வாரம் ஓர் அலசல் – போர்களால் இயற்கையின் அழிவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகில் பல்வேறு இடங்களில் ஆயுத மோதல்கள் இடம்பெற்றுவந்தாலும் இன்று உலகின் முன் உடனடி தீர்வு காணவேண்டிய பெரும் பிரச்சனையாக நிற்பது, இரஷ்யா-உக்ரைன் போரும், இஸ்ராயேல்-பாலஸ்தீனிய போரும் தான். இந்த இரு போர்களும் அண்மையில் தீவிரமடைந்தாலும் இவை இரண்டும் பல ஆண்டுகளாக கனலாக எரிந்துகொண்டிருந்தவைதான். இந்த திங்கள் கிழமை, அதாவது, நவம்பர் 6ஆம் தேதி, போர் மற்றும் ஆயுத மோதல்களால் சுற்றுச்சூழல் அழிவுக்குள்ளாவதை தடுக்கும் உலக நாள்.
போர் என்றவுடன் அதற்கு பலியாகின்றவர்களாக நாம் மனித உயிர்களையும், அழிவுக்குள்ளாகும் நகர்களையும் கட்டிடங்களையும்தான் எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு என்பது, போரினால் பாதிக்கப்பட்ட, அதேவேளை மறைக்கப்பட்ட ஒரு பலிகடாவாகத்தான் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக ஆயுத மோதல்களால் நீர் மாசடைந்துள்ளது, பயிர்கள் தீக்கிரையாகியுள்ளன, காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளன, மண் விஷமாகியுள்ளது, எண்ணற்ற விலங்கினங்கள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் போர் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் வாழ்வு அச்சுறுத்தலிலேயே இருந்துவருகிறது. இது தவிர, வரலாற்றை நாம் ஆழமாக உற்று நோக்கினோமென்றால், கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு இயற்கை வளங்களோடு தொடர்புடையது என்பது உண்மை. இது மேலும் இரு மடங்காகுமோ என்ற அச்சத்தையே வல்லுனர்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.
இதையெல்லாம் உற்றுக் கவனித்த ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 6ஆம் தேதியை, ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் அழிவதை தடுக்கும் உலக நாளாக சிறப்பிக்க வேண்டும் என 2001ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஏனெனில், ஆயுத மோதல்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவுகள் ஒரு நாட்டின் எல்லைகளைத் தாண்டியும், பல தலைமுறைகளைத் தாண்டியும் தன் பாதிப்புக்களைக் கொண்டுள்ளன. அண்மை வரலாற்றை எடுத்துக்கொண்டோமானால், ஆப்கானிஸ்தான், கொலம்பியா, ஈராக் ஆகியவைகளில் இடம்பெற்ற போர்களால் பெரிய அளவில் இயற்கை வளங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆப்கானிஸ்தானில் மட்டும் சில பகுதிகளில் 95 விழுக்காட்டு காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளன. போர்கள் இடம்பெறும் சூழலைப் பயன்படுத்தி தேசவிரோதிகள், மரங்களை வெட்டி விற்பது, கனிம வளங்களைத் தோண்டுவது, அரிய வகை விலங்குகளைப் பிடித்து வியாபாரம் செய்வது என்பவை இடம்பெற்று இயற்கையின் அழிவுகள் ஆப்கானிஸ்தானில் தொடர்கின்றன.
மத்திய ஆப்ரிக்க குடியரசை எடுத்துக் கொண்டோமானால், ஆயுத மோதல்களால் யானை இனமே அந்நாட்டில் அழிந்துவிட்டது. உக்ரைனை எடுத்துக்கொண்டோமானால் அதன் Seversky Donets நதியின் நீர் பயன்படுத்த முடியாத அளவு மாசுகேடடைந்துள்ளது. காசாவிலும் ஏமனிலும் ஆயுத மோதல்களால் தண்ணீர் மாசுகேடடைந்து சுற்றுச்சூழலுக்கும் நலவாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, போர் விமானங்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள், வேதியியல் ஆயுதங்கள் போன்றவைகளால் காற்று மாசுக்கேடு இடம்பெறுவதும் நாம் கண்ணால் காணும் ஒன்றாக இருக்கிறது. காற்று மாசுக்கேடு என்பது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கும் வழிவகைச் செய்கிறது. இதனால் மழை குறைவதும், வெப்பம் அதிகரிப்பதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.
போருக்குப்பின் சுற்றுச்சூழலில் எத்தனையோ அழிவுகளை நாம் பார்க்கிறோம். சுற்றுச்சூழலில், மண்ணில், காற்றில், நீரில் என்று சொல்லிக்கொண்டேச் செல்லலாம். ஆனால், இவைகள் இடம்பெறாமல் தடுக்கவேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது ஐ.நா. நிறுவனம். இதற்காகத்தான் இந்த நாள். ஆயுத மோதல்களால் இடம்பெறும் சுற்றுச்சூழல் மாசுக்கேட்டை தடுப்பதற்கான நாள் நவம்பர் 6.
