேசு கேட்டார், துயர்நிறைந்த அந்தக் குடும்பத்திற்கு மகிழ்ச்சி கிடைத்தது. அதுபோலவே என் மகன் சொல்வதை நீங்கள் கேட்டால், துயர்நிறைந்த உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியானதாக மாறும், நீங்களும் புதுவாழ்வு பெறுவீர்கள் என்பதுதான்.
சமூக அக்கறை கொண்ட ஐடா ஸ்கடர்
இந்தச் சமுதாயம் எப்படியிருந்தால் எனக்கென்ன என ஒதுங்கிப்போகும் பல பெண்கள் மத்தியில் அன்றும் முதல் இன்றுவரை தனது சமூக அக்கறையால் இந்தச் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்த பெண்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஐடா ஸ்கடர். அமெரிக்காவிலிருந்து நற்செய்திப் பணிக்காகவும், மருத்துவப் பணிக்காகவும் வந்தவர் ஜான் ஸ்கடர் என்பவர். இவர் 1860 முதல் 1900 வரை 40 ஆண்டுகள் தமிழகத்தின் ஆற்காடு பகுதியில் தங்கி மருத்துவப் பணிகள் செய்து வந்தார். இவரும் இவருடைய மனைவியும் வேலூர் அருகே இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவப்பணி செய்துகொண்டிருந்தனர். இவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்றாவதாகப் பிறந்தவர்தான் ஐடா ஸ்கடர், அமெரிக்காவில் தங்கி தனது மறைபோதகப் பணிக்காக இறையியல் படித்துக்கொண்டிருந்தார் ஐடா. நன்றாகப் படித்துவிட்டு, ஒரு நல்ல ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவிலேயே வாழ்ந்து மறைபோதகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு இருந்தார் இவர். அப்போது, திடீரென தனது தாய் உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு இந்தியாவுக்கு வந்தார்.
அப்போது ஒருநாள், நடு இரவில் யாரோ ஒருவர் தங்கள் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. தந்தை தூங்கிக்கொண்டு இருந்ததால், ஐடா எழுந்து வந்து கதவைத் திறந்துப் பார்த்தபோது, இளைஞர் ஒருவர், தனது மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும் உடனே வந்து உதவுமாறும் அழைத்தார். "எனக்கு மருத்துவம் எதுவும் தெரியாது, சற்றுப் பொறுங்கள் என் தந்தையை அழைத்து வருகிறேன்" என்றார் ஐடா. அதற்கு அந்த இளைஞர், “அய்யய்யோ வேண்டாம்…. ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டும், ஓர் ஆண் பிரசவம் பார்க்கும் வழக்கமெல்லாம் எங்கள் சமுதாயத்தில் கிடையாது” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அதற்கடுத்த நாள், அவ்வூரில் அழுகை சத்தம் கேட்டது. அந்த இளைஞரின் மனைவிக்குப் பிரசவம் பார்க்க பெண் மருத்துவர் யாரும் இல்லாததால், அப்பெண் இறந்துவிட்டாள் என்பதுதான் அதற்கு காரணம் என்பதை அறிந்த ஐடா ஸ்கடர் பெரிதும் மனவேதனையடைந்தார். ஆனால் அவரது வாழ்வில் இந்தச் சம்பவம்தான் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. எப்படியெல்லாமோ வாழவேண்டும் என்று கனவு கண்ட அவர், இந்நிகழ்விற்குப் பிறகு, தான் படித்துவிட்டு வந்து இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அமெரிக்கா சென்று மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து படித்தார். மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், சிறப்பு அனுமதிபெற்று நான்காம் ஆண்டு மருத்துவ செயல்முறைப் படிப்பை இராணிப்பேட்டையில் தொடர்ந்தார். தனது பெற்றோரின் மறைவிற்குப் பின்பு, அதேபகுதியில் மருத்துவப் பணியாற்றி, அம்மக்களின் மனங்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, ஏழை எளியோருக்கு அவர் ஆற்றிய பணிகள் குன்றிலிட்ட தீபங்களாக இன்றும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறன. அவர் கட்டி எழுப்பியதுதான் ஆசியாவிலேயே பெரியதும் மிகச்சிறந்ததுமான CMC என்று அனைவராலும் அழைக்கப்படும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College). இன்று, இது ஆசிய மக்களின் நம்பிக்கை மற்றும் மகிழ்வின் விண்மீனாய் ஒளிர்கின்றது.
இங்கே 1700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 2000-க்கும் அதிகமான ஆசிரியர்கள், 2600-க்கும் அதிகாகமான செவிலியர்கள், 900-க்கும் மேற்பட்ட நிர்வாக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். "தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு" (மாற்கு 10:45) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்தையைத் தனது விருதுவாக்காகக் கொண்டு செயலாற்றி வரும் இக்கிறித்தவ மருத்துவக் கல்லூரி கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டைச் சிறப்பித்தது. இம்மருத்துவமனைக்கு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, மற்றும் அரசுத் தலைவர்கள் பலரும் வந்து சென்றுள்ளதாக இதன் வரலாறு கூறுகிறது. கடந்த 1960-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி, தனது 89-வது வயதில் இறைபதம் அடைந்த ஐடா ஸ்கடர், இந்த மருத்தவமனையின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு துயில்கொண்டு வருகிறார். பொருளாதார நெருக்கடிகள், நோய்நொடிகள், பஞ்சம், பசி, பட்டினி மற்றும் வறுமையால் அவதியுற்று வந்த அனைவரின் வாழ்விலும், தனது தியாக வாழ்வால் நிறைமகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் ஐடா ஸ்கடர். அன்னை மரியாவைப் போல, சமூக அக்கறைகொண்டு பலரின் துன்ப துயரங்களைப் போக்கி அவர்களுக்குப் புதுவாழ்வு அளித்திருக்கிறார் என்பது அவரது வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம். ஆகவே, பிறரின் துயர்துடைக்கும் பணியில், அன்னை மரியாவின் வழியில் சமூக அக்கறை கொண்டவர்களாக வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்