தடம் தந்த தகைமை – இறைவனுக்கு எதிராக பாவம் செய்த ஓம்ரி
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான். அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான். ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். ஓம்ரியின் மகன் ஆகாபு ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைத் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகுதியாய்ச் செய்தான். நெபாற்றின் மகன் எரொபவாமின் வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள் ஈசபேலை மணந்துகொண்டு பாகால் தெய்வத்தை வணங்கி வழிபடலானான்.
மேலும், சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான். அதுவுமின்றி, ஆகாபு அசேராக் கம்பத்தை நிறுத்தி, தனக்கு முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்கள் எல்லாரையும்விட மிகுதியாக, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான். அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான் நூனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும் அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்