ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா : மாற்றம் பெறத் தூண்டும் திருமுழுக்கு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 40:1-5,9-11; II. தீத் 2: 11-14, 3 4-7 ; III. லூக்கா 3:15-16, 21-22)
ஆதிக்கவர்க்கத்தினரால் அப்பாவி மக்களுக்கு அநீதிகளும் அக்கிரமங்களும் இழைக்கப்படும் பொழுதெல்லாம் நம்மைக் காக்க யாரும் வரமாட்டார்களா என ஒட்டுமொத்த மக்களும் ஏங்கித் தவிப்பார்கள். அந்நேரத்தில் ஒரு பெரிய கதாநாயகன் திடீரென அங்கே அவதரித்தால் எப்படி இருக்கும்? நம் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும் அல்லவா? திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன மக்களுக்கு, உண்மை வாழ்க்கையில் இது நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்வில் மாபெரும் மாற்றம் வரும் அல்லவா? நான் மட்டுமே நலமாக இருந்தால் போதாது, மாறாக, எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சில நல்மனம் கொண்டவர்களால்தான் சமூக மாற்றம் அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இவர்கள்தாம் கதாநாயகர்களாகவும், தலைவர்களாகவும், புரட்சியாளர்களாகவும், ஆயர்களாகவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள்.
1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவில் நிறவெறித் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. கருப்பர் இன மக்கள்மேல் வெள்ளையினத்தவர் நடத்திய அடக்குமுறைகளும் அட்டூழியச் செயல்களும் கணக்கில் அடங்காதவைகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தன. கடவுளின் உருவிலும் சாயலிலும் ஒரே இனத்தவராகப் படைக்கப்பட்ட மனித இனம், நிறத்தால் தன்னைக் கூறுபோட்டுக்கொண்ட மிக மோசமான காலக்கட்டம் அது. 1948-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா முழுவதிலும் நிறவெறிக்கொள்கை அடங்காப்பிடாரித்தனமாக அரங்கேறிக்கொண்டிருந்தபொழுது, கருப்பர் இன மக்கள் துயரத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். அப்போது, எங்களைக் காப்பாற்ற யார் வருவார், எங்கள் கண்ணீரை யார் துடைப்பார், எங்களுக்கு விடுதலை அளிக்கப்போகும் அந்தக் கதாநாயகன் யார் என மக்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் இளமைத்துடிப்புடன், தெளிந்த சிந்தனைக் கொண்ட ஓர் இளைஞனாய் படித்துக்கொண்டிருந்த மண்டேலா, தன் இனத்து மக்களுக்கு எதிராகப் பற்றி எரிந்துக்கொண்டிருந்த நிறவெறித் தீயை அணைக்க வெகுண்டெழுந்து வந்தார். “நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம், நமது வளமான தேசம் வெள்ளையர்களின் கரங்களில் இருக்கின்றது, இந்த அவமானத்திலிருந்து என்று நாம் விடுபடப்போகிறோம்? என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக யார் தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள்?” என்ற அவரின் உள்ளத்தில் எழுந்த கேள்விகள்தாம் அம்மக்களுக்கு விடுதலை தரும் வேந்தனாக அவரை வீறுகொண்டு எழச்செய்தது.
1948-ஆம் ஆண்டு, அவர் தொடங்கி வைத்த மிகப்பெரும் போராட்டங்கள் கருப்பர் இன மக்களின் விடுதலைக்கு வித்தாக அமைந்தன. அவரது விடுதலைவேட்கை நிறைந்த போராட்டங்களைக் கண்ட நிறவெறிகொண்ட வெள்ளையினத்தவர், வெகுண்டெழுந்து அவரைச் சிறையில் அடைத்தனர். இம்மக்களின் விடுதலைக்காக அவர் 27 ஆண்டுகள் 27 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். தனது சிறை வாழ்க்கையின்போது, அவருக்கு இழைக்கப்பட்ட கொடிய வேதனைகளையும் துன்புறுத்தல்களையும் மிகுந்த மனவலிமையுடன் தாங்கிக்கொண்டார். உலகத் தலைவர்கள் கொடுத்த கடும்நெருக்கடிகளால், 27 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு, 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி மண்டேலா விடுதலையடைந்தார். 1994-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத் தலைவரானார். 1993-ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நொபேல் பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக, ஆட்சி அதிகாரம் தன் கரங்களில் இருந்தும்கூட, வெள்ளையினத்தவரை பழிவாங்காமல் அவர்கள் அனைவரையும் தனது சகோதரர் சகோதரிகளாக ஏற்றுக்கொண்டார். கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் ஒன்றித்துப் பயணித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் கூறினார்.
