பொதுக் காலம் 25-ஆம் ஞாயிறு : கடவுள் காட்டும் சமத்துவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 55: 6-9 II. பிலி 1: 20c-24, 27a III. மத் 20: 1-16a)
பெருநகரம் ஒன்றில் இரண்டு சகோதரர்கள் ஞாயிறுதோறும் பங்குப் பணிக்காகச் சென்று வந்தனர். அதிகாலை இருவரும் சென்றுவிட்டு மாலை தங்களின் துறவு இல்லத்திற்குத் திரும்புவர். முதலாமவர் பல்வேறு திறமைகளைப் பெற்றவர், நன்றாகப் பாடுவார், இசைக்கருவிகள் மீட்டுவார், மறையுரையாற்றுவார், மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார். ஆகவே, அவர் அப்பங்கின் பாடகர்குழுவிற்குப் பொறுப்பாக இருந்தார். திருப்பலி மிகவும் பக்தி நிறைந்ததாக இருக்க பாடல்கள் வழி துணைநின்றார். திருப்பலி முடிந்ததும் ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பாடல் பயிற்சி கொடுப்பார். இரண்டாமவர் திருப்பலி முடிந்ததும் மறைக்கல்வி மட்டும் சொல்லிக்கொடுப்பார். திருப்பலிக்குத் தேவையான உதவிகள் செய்வார். மக்களுடன் நன்கு பழகக்கூடியவர். அவ்விரு சகோதரர்களுமே நல்ல நட்புடன் பழகி வந்தனர். டிசம்பர் மாதம் வந்தவுடன் பாடகர் குழுவினர் மற்றும் பங்குத்தந்தையுடன் ஒவ்வொரு இல்லமாகச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதற்கு உதவினார் முதலாமவர். அது பெருநகரமாக இருந்ததால் பல்வேறு குடியிருப்புகளில் பலமாடிகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. மிகவும் சிரமப்பட்டு இதனைச் செய்துவந்தார் அச்சகோதரர். ஆனால், இரண்டாமவர் இந்தக் கிறிஸ்துமஸ் கேரல்சுக்கு வரவில்லை. காரணம், அவருக்குப் பாட வராது. ஆதலால் அவரது திறமைக்கு ஏற்றவாறு பங்குப் பணிகளை செய்துகொண்டிருந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுத் திருப்பலிகள் முடிந்து இரண்டு சகோதரர்களையும் அழைத்த பங்குத் தந்தை ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் கொடுத்தார். அப்போது முதலாமவருக்கு முகம் சுருங்கிவிட்டது. ஒருமாதத்திற்கும் மேலாக ஒவ்வொரு இல்லமாக ஏறி இரங்கி மிகவும் கடினப்பட்டு கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தேன். ஆனால், இருவருக்கும் சரிசமமாக 2000 வீதம் கொடுத்துவிட்டாரே. தனக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வருத்தப்பட்டுக்கொண்டார். இதனைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட இரண்டாமவர் பங்குத் தந்தையிடம் சென்று, “சாமி, நீங்க இரண்டு பேருக்கும் ஒரேஅளவு பணம் கொடுத்ததால் அச்சகோதரர் மிகவும் வருத்தமடைந்துள்ளார். எனக்கு வேண்டுமானால் 1000 ரூபாய் குறைத்துக்கொண்டு அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள். எனக்கு 1000 ரூபாயே போதும்” என்றார். அப்போது முதலாமவரை அழைத்த பங்குத்தந்தை, “பிரதர் அவரு சொல்றது உண்மையா” என்று கேட்டபோது,, ஆமாம் சாமி எனக்கு வருத்தம்தான். நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல... எனக்குப் பணம் முக்கியம் இல்லையென்றாலும் இதில் சமத்துவம் இல்லையே சாமி” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். அப்போது பங்குத்தந்தை, “நீங்க நினைப்பதுபோல நான் நினைக்கல பிரதர். எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான். நான் உங்களை பிரிச்சுப் பார்க்கல. அதுமட்டுமல்ல, இங்கு வரும் எல்லா சகோதரர்களுக்கும் நான் இதேமாதிரிதான் ஆண்டுதோறும் செய்யுறேன். என்னைய பொறுத்தளவில் பணத்தைவிட உறவுகள் ரொம்பவும் முக்கியம் பிரதர்” என்றாராம். இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடத்தில் பகிர்ந்துகொண்டார்.
