தடம் தந்த தகைமை - இஸ்ரயேல் அரசன் ஏலா
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான். அவனது தேர்ப்படையின் பாதிக்குத் தலைவனாய் இருந்த சிம்ரி என்ற அவனுடைய பணியாளன் அவனை ஒழித்து விடச் சூழ்ச்சி செய்தான். திர்சாவில் அரண்மனை மேற்பார்வையாளன் அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்துபோது, சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.
அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை. இவ்வாறு, இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான். பாசாவும் அவன் மகன் ஏலாவும் பல்வேறு பாவங்கள் செய்ததாலும், இஸ்ரயேல் பாவம் செய்யக் காரணமாய் இருந்து சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டியதாலும், இது நேர்ந்தது. ஏலாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்