தேடுதல்

புனித பூமியின் பொறுப்பாளர் அருள்பணி பிரான்சிஸ்கோ பாட்டன் புனித பூமியின் பொறுப்பாளர் அருள்பணி பிரான்சிஸ்கோ பாட்டன் 

காசா மீது கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு

பொதுமக்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளார் புனித பூமியின் பொறுப்பாளர் அருள்பணி பிரான்சிஸ்கோ பாட்டன்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இத்தாலிய பிரான்சிஸ்கன் சபையின், புனித பூமியின் சங்கங்களின் கூட்டத்தில், பல்வேறு திட்டங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்தது, நவம்பர் 11 அன்று உரோமில் உள்ள பாப்பிறை பல்கலைக்கழகம் அந்தோனியானத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற, புனித பூமியின் பொறுப்பாளர் அருள்பணி பிரான்சிஸ்கோ பாட்டன் அவர்கள் வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகளையகற்றி மனித உயிர்களைக் காப்பாற்றவும், பாதுகாப்பதற்குமான அவசர தேவையை வலியுறுத்தினார்.

காசாவில் குண்டுவெடிப்புகளைச் சகித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் நிலைமை குறித்து பதிலளித்த போது, அவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சமடைந்துள்ளதாகவும், குறைந்த பட்சம் வழிபாட்டுத் தலங்களாவது மதிக்கப்படுகின்றன என்றும், காசாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த கடினமான தருணத்தை கடக்க முடியும் என்றும் அருள்தந்தை பாட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புனித பூமியில் தன்னார்வலர்கள் உலகத்திற்கும் புனித பூமிக்கும் இடையே பாலங்களை உருவாக்குவதில் பெரும் பங்களிக்கிறார்கள் என்றும்,  எதிர்காலத்தைப் பொறுத்தவரை, போர் முடிந்ததும், புனித பூமியிலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களின் பாதுகாப்பையும், தங்கள் குழந்தைகள் வெறுப்பு சூழலில் வளர்வதை விரும்பாமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு,  அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியேறலாம் என்று அஞ்சுவதாகவும் தனது கவலையை தெரிவித்துள்ளார் அவர்.

புனித பூமியிலும் மத்திய கிழக்கு முழுவதும் கிறிஸ்தவர்களாக இருப்பது ஒரு சிறப்பு அழைப்பே தவிர அது சாபம் அல்ல என்பதை கிறிஸ்தவர்கள் ஆழமாக நம்ப வேண்டும் என்றும், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பாலமாக அவர்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர், அவர்கள் வெளியேறினால், சகவாழ்வுக்கான இடம் மேலும் குறைபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணி பாட்டன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2023, 15:04