விவிலியத் தேடல்: திருப்பாடல் 46-3, போர்களை வெறுக்கும் ஆண்டவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் ‘நம் உடனிருக்கும் கடவுள்!’ என்ற தலைப்பில் 46-வது திருப்பாடலில் 06 முதல் 08 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 09 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம் . இப்போது அமைதிநிறைந்த உள்ளமுடன் அவ்விறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். “உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்; வில்லை ஒடிக்கின்றார்; ஈட்டியை முறிக்கின்றார். தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார். அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன். படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்” (வச 9-11). நாம் தியானிக்கும் இன்றைய திருப்பாடலில் போரும் மோதல்களும் நிறைந்த உலகை அல்ல, மாறாக, அன்பும் அமைதியும் நிறைந்த உலகைக் கடவுள் என்றும் விரும்புகின்றார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார் தாவீது.
இன்றைய உலகம் போர்களால் சிதைக்கப்பட்டு வருகின்றது. திரும்பும் திசையெல்லாம் போர்களும், மோதல்களும், கலவரங்களும் நிகழ்வதைக் காண முடிகின்றது. மனிதகுலம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட மிகக் கொடூரமான காரியங்களில் ஒன்று போர். அதுவும் உலகப் போர் என்பது உச்சக் கட்ட கொடூரம்! அது ஏற்படுத்திய காயங்கள் இன்றும் வடுகளாகத் தொடர்கின்றன. யாரோ ஒரு சிலரின் பேராசைக்காக இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து சாக வேண்டிய சூழலை அது ஏற்படுத்தியது. பொதுவாக போர் தொடங்குவதற்கு ஒரு சில அற்பக் காரணங்களே போதும், ஆனால், போரை முடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. போரை தொடங்கியவர்களே நினைத்தாலும் முடிக்க முடியாத அளவிற்கு அதன் வீரியம் அதிகமாகிப்போகும். அரசர் காலங்களில் நிகழ்ந்த போர்களுக்கு வேறு வேறு காரணங்கள் இருந்தன. நாடு பிடிக்கும் கொள்கை அதில் முக்கியமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து மக்களாட்சி முறையிலான அரசுகள் உருவான பிறகும் மீண்டும் போர்கள் நிகழ்ந்தது என்பது மன்னிக் முடியாத குற்றங்களாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன.
1914-ஆம் ஆண்டு தொடங்கி 1918-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போரில் கிடைத்த பாடங்களை கொண்டாவது அதற்கடுத்து உலகப்போர்கள் நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்ய மறுத்துவிட்டது இந்த மனித சமுதாயம். காரணம், முதல் உலகப்போர் முடிவடைந்த 21 ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஏறக்குறைய 6 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உலகப் போரில் பல கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் என்பதுதான் பெரும் சோகம்! குறிப்பாக ஹிட்லரின் இனவெறிக்குப் பலியானவர்கள் 10 கோடி பேர் என்றால் நம்மால் நம்ப முடிகின்றதா? அதில் 97 விழுக்காட்டினர் யூதர்கள் என்பது வேதனையிலும் வேதனை! இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் மிகக் கொடிய இராணுவ மோதலாக அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக, ஜப்பானின் ஹிரோஹிமா நாகசாகி ஆகிய இரும்பெரும் நகரங்களில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகளால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,000. இதில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,000. இந்த அணுகுண்டுகளின் பாதிப்புகள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. 1940-களில் உலகெங்கினும் வாழ்ந்த மொத்த மக்களின் எண்ணிக்கை 230 கோடி. இவர்களில் ஏறத்தாழ 3 விழுக்காட்டினர், அதாவது, 7 கோடி முதல் 8 கோடியே 50 இலட்சம் மக்கள் வரை இப்போரில் இறந்ததாகக் மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிட்டதோ என்று பேரச்சம் கொள்ளும் அளவிற்கு நிலமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் போரும், தற்போது காசாவில் நிகழ்ந்து வரும் போரும் இதற்குச் சான்று பகர்கின்றன. கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி உரோமை நகரிலுள்ள போர் வீரர்களின் கல்லறையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, “இன்றைய போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம். முக்கியமாக, போரால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனை நாம் மறந்து விடக்கூடாது, பாலஸ்தீனத்தையும் இஸ்ரயேலையும் மறக்காதிருப்போம். இன்னும் போர் நீடிக்கும் பல பகுதிகளை நாம் மறந்து விடக்கூடாது” என்று விசுவாசிகளிடம் கூறினார். மேலும் “போர்கள் எப்போதும் தோல்வியைத்தான் தரும்” என்றும், “போர் என்பது மதியீனம்” என்றும் அடிக்கடி கூறிவருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் எப்போதும் போரை விரும்புவதில்லை. போர் எப்போதும் எதற்கும் தீர்வாகாது. என்பதற்கு அருமையானதொரு எடுத்துகாட்டைப் பார்ப்போம். தாவீது இளைஞனாக கோலியாத்தை போர்க்களத்தில் சந்திக்கின்றார். அப்போது அப்பெலிஸ்தியனான கோலியாத்தை நோக்கிக் கூறும்போது, "ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்" (காண்க 1 சாமு 17:47) என்கின்றார். அப்படியென்றால், ஆண்டவர் ஆயுதங்களை அல்ல அமைதியை விரும்புபவர் என்றுதானே பொருள்? மேலும், "ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும், சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!" (காண்க திபா 120:7) என்று உரைப்பதைப் பார்க்கின்றோம். இதன் காரணமாகவே, “உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்; வில்லை ஒடிக்கின்றார்; ஈட்டியை முறிக்கின்றார். தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்" என்கின்றார் தாவீது.