இன்று அன்னையாம் திருஅவை ஆண்டவரின் திருமுழுக்கைச் சிறப்பிக்கின்றது. இயேசுவைப் பொறுத்தமட்டில் திருமுழுக்கு என்பது அவர் தன்னை முழுமையாக இந்த மனிதகுலத்தின் மீட்புக்காக அர்ப்பணித்ததைக் குறிக்கின்றது. அதாவது, இறையாட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதற்காக தனது பாடுகள் மற்றும் தூய்மைமிகு மரணத்தின் வழியாகத் தன்னை அர்ப்பணிப்பதார். சிறப்பாக, இயேசுவின் இந்தத் திருமுழுக்கு நிகழ்வில், மூவொரு கடவுளின் பிரசன்னத்தையும் பார்க்கின்றோம். ஒட்டுமொத்த இந்த மானுடத்திற்கும் மீட்பை அளிப்பதில் மூவொரு கடவுளின் பேரார்வத்தையும் பங்களிப்பையும், தியாக மனப்பான்மையையும் இங்கே நாம் காண்கின்றோம். பல்வேறு வேறுபாடுகளாலும் மாறுபாடுகளாலும், ஏற்றத்தாழ்வுகளாலும், அநீதிகளாலும் கூறுபோடுபட்டிருந்த இந்த மனித சமுதாயத்தை தனது மரணத்தால் ஒன்றிணைத்து அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர கடவுள் வழங்கிய மாபெரும் கொடைதான் இயேசு என்னும் மீட்பர் மற்றும் ஆயர் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். இதைத்தான், "பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்" என்றும், "இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்" இன்றைய முதல் வாசகம் மொழிகின்றது.
திருமுழுக்கின் பின்புலம்
ஆண்டவரின் திருமுழுக்குக் குறித்து நற்செய்தியாளர்கள் நால்வரும் பேசுவதால், இயேசுவின் வாழ்வில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது (காண்க. மத் 3:1-12; மாற் 1:1-8; லூக் 3:21-22; யோவா 1:19-28). ஆனால் ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் இயேசு யோவானிடம் நேரிடையாகத் திருமுழுக்குப் பெறுவதாகக் கூறினாலும், யோவான் நற்செய்தியாளர் அவ்வாறு கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இயேசு திருமுழுக்குப் பெற்றது மட்டுமல்லாமல், அவரே திருமுழுக்குக் கொடுப்பதாகவும் கூறுகின்றார் (காண்க. யோவா 3:22). யூதச் சமுதாயதில் திருமுழுக்கு என்பது நீண்டதொரு மரபைக் கொண்டுள்ளத்தைப் பார்க்கின்றோம். கிமு 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி பக்தியுள்ள யூதர்கள், எஸ்ஸினியர்கள் போன்ற யூதத் துறவுக் குழுக்கள் கும்ரான் குகைகளில் தங்கி வாழ்ந்தபோது மனம் திரும்புதலின் திருமுழுக்கைப் பெற்றுவந்தனர். காரணம், அதுதான் அப்போது நடைமுறையில் இருந்தது. ஆக, அன்றையத் திருமுழுக்கு மனம் திரும்புதலின் அடையாளமாக அமைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து திருமுழுக்கு யோவான் காலத்தில் அவர் வழங்கிய திருமுழுக்கும் மனம் திரும்புதலின் அடையாளமாகவே காணப்பட்டது. இதன் காரணமாகவே, 'அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்' (காண்க லூக் 3:2-3) என்று லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். அப்படியென்றால், இயேசு பெற்ற திருமுழுக்கு மனமாற்றத்தின் அடையாளமாக அமைந்ததா என்றும், இறைமகனுக்கு மனமாற்றம் தேவையில்லையே என்றும், நம் உள்ளத்தில் கேள்விகள் எழக்கூடும். அப்படி அல்ல. அவர் பாவியாக இல்லாதிருந்தும் பாவியரை மீட்பதற்காக அவர்களுள் ஒருவராகத் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டார். ஆக, இயேசுவின் திருமுழுக்கு என்பது மனிதர்களுடன் அவர் மேற்கொண்ட சகோதரத்துவம் மற்றும் தோழமையின் அடையாளமாக அமைகிறது. இத்திருமுழுக்கு வழியாக இயேசு தூய ஆவியின் அனுபவம் பெறுகின்றார். இதன் வாயிலாக அவர் இறைமகன் என்று எண்பிக்கப்படுகிறார். ஆகவே, இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு அவரைப் பணிவாழ்வுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்வு என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்வோம்.
