தேடுதல்

மரணதண்டனைக்கு எதிரான போராட்டம் மரணதண்டனைக்கு எதிரான போராட்டம் 

மரணதண்டனைச் சட்டத்தின் கீழ் உலக மக்கள்தொகையில் பாதிபேர்

மரணதண்டனையை உலகிலிருந்து ஒழிக்கும் நோக்கத்தில் நீதித்துறை அமைச்சர்களையும், நடவடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்ட உரோம் நகர் பன்னாட்டு கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் மரணதண்டனைச் சட்டங்கள் இன்னும் அமலில் இருக்கும் நிலையில், உலகிலிருந்து மரணதண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என பன்னாட்டு நீத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை வியாழக்கிழமையன்று உரோம் நகரில் கூட்டியது சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

2005ஆம் ஆண்டில் துவங்கி மரணதண்டனையை உலகிலிருந்து ஒழிக்கும் நோக்கத்தில் நீதித்துறை அமைச்சர்களையும், நடவடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் உலகம் முழுவதிலிருந்து திரட்டி கருத்தரங்கை ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் சான் எஜிதியோ அமைப்பு, இவ்வாரத்தில் நடத்திய 14வது கருத்தரங்கில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 2100 பேர் தீர்ப்புப் பெற்று மரணதண்டனைக்காக சிறைகளில் காத்திருப்பதாகத் தெரிவித்தது.

ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, சவுதி அரேபியா உட்பட 55 நாடுகளில் மரணதண்டனைச் சட்டம் அமலில் இருப்பதாகவும், இந்த நாடுகளில் உலக மக்கள்தொகையில் பாதிபேர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து மரணதண்டனைச் சட்டத்திற்கு எதிராக உழைத்தால் மட்டுமே இச்சட்டம் மறையும் என உரைக்கும் நடவடிக்கையாளர்கள், வாழ்வு புனிதம் நிறைந்தது என்பதால், பிறமனிதரின் உயிரை எடுக்கும் உரிமை எந்த மனிதருக்கும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.

தென்ஆப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்த 1994ஆம் ஆண்டிற்கும் ஓராண்டிற்கு பின்னர், அந்நாட்டில் மரணதண்டனைச் சட்டம் நீக்கப்பட்டது குறித்து இக்கருத்தரங்கில் உரையாற்றிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் Thembi Nkadimeng அவர்கள், ஏனைய ஆப்பிரிக்க நாடுகளிலும் மரணதண்டனைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அரசுகள் வழி முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.

குற்றத்திற்கான தண்டனை மரணம் என்ற எண்ணப்போக்கு மாற்றப்பட்டு, குற்றவாளிகள் திருந்தி சமூகத்திற்கு பங்களிப்பவர்களாக மாற உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் தென்னாப்பிரிக்க நீதித்துறை அமைச்சர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 16:18