“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்” (காண்க யோவா 14:26-27) என்ற இயேசுவின் வார்த்தைகள் மனித வாழ்வில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. இங்கே, தூய ஆவியாரையும் அமைதியின் அடையாளமாகக் காட்டுகின்றார் இயேசு. காரணம், தூய ஆவியார் அமைதியை அருள்பவராக விளங்குகிறார். ஆண்டவரின் திருமுழுக்கின்போது தூய ஆவியார் புறா வடிவில் அவர்மீது இறங்கி வந்தார் என்பதைப் பார்க்கின்றோம். புறாவை இந்த உலகம் அமைதிக்கான அடையாளமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, பல்வேறு நிகழ்வுகளில் புறாவை பறக்க விடுகின்றனர். மேலும் பாவம் தனது வாழ்வை கறைபடுத்தியதால் அமைதியை இழந்து தவித்த தாவீது அரசர், “கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்” (காண்க திபா 51:10-11) என்கின்றார்.
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். "ஐயா, நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள்...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்' என்றார். மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு... ஐயோ விட்டு விடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், "ஐயா, நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள்தான் அதை விட்டுவிலக வேண்டும்” என்றான். உடனே ஞானி சிரித்துக் கொண்டே, "நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். ஆகவே, நீயே அதை விட்டுவிடு'' என்றார்.
நிலநடுக்கம், நிலச்சரிவு, பெருவெள்ளம், சூறாவளி, சுனாமி... இப்படி எத்தனையோ இயற்கைப் பேரிடர்களிலும், விபத்துக்களிலும் மனிதர் சிக்குண்டு உயிரிழப்பதைப் பார்த்தும் கூட ஆட்சியில் இருப்போரும் அதிகாரங்களைக் கொண்டிருப்போரும் மானிடரின் வாழ்வு நிலையற்றது என்பதை உணரத் தவறிவிடுகின்றனர். மாறாக, போர்களையும் மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கின்றனர். இன்றைய உலகில் மானுடத்தைச் சிதைத்தழிக்கும் ஒவ்வொரு போரும் இன்னொருபோரால் மறக்கடிக்கப்படுகின்றன, இதனால் மனிதமும் மழுங்கடிக்கப்படுகின்றது. உதாரணமாக, தற்போது தொடங்கியுள்ள இஸ்ரயேல் ஹமாஸ் போர் உக்ரைன் போரை மறக்கடிக்கச் செய்துகொண்டிருக்கிறது. இன்னொரு போர் வந்தால் இந்தப் போரும் மறக்கடிக்கப்படும். ஆனால் வெளியே நெருப்பு அணைந்துவிட்டது போன்று தோன்றினும், உள்ளே கனன்றுகொண்டேதான் இருக்கும். அதுபோலத்தான் போர்களும். ஒருபோர் மற்றொரு போரால் மறக்கடிக்கப்பட்டாலும் அதன் பேராபத்து உள்ளே கனன்றுகொண்டுதான் இருக்கும். நெருப்பு மொத்தமாக அணைக்கப்பட்டால்தான் எல்லாம் சரியாகும் என்பது போல போர் என்பது முற்றிலும் அழிக்கப்பட்டால்தான் கடவுளின் உருவில் படைக்கப்பட்ட மானிடர் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் காப்பற்றப்படுவர் என்பதை உணர்வோம். ஆகவே, போர் என்ற தீமையை நாமே பற்றிப் பிடித்துக்கொண்டு, ‘ஐயோ என்னை விட்டுவிடு.. ஐயோ என்னை விட்டுவிடு...’ என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் போரை விரும்பும் தலைவர்களின் நிலையும் இருக்கின்றது. "கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர்" (காண்க 1 கொரி 14:33) என்கின்றார் புனித பவுலடியார். ஆகவே, நம்மைப் படைத்த கடவுள் போரை வெறுத்து அமைதியை விரும்புவதுபோல நாமும் போர்களற்ற அமைதியான உலகை உருவாக்கப் பாடுபடுவோம். அதற்கான அருளுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்