தேடுதல்

மியான்மாரில் அமைதிக்காக வேண்டுதல் மியான்மாரில் அமைதிக்காக வேண்டுதல்  

மியான்மாரின் பேராலயத்தைக் கைப்பற்றியது அந்நாட்டு இராணுவம்!

மியான்மாரிலுள்ள கிறிஸ்து அரசர் பேராலயத்தை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் ஆயர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் இறைமக்களின் பாதுகாப்புக் குறித்துக் கவலையடைந்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மியான்மாரின் Loikaw மறைமாவட்டத்தின் பேராலயத்தை நவம்பர் 27, இத்திங்களன்று, இராணுவ வீரர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஆயர் Celso Ba Shwe, அருள்பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேராலய வளாகத்தில் இராணுவப் படைகளின் ஆக்கிரமிப்பு மனதிற்கு மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும்,  தங்களின் புனித இடம் இழிவுபடுத்தப்படும் என்பதால், தான் மிகவும் மனமுடைந்துவிட்டதாகவும் அம்மறைமாவட்டத்தைச் சேர்ந்த நம்பிக்கையாளர் Katherine Mu என்பவர் கூறியதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

நாங்கள் உலக அமைதிக்காகவும், எங்களின் நாட்டின் அமைதிக்காகவும், கயா மாநிலத்தின் அமைதிக்காகவும், லோய்காவ் நகரத்திற்காகவும் இறைவேண்டல் செய்துள்ளோம் என்று, அம்மறைமாவட்டத்தின் தலத்திருஅவை அதிகாரிகள் நவம்பர் 26 அன்று சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தனர் என்றும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நவம்பர் 26, ஞாயிறன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்து அரரசர் பெருவிழாவிற்குப் பின்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஆயர் Shwe அவர்கள் Loikaw மறைமாவட்டத்தின் ஆயராக கடந்த மார்ச் மாதத்தில்தான் பொறுப்பேற்றார் என்றும் அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 26, அதேநாளில் இராணுவ ஆட்சியாளர்களால் ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஐந்து குண்டுகள் அப்பேராலயத்தின் வளாகத்தைத் தாக்கின என்றும், ஆனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புக் காரணங்களால் தனது பெயரை வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, சனிக்கிழமை முதல் கயா மாநிலத்தில் Karenni  கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இராணுவ விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இருந்து அந்நகரில் வாழும் 50,000 மக்களில் 40,000க்கும் அதிகமானோர் வெளியே தப்பிச்சென்றுவிட்ட போதிலும், ஆயர் Shwe, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும் ஏறத்தாழ 50 பேர் அப்பேராலய வளாகத்தில்தான் தங்கியிருந்தனர் என அச்செய்தி கூறுகிறது.

மேலும் கயா மாநிலத்தில் எஞ்சியிருக்கும் இந்தக் கிறிஸ்து அரசர் பேராலயம், மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று. இது 1939-இல் கட்டப்பட்டது. இது பாரம்பரியமிக்க ஐரோப்பிய ஆலயக் கட்டிடக்கலை மற்றும் உள்ளூர் புத்தமத ஆலயக் கட்டிடக்கலை வடிவில் கட்டப்பட்டது. இப்பேராலயத்திலுள்ள மணி இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2023, 14:58