வாரம் ஓர் அலசல் – வறுமை ஒழிப்பும் திருத்தந்தையும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒருமுறை புதிய ஒரு நாட்டிற்கு பயணம் சென்ற புலவர் ஒருவர், அரண்மனை வாயிலில் எண்ணற்றோர் மன்னரிடமிருந்து உதவித்தொகைப் பெற வரிசையில் நிற்பதைக் கண்டார். அந்நாட்டுப் புலவர் ஒருவர் இவரை அணுகி, பார்த்தீர்களா, எங்கள் மன்னர் அள்ள அள்ளக் குறையாமல் எம் நாட்டு மக்களுக்கு உதவிகளை வழங்கிக்கொண்டேயிருப்பார், என பெருமைப்படக் கூறினார். இதைக்கேட்ட வெளிநாட்டுப் புலவர், எங்கள் நாட்டில் எங்கள் மன்னர் உதவி என்று வழங்குவதேயில்லை, எம் மக்களும் யாருக்கும் பிச்சையிடுவதும் இல்லை என்று கூறினார். ஆச்சரியப்பட்ட உள்ளூர் புலவர், இப்படியும் கொடுமையான மன்னரும், கஞ்சத்தனமான மக்களும் உலகில் இருப்பார்களா, என அவரிடம் கேட்டார். அதற்கு வெளிநாட்டுப் புலவர் கூறினார், எஙகள் நாட்டில் அரசு உதவியைப் பெறும்வகையிலும், பிச்சையெடுத்து வாழவேண்டிய நிலையிலும் எவரும் இல்லை. அனைவரும் தன்னிறைவுப் பெற்று செல்வச் செழிப்பில் வாழ்கின்றனர். இப்போது கூறுங்கள், எந்த நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று.
அன்பு நெஞ்சங்களே, தேர்தல் நெருங்கி வரும்போது மக்களைச் சார்ந்து இருப்பதாக அரசுகள் காட்டிக்கொள்வதும், தேர்தலுக்குப்பின் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக தங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதும் இன்றும் நடந்து வரும் கண்கட்டு வித்தை. நாமும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை நம் வாக்குகளை விற்றுவிட்டு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏமாற்றப்பட்டவர்களாகவே வாழ்வதில் பெருமைப்படுகிறோம். எத்தனை அரசுகள் வந்து சென்றும், மாற்றி மாற்றி வாக்களித்தும் வறுமை ஒழிந்ததா என்றால் அதுதான் இல்லை. திட்டங்களும் சட்டங்களும்தான் மாறுகின்றனவே ஒழிய, தெருவாரத்தில் இரந்துண்பவன் 24 மணி நேரமும் வானத்தைத்தான் கூரையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வறுமையை ஒழிப்பது நமது காலத்தின் சவால். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது அதைவிட பெரும்சவாலாக உள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியில், ஒரு சூழலில், திருஅவை, கத்தோலிக்க திருஅவை என்ன ஆற்றவேண்டும் என தினமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். ஏழ்மை, மனிதத் துன்பங்கள் பற்றி நாம் ஏராளமான தகவல்களையும், புள்ளி விபரங்களையும் கொண்டிருக்கிறோம், இவற்றின் உண்மையான பிரச்சனைகளை நோக்காமல், வெறும் இனிய உரைகளால் இவற்றுக்குத் தீர்வு கூற முயல்கிறோம் என பலமுறை கண்டித்துள்ளர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். செயலில் வெளிப்படாத விசுவாசம் தேங்கிக் கிடக்கும் விசுவாசம், மாறாக, பிறரன்பு வழியாக வெளிப்படும் விசுவாசமே உண்மையானது என்பதை அவரேத்தான் கூறியுள்ளார். அப்படியானால், தெருவில் கைவிடப்பட்டோரின் கண்களில் இறைவனின் சாயலைக்காண நாம் தயாராக இருக்கிறோமா? தமிழக நல்மனதுடையோர் கூறுவது போல், எழையின் சிரிப்பில் இறைவனை நாம் காண்கிறோமா? இவைகளை வலியுறுத்தித்தான் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் உலக வறியோருடன் இணைந்து, அவர்களுக்கென திருப்பலி நிறைவேற்றுவதோடு, அவர்களோடு ஒரு நேர உணவையும் உண்கிறார் திருத்தந்தை. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழையாக உணவு உண்ணும் அவர், ஒரு நாள் ஏழைகளோடு உணவு உண்கிறார். ஏழைகளின் துயரநிலைகளை உணர்ந்து அறிந்த ஒருவரால்தான் அவர்களுக்காக பேசமுடியும், மற்றும் அவர்களுக்காக உழைக்க முடியும்.
