தொண்டுப்பணிகள் மற்றும் செபங்கள் வழியாக உடனிருப்போருக்கு நன்றி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேலில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தும் தொண்டுப்பணிகள் மற்றும் செபங்கள் வழியாக தங்களது உடனிருப்பைக் கொடுத்துக் காத்துவரும் மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.
அண்மையில் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை வலைதளப்பக்கத்தில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa. அவர்கள், எல்லா சூழ் நிலைகளிலும் ஏழைகளின் குரலுக்கு செவிசாய்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
கோவிட்-19 பெருந்தொற்று நோய், காசா 2021, பெய்ரூட் துறைமுக வெடிப்பு, சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என அனைத்து துயரமான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் தொண்டுப்பணிகள் வழியாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் முதுபெரும்தந்தை Pizzaballa.
தற்போதைய நெருக்கடி காசாவில் மரணம், அழிவு மற்றும் பசியை மட்டுமல்லாது, வேலையின்மையையும், புனித பூமி முழுவதும் பிற சமூக பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதுபெரும்தந்தை அவர்கள், காசாவில், துன்புறும் நமது அண்டை வீட்டாரையும் வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தவர்களையும் பாதுகாக்க மனிதாபிமான உதவிகள் எல்லை தாண்டி விரிவடைகின்றன என்றும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி உதவி வருகின்றனர் என்றும், வெறுப்பால் குறிக்கப்பட்ட இந்த சமூகத்தில், நம்பிக்கை, எதிர்நோக்கு அன்பு ஆகியவற்றின் விதைகளை விதைக்க தேவையான சூழலை மீண்டும் உருவாக்க தொடர்ந்து உதவுங்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார் முதுபெரும்தந்தை Pizzaballa.
உள்ளூர் ஒத்துழைப்பாளர்களின் உதவியானது ஒருங்கிணைப்பின் ஆற்றலை மக்களிடத்தில் வெளிப்படுத்தியது என்றும், உணவு, நீர், மருந்துகள், பொருட்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ள முதுபெரும்தந்தை அவர்கள், இந்த கடினமான நேரத்தில், சிதைக்கப்பட்ட நமது உலகத்தை மீண்டும் உருவாக்க, மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொண்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த எண்ணற்ற குடும்பங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் தலத்திருஅவைகள், உட்பட அனைத்து நிறுவனங்களையும் பாதிக்கும் நெருக்கடியை தாங்கள் எதிர்கொண்டிருப்பதாக எடுத்துரைத்துள்ள முதுபெரும்தந்தை அவர்கள், உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் தனது நன்றியினையும் செபத்தினையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்