தேடுதல்

ஆண்டவரே அனைத்துலகின் அரசர்! ஆண்டவரே அனைத்துலகின் அரசர்! 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 47-1, ஆண்டவரே அனைத்துலகின் அரசர்!

குடிமக்களின் குறையறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் உண்மையுள்ள அரசராம் கடவுளை இருகப்பற்றிக்கொண்டு இன்பமுடன் வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 47-1, ஆண்டவரே அனைத்துலகின் அரசர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் ‘போர்களை வெறுக்கும் ஆண்டவர்!’ என்ற தலைப்பில் 46-வது திருப்பாடலில் 9 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 47-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'ஆண்டவரே உலகின் அரசர்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 9 இறைவசனங்களை மட்டுமே கொண்டுள்ள மிகவும் சிறிய பாடல்தான். சில வாரங்களுக்கு முன்பு, 'அரசரின் திருமணப்பாடல்' என்ற தலைப்பில் அமைந்த 45-வது திருப்பாடலில் ‘மீட்பரான இயேசுவே என்றுமுள்ள அரசர்!’ என்று கூறி, அவரைக் குறித்த அருமையான பாடல் ஒன்றையும் தாவீது அரசர் இயற்றியிருந்ததைத் தியானித்து மகிழ்ந்தோம். இவ்வாரம் நாம் தியானிக்கவிருக்கும் இத்திருப்பாடல்  ‘ஆண்டவரே உலகனைத்துக்கும் அரசர்’ என்ற எண்ணத்தில் தாவீது அரசர் இதனை வடித்திருக்கின்றார் என்றே நாம் நினைக்கத் தோன்றுகிறது. இத்திருப்பாடல் முழுவதும் எல்லா நாட்டவரிடமிருந்தும் வெற்றியை கொணர்ந்த ஆண்டவரே அனைத்துலகின் அரசர் என்றும், அவரைப் பாடுவதும் போற்றிப் புகழ்வதும் நமது கடமை என்றும், இறுதியாக கடவுளே அனைத்துக்கும் மேலானவர் என்றும் கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். ஏறக்குறைய இதுவும் ஒரு புகழ்ச்சிப் பாடல்தான். தாவீது வேற்றினத்து அரசர்கள்மீது போர்தொடுத்து அவர்களை வென்றவேளை இத்திருப்பாடலை அவர் எழுதியிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. காரணம், இதனை நாம் வாசிக்கின்றபோதே அத்தகையதொரு எண்ணவோட்டத்தை நமக்குத் தருகின்றது. பல நாடுகளை வென்று தானொரு மிகப்பெரும் பேரரசராக விளங்கியும் கூட, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடவுளே இவ்வுலகமனைத்திற்கும் பேரரசர் என்பதை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் தாவீது என்பதுதான் இத்திருப்பாடலின் சிறப்பாக அமைகின்றது. இவ்வாரம் இத்திருப்பாடலின் முதல் நான்கு இறைவார்த்தைகளை நமது தியானச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இப்போது பக்தி நிறைந்த உள்ளமுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே; வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும்” (வச 1-4)

அரசர் ஒருவர் ஏராளமான கலைச் செல்வங்களையும் ஓவியங்களையும் கொண்ட பிரம்மாண்டமான கண்காட்சி ஒன்றை அமைத்தார். அதனைக் காண அனைத்து மக்களையும் அழைத்த அரசர், உள்ளே செல்வோர் தங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அவ்வளவுதான், அங்கே கூட்டம் அலைமோதியது. அவரவர் தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை அல்லது இதர பொருள்களை எடுத்துக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்த ஒரு பெண் மட்டும் கண்காட்சியிலிருந்து எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளாது வெளியில் வந்தாள். அப்போது வெளியே நின்றிருந்த அரசர் அவள் எதையும் எடுக்காமல் வந்ததைப் பார்த்து அவளை அழைத்தார். “என்னம்மா உனக்கு எதுவும் வேண்டாமா? அங்கே உள்ளது எதையும் உனக்குப் பிடிக்கவில்லையா?" என்று கேட்டார். “எனக்கு ஒன்றுமே வேண்டாம் அரசே” என்றாள் அவள். “மிக அழகிய பொருள்கள் ஏராளமாக உள்ளே உள்ளனவே. அவற்றில் எதுவுமே உனக்கு வேண்டாமா?” என்று கேட்டார். "இல்லை அரசே... அதில் எதுவுமே எனக்கு வேண்டாம்" என்று திட்டவட்டமாகக் கூறினாள் அவள். “அப்படியானால் உனக்கு என்ன தான் வேண்டும்? அதைச் சொல், நான் கண்டிப்பாகத் தருகிறேன்” என்றார் அரசர். “அரசே! வாக்கு மாற மாட்டீர்களே! நான் கேட்டதைக் கண்டிப்பாகத் தருவீர்களா?” என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண். அதற்கு அவ்வரசர், “நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான். நிச்சயமாக அதனை நான் மீறமாட்டேன். உனக்கு என்ன வேண்டும் கேள்” என்று அரசர் உறுதியாகக் கூறினார். உடனே அந்தப் பெண், “அரசே! எனக்கு நீங்கள் தான் வேண்டும்” என்று கூறிக்கொண்டே ஓடிச்சென்று அரசரைக் கட்டிப்பிடித்து இறுக அணைத்துக்கொண்டாள். உள்ளம் பூரித்ததுபோன அரசர், "இனி நானும் என்னிடம் இருப்பது அனைத்தும் உனக்கு மட்டுமே சொந்தம்" என்று கூறினார். அக்கணமே அப்பெண்ணுக்கு எல்லாமே சொந்தமாகிப்போனது. தாவீது, தானொரு பேரரசராக இருந்துகூட, உலகமனைத்திற்கும் ஒப்புற்ற அரசராம் கடவுளை தனது ஒரே பேரரசராகப் பற்றிக்கொண்டார். தாவீதுடைய மனது எவ்வளவு குழந்தை மனம் கொண்டது பாருங்கள்! அதனால்தான் உடன்படிக்கை பேழையை பவனியாகக் கொண்டு சென்றபோது, தனது அரசவுடையைக் களைந்துவிட்டு அப்பேழைக்கு முன்பாக ஒரு சாதாரண மனிதரைப் போன்று கையில் யாழ்கொண்டு பாடல் இசைத்துக்கொண்டே சென்றார் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். இதன் காரணமாகவே, “அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! ‛கலீர்’ எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா! (காண்க திபா 150:1-6) என்று கூறிப் பாடிப் புகழ்வதைப் பார்க்கின்றோம்.

