அப்பாவி இரத்தம் சிந்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
அக்டோபர் 17ஆம் தேதி புனித பூமியின் அமைதிக்காக, உண்ணாவிரதம் மற்றும் இறைவேண்டுதலுக்கான எருசலேமின் லத்தீன் வழிப்பாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்ஸபால்லா அவர்களின் அழைப்பை ஏற்று, புனித பூமியின் அண்மை நிகழ்வுகள் ஆழ்ந்த கவலை மற்றும் துக்கத்தின் தருணமென, பன்னாட்டு பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியம் (UISG) தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது,
இச்சூழ்நிலையில் நம்பிக்கையின் சுடராக, உலகளாவிய சமூகமாக ஒன்று கூடி, வன்முறையின் மீது அமைதியும், சண்டையின் மீது நீதியும், வெறுப்பின் மீது நல்லிணக்கமும் வெற்றிபெற இவ்வுலகத்திற்காக வேண்டுதல் செய்வதற்கான நேரமிது என்று நம்புவதாக பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியத்தின் (UISG) தலைவர் அருள்சகோதரி மேரி டி. பரோன் தெரிவித்துள்ளார்.
தந்தையாகிய கடவுளிடம் அனைவரும் ஒன்றுபடுதல் மூலம் சமாதானம் மற்றும் நீதிக்கான நமது விருப்பத்தை நனவாக்க முடியும் என்றும், அனைத்து மதங்களின் உறுப்பினர்களையும் அவர்களுடன் பணிபுரிபவர்களையும் உலகளாவிய வேண்டுதல் தினத்தில் பங்கேற்குமாறும் பன்னாட்டு பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியம் ஊக்குவித்துள்ளது.
இதற்கிடையே, அனைத்து மக்களின் சார்பாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நோன்பு மற்றும் வேண்டுதல் தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கர்தினால் பிட்ஸபால்லா அவர்கள், கடினமான நேரங்களைத் தாங்குவதற்கான வலிமையையும் அமைதியையும் கடவுளிடம் மன்றாடுவதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெரிய மற்றும் சிறிய சமூகங்களில் ஜெபமாலை செபித்து அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கவும், நற்கருணை ஆராதனையில் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையினை தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நோன்பு மற்றும் இறைவேண்டல் நாளுக்கான அழைப்பை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் போரின் கொடூரமான சக்தியை எதிர்ப்பதற்கான சாந்தமான மற்றும் புனிதமான சக்தி இறைவேண்டல் என்று கூறிய அவர், மேலும் இனி எந்த ஓர் அப்பாவி இரத்தத்தையும், புனித பூமியிலோ, உக்ரைனிலோ, அல்லது வேறு எங்கும் சிந்த வேண்டாம், போர்கள் போதும், அவை எப்போதும் தோல்வியே என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்