தடம் தந்த தகைமை – பொல்லாத மன்னரால் துன்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அலக்சாண்டருக்குப்பின் ஆட்சி செய்தவர்களின் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்; அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.
அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, “வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன” என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர். இது அவர்களுக்கு ஏற்படையதாய் இருந்தது. உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான். வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்; விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள்.
அந்தியோக்கு எகிப்தைக் கைப்பற்றல்
அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின், இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன் எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்; ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு எகிப்து நாட்டில் புகுந்தான். எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே, தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்; அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர். எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன. அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்