தாயும் தந்தையுமான அரசர்

புறநானூற்றுப் புலவர்களும் கூட அரசரின் உயரியப் பண்புகளைத் தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர். பழங்காலத்தில் அரசர் என்பவரைத்  தந்தை போலக் கருதினர் என்பதைப் புறநானூற்றுப் புலவர்கள் வாய்மொழி வழியாகவும், காளிதாசனின் கவிகள் வழியாகவும் நாம் அறிய முடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கருத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள கவிஞர்கள் பாடியிருப்பது இந்தியக் கலாசாரம் ஒன்றே என்பதைக் காட்டுகிறது. மேலும் கல்வெட்டுகளிலும், சாசனங்களிலும் கூட இக்கருத்து எதிரொலிக்கிறது! தாயில்லார்க்குத் தாயாகவும், தந்தையில்லார்க்குத் தந்தையாகவும் இருப்பவர் ஆட்சியில் இருக்கும் அரசர் ஒருவர்தான் என்று மனுவும், சாணக்கியனும், சங்க காலப் புலவர்களும் நவின்றனர். இது போன்ற கருத்துக்களை வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் காணமுடியாது. இது இந்திய நிலப்பரப்பின் தனித் தன்மையைக் காட்டுகிறது. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று மோசிகீரனார் பாடுவார் (புறம்.186). நரிவெரூ உத்தலையார் (புறநானூறு-5) பாடிய பாடலில், “அருளும் அன்பும் இல்லாதோர் செல்லும் நரகம் பக்கம் போய்விடாதே! நீ காக்கும் நாட்டை குழந்தை வளர்ப்பவர் போல் காப்பாயாக" என்பதை, "நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி" என்கின்றார்.

வாட்டாற்று எழினியாதனைப் பாடிய மாங்குடிக் கிழார், "கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்” (புறம் 396) என்ற பாடலில், “உறவினர் இல்லாதோருக்கு அவன் உறவினன்" என்பார். மருதன் இளநாகனும் மருதக்கலியில், குழவியைப் பார்த்து “உறூஉம் தாய் போல், உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர" (கலித்தொகை 99)  என்ற பாடலில், குழந்தைக்குப் பால் தரும் தாய் போலவும், உலகத்துக்கு உதவும் மழை போலவும் நல்லாட்சி  நடத்தும் அரசர் எனப் பாராட்டுவார். தனது தலைவராகிய கடவுள் மட்டுமே உண்மையான போற்றுதற்குரிய அரசர் என்பதை தாவீது அரசர் நன்கு அறிந்திருந்தபடியால்தான், “மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” என்று கூறி புளங்காகிதம் அடைகின்றார்.

இன்றைய உலகின் தலைவர்கள்

இன்றைய நம் உலகில் மக்களை ஆள்வதற்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள் எல்லாம் ஆட்சி அரியணையில் அமர்ந்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். தாங்கள் மட்டுமே மக்களை ஆளும் என்றுமுள்ள அரசர்கள் எனத் தங்களை பறைசாற்றிக்கொள்கின்றனர். பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூதும், ஏமாற்றுவேலையும், எகத்தாளமும் கொண்டு, ஓட்டுக்களை விலைக்கு வாங்கி, அதில் கள்ள ஓட்டுக்களையும் போட்டுவிட்டு தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கூறி குதூகலித்து கொக்கரிக்கின்றனர். மக்களின் பணத்தை சூறையாடுகின்றனர். மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடித்து அவர்களை நடைபிணமாக்குகின்றனர். மக்களின் துயரத்தில் தங்களின் மகிழ்ச்சியைக் கட்டியெழுப்புகின்றனர். ஓட்டுக்காகக் காலைப் பிடிப்பவர்கள், ஆட்சி அரியணை எறியபிறகு அவர்களின் கால்களை வாரிவிடுகின்றனர். இதுதான் இன்றைய மன்னர்களின்  வாழ்க்கை. இதுதான் இன்றைய அரசியல் தலைவர்களின் வாழ்க்கை. ஆனால் நம் விண்ணக மண்ணக அரசராம் கடவுள் நமக்கான அரசர். நாம் அவரைப் பற்றிகொள்ளக் கூடிய அளவிற்கு அன்பும், இரக்கமும், கனிவும் நிறைந்த ஒப்பற்ற அரசர். குடிமக்களின் குறையறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் உண்மையுள்ள அரசர். இப்படிப்பட்ட அரசரைத்தான் அனைத்துலகின் அரசராகத் தாவீது நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். அதேவேளையில் ஓர் அரசர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் தாவீது அரசரின் வாழ்வு, நமக்குச் சுட்டுகின்றது. ஆகவே, தாவீதின் வழியில் அனைத்துலக அரசராம் கடவுளை இருகப்பற்றிக்கொண்டு இன்பமுடன் வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2023, 14:43