ஏன் நம் திருத்தந்தை ஏழைகள் மீது இவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பது குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மைப் பாதிக்காத துன்பத்தை மறக்கும் ஆபத்து பலருக்கு உள்ளது. கண்டு கொள்ளாமல் செல்வதும், பாராமுகமாகச் செல்வதும் இன்றைய நவீன உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு போக்காக மாறிவிட்டது. உலகில் இன்று உற்பத்தியாகும் உணவைக் கொண்டு அனைத்து மனிதர்களும் வயிறார உண்ணமுடியும் என்றாலும், பகிர்வதில் நம்மிடம் உள்ள குறைகளால் இன்னும் பல கோடி மக்கள் உணவின்றி துன்புறுவது அதிர்ச்சி தரும் இழிச்செயலாக உள்ளது. புனிதர் அன்னை தெரேசா பற்றி உலகம் சொல்லும்போது அவர் தினமும் பலமணி நேரம் திருநற்கருணை ஆராதனையில் செலவழித்தார் என்று சொல்வதில்லை, ஆனால் அவர் பிறருக்காக நிறைய அன்புப் பணிகளைச் செய்தார் என்றுதான் சொல்கிறது. இதையெல்லாம் மீண்டும் மீண்டும் நம்மிடம் வலியுறுத்துதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 19ஆம் தேதி கடந்த ஞாயிறன்று உலக வறியோர் தினத்தைச் சிறப்பித்தபோது, நம்மிடையே வறுமையில் வாடும் மக்களை நினைவுகூர்ந்து, நம் செல்வங்களை பிறருக்கு பயன்படாவகையில் மண்ணில் புதைத்து வைக்காதிருப்போம் என்றும், பிறரன்பு என்னும் பெரும்கொடையை எங்கும் பரப்பி, நம் உணவைப் பகிர்ந்து அன்பை பலுகிப் பெருகச் செய்வோம் எனவும் கேட்டுக் கொண்டார். 10 ஆண்டுகளாக திருஅவையை இவ்வுலகில் வழி நடத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போது நாம் நிம்மதியாகத் தூங்க முடியுமா எனவும், மக்கள் பசியால் வாடும்போது நம் கண்முன்னே பெருமளவான உணவுப்பொருள்களும், உணவுகளும் வீணாக்கப்படுவது நியாயமானதுதானா எனவும், நமக்கு அருகில் வாழும் வறியோரைக் காண முடியாதவாறு உலகப் போக்கில் சிந்திக்கும் எண்ணங்கள், நம் ஆன்மாவை இருளில் புதைத்துவிடவில்லையா எனவும் மீண்டும் மீண்டும் நம்மை நோக்கிக் கேட்டுவருகிறார். நம்மிடமிருந்து இதுவரை எவ்விதப் பதிலும் இல்லை. உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், வறுமையின் வலியை அனுபவிக்காமல், அவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.
யமோரா தெஸ்ஸோ (Yamora Tessho) என்ற ஜென் குரு, நாட்டு மன்னருக்கு ஆசிரியராக இருந்தார். அவருடைய வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும். அவர் எப்பொழுதும் வறுமை நிலையிலேயே இருந்தார். அவரிடம் ஓர் ஆடைக்கு மாற்று ஆடைகூட இல்லை. அந்த அளவுக்கு அவரது வாழ்வு எளிமையாக இருந்தது. இந்த ஜென் குருவின் வறுமை நிலையைக் கண்ட மன்னர், அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, புதிய ஆடைகளை வாங்கிக் கொள்ளும்படிக் கூறினார். ஆனால், அடுத்த முறை, யமோரா அவர்கள் மன்னரிடம் சென்றபோது, தனது பழைய ஆடையையே உடுத்தியிருந்தார். இதைப் பார்த்த மன்னர், குருவே, புதிய ஆடை என்னவாயிற்று?” என்று கேட்டார். அதற்கு யமோரா அவர்கள், “அரசே, என்னிலும் ஏழையாக இந்நாட்டில் வாழும் உங்கள் குழந்தைகளுக்கு நான் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டேன்” என்றார். அனுபவித்தவருக்குத்தான் அந்த வலி தெரியும்.