ருவாண்டாவில் இடம்பெற்ற இனமோதல்களால் மக்கள் அண்மை நாடுகளுக்கு குறிப்பாக தன்சானியாவுக்கும், காங்கோ குடியசுக்கும் இடம்பெயர்ந்ததால் எவ்வளவு பெரிய இழப்பு இயற்கை வளங்களில் ஏற்பட்டது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடரும் மோதல்களால் இடம்பெறும் சுற்றுச்சூழல் அழிவை கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது நம் உலகம்.
ஈராக்கின் மோசூல் நகரிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டேயிருப்பது, எத்தகைய சுற்றுச்சூழல் அழிவினை கொணர்ந்துள்ளது என்பது உலகில் ஆர்வம் கொண்டுள்ள வல்லுனர்கள் உன்னிப்பாக கவனித்து வரும் ஒன்று. 1991ஆம் ஆண்டு எண்ணெய்க் கிணறுகள் திட்டமிட்டே தீவைக்கப்பட்டபோது, எவ்வளவு பெரிய மாசுக்கேட்டை அப்பகுதி சந்தித்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இது போன்ற பிரச்சனைகள் முன்னாள் யுக்கோஸ்லாவிய குடியரசிலும், சிரியாவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளிலும் ஆயுத மோதல்களால் விவசாய நிலங்களும், குடிநீரும் பெருமளவில் மாசுகேடடைந்து மக்கள் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளில் 95 விழுக்காடு காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளபோதிலும், மொத்தமாகப் பார்த்தோமானால், போரால் அந்நாட்டின் காடுகளில் மூன்றில் ஒரு பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளது. இன்று வறட்சியும், பாலைவனமாதலும், அரியவகை உயிரினங்களின் அழிவும் தொடர்கதையாகி வருகின்றது.
ஈராக்கின் மோசூல் நகருக்கு அருகே எண்ணெய்க் கிணறுகள் எரிப்பாலும், சல்பர் தொழிற்சாலை ஒன்று எரிக்கப்பட்டதாலும், அமில மேகங்கள் உருவாகி மக்களையும் நிலங்களையும் பாதித்தது.
சுற்றுச்சூழல் குறித்த அனைத்துலக அளவிலான சட்டம் இயற்றுவதற்கான முயற்சிகள் 1970ஆம் ஆண்டுகளிலேயே, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னரேத் துவங்கிவிட்டது.
1972ல் ஸ்டாக்ஹோம் அறிக்கை, அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் போர் முடிவுக்குப் பின்னர், போர்க்காலங்களில் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்கும் இரு சட்ட அறிக்கைகள் உலக அளவில் வெளியிடப்பட்டன.
அதன் பின் 1990களில் ஈராக்-குவைத் போருக்குப்பின் இந்த சட்ட அறிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை உருவானது.
அதன்பின் 2009ஆம் ஆண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச்சூழல் சட்ட நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து, போர்க்காலத்தில் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து பன்னிரண்டு பரிந்துரைகளை முன்வைத்தன.
ஏனெனில் உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டிற்கும் மேல் அதாவது ஏறக்குறைய 150 கோடி மக்கள் ஆயுத மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்ந்துவருவது இன்றும் தொடர்வது, இத்தகைய ஆய்வுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் முக்கியக் காரணமானது.
இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் மோதலை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
எத்தனை நதிகளும் ஏரிகளும் மாசுபடுத்தப்பட்டுள்ளன என்பது தெரியுமா?
நீர் வளம் குன்றியது, காற்று மாசுக்கேடு, அரியவகை பறவைகள் குடிபெயர முடியா நிலை, விலங்கினங்கள் அழிவு என அழிவுகளின் தொடர்ச்சி இடம்பெற்றுக் கொண்டேயிருக்கிறது. இவ்விரு நாடுகளிலும் 75 விழுக்காடு ஏரிகளும், ஆறுகளும் மாசுபட்டிருக்க, மொத்த நீர் வளத்தில் 50 விழுக்காடு மாசடைந்துள்ளது என்பதுதான் உண்மை.
காசா-இஸ்ராயேல் மோதலில் சுற்றுச்சூழல் அழிவு என்று பார்த்தோமானால் முதலில் குடிநீர் மாசுகேட்டைத்தான் குறிப்பிட வேண்டும். குழந்தைகளுக்கான ஐ.நா.வின் நிதி நிறுவனமான யுனிசெப்பின் கூற்றுப்படி, காசாவின் குடி நீர் விநியோகத்தில் 96 விழுக்காடு குடிப்பதற்கே தகுதியற்றதாக மாறிவிட்டது. காசா மக்களுள் 10 விழுக்காட்டினருக்கே நேரடியாக சுத்தக் குடி நீர் கிடைக்கும் வசதி உள்ளது. அதுபோல், இஸ்ராயேலிலும் தண்ணீர் பற்றாக்குறை, கழிவுகள் அகற்றமுடியாமை, மாசுகேடு என பிரச்சனைகள் உள்ளன.
