இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வர ஐரோப்பிய ஆயர்கள் வேண்டுகோள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியில் நிகழ்ந்து வரும் போர் குறித்து மிகவும் கவலையடைந்துள்ள ஐரோப்பிய தலத்திருஅவைகளின் தலைவர்கள் அனைத்து வழிகளிலும் போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான தங்கள் பொறுப்பைச் செயல்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளின் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
புனித பூமியில் நிகழ்ந்து வரும் போர் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பியத் தலத்திருஅவைகளின் தலைவர்கள், வாழ்க்கையின் அழிவு என்பது சுதந்திரம், உண்மை, நீதி ஆகியவற்றை வழங்குவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளதுடன், அனைத்துலகச் சட்டத்தை நிலைநிறுத்த உலகளாவிய சமூகத்தை அணிதிரளுமாறு தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும், அமைத்திக்கான தீவிரமான உரையாடல்களை ஊக்குவிக்குமாறும் விண்ணப்பித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய அனைவரின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள தலத்திருஅவைகளின் தலைவர்கள், கவனிப்பு மற்றும் வெளியேற்றத்திற்கான வழிமுறைகளை அனுமதிக்க மனிதாபிமான வழிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காசா மக்கள் வாழும் கடுமையான சூழ்நிலை, அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தி அநீதிகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயநிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அம்மக்களின் இந்தத் துயரநிலை நீண்ட காலமாக நடந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறது அவர்களின் அறிக்கை.
தீவிரமான பேச்சுவார்த்தைகள் உண்மையிலும் நீதியிலும் நிலையான அமைதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் உரைத்துள்ள ஆயர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அமைக்காக உழைப்பவர்களுடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும், ஒரு இலக்கை நிலைநிறுத்த வன்முறை ஒரு வழியாக இருக்க முடியாது என்றும் அவ்வறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், ஜோர்டான் நாட்டுத் தலத் திருஅவைகளின் தலைவர்கள் இப்போரினால் துயருறும் அனைத்து மக்களுடனும் தங்களின் ஒன்றிப்பை வெளிக்காட்டும் விதமாக, அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை இரத்து செய்வதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்