வறுமை என்பது ஒரு தனி மனிதனுக்கு மனித உரிமைகளை மறுப்பது. வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலக மக்கள்தொகையில் 8.4% அல்லது 67 கோடி மக்கள் கடுமையான வறுமையில் வாழ்ந்திருந்தனர். அதேவேளை, உலக மக்கள்தொகையில் 7 விழுக்காடு, அதாவது, ஏறக்குறைய 57 கோடியே 50 இலட்சம் மக்கள், வரும் 2030-ல் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் நிலை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு, தண்ணீர், நலவாழ்வு மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையே வறுமை என வரையறை செய்யப்படுகின்றது. அந்தவகையில் தமது அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்ற குறைந்தளவு தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு நிலையே வறுமையாகும். இந்த நிலை, மனிதனின் அடிப்படை வாழ்வாதாரங்களை பாதித்து தனிமனித விழுமியங்களை சிதைப்பதுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் சீர்குலைத்து நிற்கின்றது. ஏனெனில், வறுமையைப் பற்றியச் சிந்தனைக்கு மிக்கியத்துவம் கொடுக்காமல், ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைப் பற்றி திட்டமிட முடியாது என்பது நாம் அறிந்ததே.
அண்மையில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகின் செல்வந்தர்கள் தங்கள் சொத்து மதிப்பில் 852 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளனர். உலகின் 2,640 பெரும் கோடீஸ்வரர்களின் செல்வத்தின் அதிகரிப்பு 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்குப் பிறகு ஆறு மாதங்களில் மிகப் பெரிய உயர்வாகும். உலகளாவிய அடிமட்ட வறியவர்கள் 50 விழுக்காட்டினர் 2 விழுக்காட்டு செல்வத்தை வைத்திருக்கிறார்கள். உலகின் பணக்காரர்களில் முதல் 10 விழுக்காட்டினர், மொத்த தனிப்பட்ட செல்வத்தில் 76 விழுக்காட்டு செல்வத்தை வைத்திருக்கிறார்கள். மற்றும், 2021 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தில் 52 விழுக்காட்டைக் கைப்பற்றியுள்ளார்கள்.
இதற்கிடையே, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகின் நான்கில் மூன்று பகுதி அரசுகள் 7.8 டிரில்லியன் டாலர்கள் அளவில் பொது செலவினங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளன. இப்போது சொல்லுங்கள், இதனால் வறுமை குறையுமா?, அதிகரிக்குமா?.
நாம் ஆண்டவருக்குச் செலுத்தும் வழிபாடு ஏற்புடையதாய் இருக்கவேண்டுமெனில், ஒவ்வொரு மனிதரையும், கடும் ஏழ்மையில் வாழ்வோரையும், கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்று ஏற்கவேண்டும் என்று விண்ணப்பிக்கும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைத்துச் செயல்களின் முடிவு, அன்பு மட்டுமே, இதுவே நம் பயணத்தின் இறுதி இலக்கு மற்றும், இதிலிருந்து எதுவும் நம் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்றும், இந்த அன்பு, பகிர்வு, அர்ப்பணிப்பு, மற்றும் பணியில் வெளிப்படுவதாகும் என்றும் கூறியுள்ளார்.
“ஏழைகளுக்கு உதவிசெய்ய உன் கரத்தைத் தாராளமாய் நீட்டு” (சீராக் 7,32) என்று சீராக்கின் ஞானம் எடுத்துரைத்திருக்க, சில கரங்கள், ஆயுதங்களை விற்று பணத்தைச் சேமிக்கின்றன, மேலும் சில கரங்கள், செல்வராயும், ஆடம்பரத்திலும் வளருவதற்கும், ஊழல்முறையில் இலாபம் தேடுவதற்கும் சப்தமின்றி இலஞ்சம் கொடுக்கின்றன என்றும் திருத்தந்தை தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். மரணங்களை விதைக்கும் இந்தக் கரங்கள், உலகம் அனைத்திற்கும், நீதி மற்றும், அமைதியின் கருவிகளாக மாறாதவரை, நாம் மகிழ்வாக இருக்க இயலாது என்பதும் அவர் கூற்றுதான்.
பயனற்றவை தூக்கி எறியப்படவேண்டும் என்ற கருத்தில் வளர்ந்துவரும் இன்றைய உலகில், பயனற்றதென கருதப்படும் மனித உயிர்களையும் தூக்கி எறியும் போக்கு வளர்ந்துள்ளது. வறுமையை ஒழிப்பது என்பது ஏழைகளுக்கு உதவுவது மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் மாண்புடன் வாழ வாய்ப்பளிப்பதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்