லோய்காவ் பேராலயத்தை கேடயமாகப் பயன்படுத்த இராணுவம் திட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மியான்மாரிலுள்ள இராணுவ ஆட்சிக்குழு, லோய்காவ் மறைமாவட்டத்தின் பேராலய வளாகத்தை நவம்பர் 26, ஞாயிறன்று ஆக்கிரமித்த வேளை, அக்கட்டிடத்தை எதிர்ப்புப் படைகளுக்கு எதிரான போரில் ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் ஆயர் Celso Ba Shwe அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கயா மாநிலத்தின் தலைநகரான லோய்காவ் நகரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இராணுவ ஆட்சிக்குழு நவம்பர் 26 ஞாயிறன்று, கிறிஸ்து அரசர் பேராலயத்தின் வளாகத்தை கைப்பற்றியது என்றும், இந்த வளாகத்தில் ஆயர் இல்லம், மேய்ப்புப்பணி நிலையம், குருக்கள் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
இராணுவம் இப்பேராலய வளாகத்தைக் கைப்பற்றியபோது தன்னுடன் இவ்வளாகத்தில் 10 அருள்பணியாள்கள், 16 துறவுசபை சகோதரிகள் மற்றும் சில ஊழியர்கள் உட்பட 82 பேர் இருந்தனர் என்று ஆயர் Shwe அவர்கள் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
ஆயர் மற்றும் அங்குள்ள அருள்பணியாளர்கள் அனைவரும் அப்பேராலயத்தின் முக்கியத்துவம் குறித்து இராணுவ உயரதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அந்த இடத்தை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆயர் Shwe அவர்கள் எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் ஏறத்தாழ 50 இராணுவ வீரர்கள் வந்து அப்பேராலய வளாகத்தை எதிர்ப்புப் படைகளுக்கு எதிராக ஒரு கேடயமாகப் பயன்படுத்த ஆக்கிரமித்துள்ளனர் என்று அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றில் ஆயர் Shwe அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிறிஸ்தவ மதத்திற்குச் சொந்தமான இப்பேராலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டால் எதிர்ப்புப்படை முன்னேறி வராது என்று இராணுவ ஆட்சிக்குழு கருதுவதாக தலத்திருஅவையைச் சார்ந்த ஆதாரம் ஒன்று தெரிவிப்பதாகவும் யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மியான்மாரின் மிகச்சிறிய மாநிலமான கயா, கரேனி மாநிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இதில் ஏறத்தாழ 3,00,000 மக்கள் உள்ளனர், அவர்களில் 45 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இதில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 91,000 பேர்.
மக்கள் கயா மாநிலத்தை விட்டு வெளியேறியதால், அங்குள்ள பங்குத்தளங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளன. இம்மறைமாவட்டத்தில் மொத்தம் 41 பங்குத்தளங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் குறைந்தது 26, தற்போதைய வன்முறைச் சம்பவங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில்தான் இருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்