தேடுதல்

இஸ்ராயேலில் சமாரியர்களின் விழா இஸ்ராயேலில் சமாரியர்களின் விழா  (AFP or licensors)

தடம் தந்த தகைமை – இஸ்ரயேலரின் மேல் அந்தியோக்கின் கொடுமை

எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னன் அந்தியோக்கின் கட்டளை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் மன்னன் அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில் வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்; அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை, காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள், கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்; வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்; ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்; இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்; தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் இஸ்ரயேலைக் குறித்து அழுது புலம்பினார்கள்………..

மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும் யூதாவின் நகரங்களுக்கும் மடல்களை அனுப்பி வைத்தான்; யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்; எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்; ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்; திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்; பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள், சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்குகளையும் பலியிடவேண்டும்; அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து, தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும் அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும். மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள். மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித் தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்;

நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள். மேலும், யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள். எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை. தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள். பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்; அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.

எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்; உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச் சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2023, 13:08