நமக்கு அருகிலேயே இருக்கும் மணிப்பூரை எடுத்துக்கொள்ளுங்கள். இரு இனங்களுக்கிடையே இவ்வாண்டு மே மாதம் 3ஆம் தேதி இடம்பெற்ற மோதலில் எத்தனை சுற்றுச்சூழல் அழிவு என்பது இனிமேல்தான் தெரியும்.
மனிதன் அமைதியில் வாழவிரும்புவது அவனின் அடிப்படை உரிமை. குறைந்தபட்சம் நம் வருங்காலத் தலைமுறையாவது அமைதியில் வாழவேண்டும் என அவன் ஆவல் கொள்கிறான். ஆனால், இன்றைய மோதல்களால் நாமும் அமைதியில் இல்லை. அந்த மோதல்களின் சுற்றுச்சூழல் அழிவால் வருங்காலத் தலைமுறையும் அமைதியில் வாழும் நிலை இல்லை. ஆயுதங்களின் நவீனத்தன்மை என்பது சுற்றுச்சூழலையும் மனிதர்களையும் அழிவுக்குள்ளாக்கி வருகின்றது.
இத்தகைய ஒரு சூழலில், இத்தகைய ஒரு பின்னணியில்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலை 2015ஆம் ஆண்டு வெளியிட்டார்.
"இறைவா உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணுதல்" என்ற தன் திருமடல் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட அனைவருடனும், பேச விழைவதாக அதில் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளுக்குமுன், இவ்வுலகம், அணுஆயுத அழிவு ஆபத்தின் விளிம்பில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் எழுதிய ஒரு திருமடல், போரை நிராகரித்ததோடு நின்றுவிடாமல், அமைதிக்கு ஓர் ஆலோசனையையும் வழங்கியது. அவர் எழுதிய 'உலகில் அமைதி' (Pacem in Terris) என்ற அம்மடல், 'கத்தோலிக்க உலகிற்கு' மட்டுமன்றி, 'நல்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்' வழங்கப்பட்டது.
'உலகில் அமைதி' திருமடல் வெளியாகி எட்டு ஆண்டுகள் சென்று, 1971ஆம் ஆண்டு, கட்டுப்பாடற்ற மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கவலை வெளியிட்டார். FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்கு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய ஓர் உரையில், "இயற்கையைச் சீரழிப்பதால், அதன் விளைவுகளுக்கு மனிதர்களே பலியாகி வருகின்றனர்... தற்போது நிகழ்ந்துவரும் பொருளாதார முன்னேற்றம், சமுதாய மற்றும் நன்னெறி முன்னேற்றங்களுடன் இணைந்து செல்லவில்லையெனில், அது மனிதருக்கு எதிரியாக மாறிவிடும்" என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் அதிக அக்கறை காட்டினார். திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் வெளியிட்ட ஓர் எச்சரிக்கையையும், வேண்டுகோளையும் பார்த்தோமென்றால், "மனிதரின் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்காக, இயற்கைச் சூழலை விழுங்கிவரும் போக்கு தவறு... சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றம் மிகவும் தேவை. மனிதரின் வாழ்வு முறை, பொருள்களின் உற்பத்தி, மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்து நிலைகளிலும் ஆழமான மாற்றங்கள் உருவாகவேண்டும்" என்பதே அது.
மனிதர்கள் பொறுப்பற்ற முறையில் வாழ்வதன் விளைவே, சுற்றுச்சூழல் சீரழிவு என்பதை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் எடுத்துரைத்துள்ளார். "நம்மைவிட உயர்ந்த உண்மைகள் இல்லை என்ற எண்ணத்தில், நம்மைத் தவிர வேறு எதையும் நாம் பார்க்கத் தவறும்போது, படைப்பு அனைத்தும் நம் சொத்து என்றும், நாமே அதன் முடிவு என்றும் தவறாக எண்ணி, இயற்கையைத் தவறாகப் பயன்படுத்தத் துவங்குகிறோம்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய சொற்கள் முக்கியத்துவம் நிறைந்தவை.
“நாம் நமக்குப் பின் வருகின்ற மக்களுக்கு, தற்போது வளர்ந்துவரும் சிறார்க்கு எத்தகைய உலகத்தை விட்டுச் செல்ல விரும்புகின்றோம்?” என்பது குறித்து ஆழமாக சிந்தித்து அதை செயலாக்க முயல்வோம். அந்த கேள்விக்கான விடையின் முக்கிய பகுதிதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்