திருமுழுக்கின் முக்கியத்துவம்
கிறிஸ்தவ அருளடையாளங்களில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகக் கருதப்படுவது திருமுழுக்கு அருளடையாளமாகும். நமது பிறப்புநிலைப் பாவ அழுக்கிலிருந்து கழுவப்படுவதற்கும், திருஅவையின் புதிய உறுப்பினராவதற்கும், ஏனைய பிற அருளடையாளங்களைப் பெறுவதற்கும் திருமுழுக்குதான் நுழைவாயிலாக அமைகின்றது. அதனால்தான், இதனைப் புகுமுகச் சடங்கு என்றும் அழைக்கின்றோம். திருமுழுக்குச் சடங்கில் நான்கு முக்கிய செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. முதலாவது மறுபிறப்பு. திருமுழுக்கில் நாம் மீண்டும் நீரினாலும் ஆவியினாலும் புதிதாகப் பிறக்கின்றோம். நமது பிறப்புநிலைப் பாவம் (ஜென்மப்பாவம்) கழுவப்பட்டு நாம் சிறப்பானதொரு முறையில் கடவுளின் பிள்ளைகளாகின்றோம். இயேசு நிக்கதேமுடன் உரையாடியபோது, மறுபிறப்புக் குறித்து பேசுகின்றார். இதனை நிக்கதேம் புரிந்துகொள்ளாத நிலையில், “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்" (காண்க. யோவா 3:5-6 என்று கூறி அவருக்குத் தெளிவுபடுத்துகின்றார். இரண்டாவதாக, இது ஒரு புகுமுகச் சடங்கு. திருமுழுக்கின்போது நாம் திருஅவையின் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றோம். அதனால்தான், அருள்பணியாளர் குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்ததும், அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி, 'கிறிஸ்தவச் சமூகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று கூறுகின்றார். ஆக, திருஅவை என்பது கடவுளின் பிள்ளைகள் அனைவரும் ஒரே சமூகமாக வாழுமிடம் என்று பொருளாகிறது. மூன்றாவதாக, புனிதப்படுத்துதல். இதனைத் திருநிலைப்படுத்துதல் என்றும் நாம் கூறலாம். திருமுழுக்கில் நாம் புனிதப்படுத்தப்பட்டு இறையாட்சியைத் தேடவும், அதனை அறிவிக்கவும், அமைக்கவும் அழைக்கப்படுகின்றோம். இயேசுவின் குருத்துவத்தில் பங்கெடுக்க அழைப்புப்பெற்று பல்வேறு அருள்பணித்துவப் பயிற்சிகளுக்குப் பிறகு நாம் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்படுகிறோம். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன், அவர் நாற்பது நாள் பாலைநிலத்தில் அலகையால் சோதிக்கப்படுகிறார். அதன் பின்னர் தனது பணிவாழ்வைத் தொடங்கும் அவர் இறையாட்சியைக் குறித்து அறிவிக்கின்றார் என்பதை நாம் இங்கே ஒப்பிட்டுப் பார்ப்போம். நான்காவதாக, வல்லமை பெறுதல். திருமுழுக்கின்போது தூய ஆவியார் நம்மீது இறங்கிவந்து நமக்கு வல்லமையும் ஆற்றலும் அளிக்கின்றார். இதனால் நம் வாழ்வு முழுதும் அலகையால் ஏற்படும் சோதனைகளின்போது திடமான மனதுடன் அவற்றை வென்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமையை நாம் நிலைநிறுத்திக்கொள்கிறோம்.
திருமுழுக்கு நமக்கு விடுக்கும் அழைப்பு
ஆண்டவர் பெற்ற திருமுழுக்கு, மானிடர் அனைவருக்கும் தன்னையே அர்ப்பணிக்க வந்ததன் அடையாளமாக அமைந்ததுபோல, நாம் ஒவ்வொருவரும் பெற்ற திருமுழுக்கும் நம்மையும் மானிடர் அனைவரின் விடுதலைக்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிக்கத் தூண்ட வேண்டும். திருமுழுக்கின்போது வெண்ணிற ஆடையும் எரியும் மெழுகுவர்த்தியும் நமக்குக் கொடுக்கப்படுகிறது. இது கிறிஸ்துவைப்போல நாம் தூய உள்ளமுடன் வாழ்ந்து பிறருக்கு ஒளியாகத் திகழவேண்டும் என்பதன் அடையமாக அமைகின்றது. இயேசுவின் வழியில் இறையாட்சிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட தூய உள்ளம் கொண்ட எண்ணற்றோர் நமது திருஅவையில் இருக்கின்றனர். 'வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்' (திவெ 7:13-14) என்று திருவெளிப்பாட்டில் திருத்தூதர் யோவான் கூறுகின்றார். இங்கே வெண்மை என்பது தூய உள்ளமுடன் இயேசுவுக்காகத் தங்கள் இன்னுயிரைக் கையளித்தவர்களைக் குறிப்பிடுகின்றது. மேலும் இவர்கள் அனைவரும் பிறரது மீட்புக்காக தங்களின் தூய வாழ்வால் ஒளியேற்றியவர்கள். இவர்கள் திருஅவையில் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். நமது இந்திய நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மற்றும் ஒடிசாவிலும், அண்மையில் மணிப்பூரிலும் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும், தங்களின் வெண்ணிற ஆடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்தாம். ஆக, திருமுழுக்குப் பெற்ற இந்தக் கிறிஸ்தவர்களைப் போன்றும் நாம் மேலே கண்ட நெல்சன் மண்டேலாவைப் போன்றும் அர்ப்பணமுடன் வாழ்வதற்கு ஆண்டவரின் திருமுழுக்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
ஆகவே, இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தை நாமும் பெறவேண்டும். நமது அன்றாட வாழ்வில், நாம் பெறுகின்ற திருமுழுக்கு அனுபவங்கள்தாம் சமுதாய முன்னேற்றத்திற்காக நம்மை அர்ப்பணிக்கத் தூண்டும் நல்வழிகளாக அமைய முடியும். "எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல்கள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் இருக்கும்" என்றார் புரட்சியாளர் சேகுவேரா. நமது இந்திய நாட்டில், சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மனிதத்தை வீழ்த்தும் எத்தனையோ கொடுஞ்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதெல்லாம் காந்தியும், பெரியாரும், அம்பேத்கரும், கக்கனும், காமராசரும், இவற்றையெல்லாம் தகர்த்தெறியப் போராடியவர்கள்தாம். ஆனால் அந்த இழிச்செயல்கள் இன்றும் தொடர்கின்றன என்பதுதான் வேதனையிலும் வேதனை! காலம் மாறினாலும் இந்த மனிதத்தன்மையற்ற செயல்கள் மட்டும் மாறுவதில்லை. "மக்களை தாழ்ந்த சாதிகளாக ஆக்குவதற்கு கடவுள் அல்லது மதக்கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது அபத்தமானது" என்றார் பெரியார். கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவரது காலத்தில் இயேசுவும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைக் காண்கிறோம். இவ்வுலகின் உன்னதத் தலைவர்களாக வலம்வந்தவர்கள் அனைவருமே, தங்கள் வாழ்வில் எதோ ஓர் இடத்தில் திருமுழுக்கு அனுபவங்களைப் பெற்றவர்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்வோம். அடிமைத்தளைகளை அறுத்தெறிவதும், ஆதிக்கத்தனங்களை அழித்தொழிப்பதும், வேறுபாடுகளை வீழ்த்தி, அனைவரையும் ஒற்றைக்குடையின்கீழ் ஒன்றுசேர்க்க வாழ்வையே அர்ப்பணிப்பதும், இயேசுவின் வழியில் நாம் பெறும் திருமுழுக்கு அனுபவங்களே என்பதை உணர்ந்து வாழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்