பொதுக் காலத்தின் 25-ஆம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் இறைவன் சமமாகவே நடத்த விரும்புகின்றார் என்ற உன்னதமான கருத்தை உரக்கச் சொல்கின்றன. இன்றைய நற்செய்தியை நாம் வாசிக்கும்போது, இது மிகவும் அநீதீதியாக இருக்கின்றதே என்றுதான் நமக்குச் சொல்லத்தோன்றும். ஆனால், அதனைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அது உண்மையல்ல என்பதும், கடவுள் எப்போதும் அனைவரையும் சமமாகவே நடத்த விரும்புகின்றார் என்பது புரியவரும். மேலும் இயேசு கூறும் இந்த உவமையில் கூலியை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்தித்தால் அநீதியாகத்தான் தோன்றும். ஆனால் அதேவேளையில், கூலியைவிட வேலையின்றி இருக்கும் நபர்களைக் கண்ணோக்கி, அவர்களின் துயர்களைக் கருத்தில்கொண்டு நிலக்கிழார் இந்த முடிவை எடுக்கின்றார் என்பதை நாம் உணர்ந்துகொண்டால் அவரின் பார்வையில் இது சரி என்றே தோன்றும். 'நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி' என்பதில்தான் அவரது சமத்துவம் நிலைநிற்கிறது. அவரைப் பொறுத்தமட்டில் அதுவே நீதி. விடியற்காலையிலும், காலை ஒன்பது மணிக்கும், நண்பகல் பன்னிரண்டு மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் தான் கண்ட அனைவரும் வேலையின்றி நிற்பதைக்கண்டு அவர்களையும் தனது திராட்சை தோட்டத்திற்கு அனுப்புகின்றார் நிலக்கிழார். அவர்களுக்குப் பேசப்பட்ட கூலி சரியாகக் கிடைக்கிறது. உலகின் பார்வையில் இது அநீதியாகத் தோன்றினாலும் கடவுளின் பார்வையில் இது நீதியானச் செயலே என்பதை இந்த உவமை வழியாகப் புலப்படுத்துகின்றார் இயேசு. இதன் காரணமாகவே, "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று கடவுள் தனது மனநிலையை எடுத்துரைப்பதாக இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது.
ஆம், உண்மையில் மனிதர் நினைப்பதுபோன்று கடவுள் நினைப்பதில்லை. காரணம் மனிதர் நினைப்பதில் சுயநலமும் பேராசையும், பொறாமையும், வேற்றுமை உணர்வுகளும் கலந்திருக்கின்றன. அதனால்தான் இந்த உவமையின் இறுதியில், அதாவது, வேலைமுடிந்து கூலிவாங்க வரும் வேளை, அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே என்றார்கள்’ என்று கூறுவதன் வழியாக அவர்களின் எண்ண ஓட்டங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் இயேசு. அதேவேளையில், அந்நிலக்கிழார், அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்று கூறுவதாக எடுத்துக்காட்டுவதன் வழியாக, கடவுள் எப்போதும் நன்மையே நிறைந்தவராக இருக்கின்றார் என்றும் அவர் மனிதர்களில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார் இயேசு.
இப்படியும் வித்தியாசமாகச் சிந்தித்துப் பார்ப்போம். நம் கத்தோலிக்கத் திருஅவையில் பல்வேறு நிலைகளில் புனிதர்கள் இருக்கிறார்கள், எடுத்துக்காட்டாக கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்ட மறைசாட்சிகளாகிய புனிதர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நான்கு சுவருக்குள் தூய வாழ்வு வாழ்ந்த புனிதர்களும் இருக்கிறார்கள். இன்னும் வயது வரம்பின்றி எல்லா நிலைகளிலும் புனிதர்கள் இருக்கிறார்கள். இங்கே ஒன்றை கற்பனை செய்து பார்ப்போம். எடுத்துக்காட்டாக, மறைச்சாட்சியான ஒரு புனிதர் ஆண்டவராம் இயேசுவிடம் சென்று, “என்ன இயேசுவே இப்படி செய்திட்டிங்க... உங்களுக்காக சொல்லமுடியாத அளவிற்குத் கொடுந்துயரங்களை அனுபவித்து கொல்லப்பட்ட நானும் புனிதர். அதேவேளையில், வெறுமனே நான்கு சுவற்றுக்குள் இருந்து செபம் செய்து வாழ்ந்து இறந்த இவரும் புனிதரா...? இது நீதியானதா...? நீங்களே சொல்லுங்க...? என்று முறையிடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அவருக்கு இயேசு வழங்கும் பதில்மொழி என்னவாக இருக்கும்? “நீங்கள் வெவ்வேறு நிலைகளில் இறந்திருந்தாலும், ஒரே காரணத்திற்காக, அதாவது, இறையாட்சிக்குச் சான்று பகரும் வண்ணம் இறந்திருக்கின்றீர்கள். அதற்குரிய பரிசுதான் இது. எனக்கு எல்லாருமே ஒன்றுதான், நான் எவ்வித வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை” என்றுதான் கூறியிருப்பார் அல்லவா?
"கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்ற வார்த்தைகளோடு இயேசு இந்த உவமையை முடிக்கின்றார். அவர் ஏன் இந்த உவமையைக் கூறினார் என்ற கேள்விக்கான பதிலும் இதில்தான் அடங்கியிருக்கின்றது. யூதச் சமுதாயத்தில், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக் குருக்கள் ஆகிய அனைவரும் தங்களை மட்டுமே கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகக் கருதிக்கொண்டு சமாரியார், வரிதண்டுவோர் போன்ற மற்றவர்களைத் தங்களுக்கும் கீழானவர்களாகவும் தீட்டானவர்களாகவும் கருதினர். எனவேதான், இது தவறு, கடவுளைப் பொறுத்தமட்டில் எவ்வித பாகுபாடும் கிடையாது, அவரதுப் பார்வையில் அனைவரும் சமம் என்பதைக் காட்டவே இந்த உவமையை இயேசு கையாண்டிருக்கின்றார். இன்னும் குறிப்பாக, அவர்கள் யாரைத் தீட்டானவர்களாகக் கருதி புறம்தள்ளினார்களோ அவர்கள்தாம் கடவுளின் பார்வையில் முதன்மையானவர்களாகக் கருதப்படுவர் என்பதையும் இவ்வுவமையின் வழியாக சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. இதன் காரணமாகவே, தங்களை மிகவும் யோக்கியமானவர்களாகக் காட்டிக்கொண்டு பசுந்தோல்போர்த்திய புலிகளாக வலம்வந்து கொண்டிருந்த மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் கடுமையாகக் கண்டிப்பதையும் பார்க்கின்றோம். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால். அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள் (காண்க மத் 23:2-7). மேலும் வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, குருட்டு வழிகாட்டிகளே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே ஐயோ! உங்களுக்குக் கேடு என்றெல்லாம் இயேசு பயன்படுத்தும் வார்த்தைகள் யூத சமுதாயத்தில் புரையோடிப்போயிருந்த வேற்றுமைகளை உடைத்தெறிவதற்கான சம்பட்டிகள் என்பதையும் உணர்ந்துகொள்வோம்.
ஓர் ஊரில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவர் ஊருக்கு வெளியே சற்று தொலைவில் குடிசையில் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டுக்குத் தேவையான தண்ணீரை ஊருக்குள் இருந்து இருபானைகளில் சேகரித்து எடுத்துக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பானைகளில் ஒன்று மிகவும் பழையது. ஆகையால், அப்பானையின் அடிப்பரப்பில் இருந்து சற்று உயரத்தில் ஓட்டை விழுந்தது. ஆதலால் பாட்டி நீரினை ஓட்டைப் பானையில் சேகரித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது பானையின் கொள்ளளவில் கால்பகுதிதான் இருக்கும். ஆனாலும், பாட்டி ஓட்டைப் பானையைக் கொண்டு தினமும் தண்ணீர் எடுத்து வருவார். ஒருநாள் பாட்டி தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் பானைகளில் நல்ல பானை ஓட்டைப் பானையைப் பார்த்து “உன்னால் நம் பாட்டிக்குத் தொந்தரவு தான். உன்னால் ஒரு பயனும் இல்லை. ஆனால், என்னைப் பார் என்னில் நிரப்பப்படும் நீரினை முழுவதுமாக வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறேன். நீயோ உன்னுடைய ஓட்டையின் மூலம் தண்ணீரை வீணாக்கிப் பாட்டியை துயரப்படுத்துகிறாய்” என்று கேலி பேசி ஏளனமாகச் சிரித்தது. இதனைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்த ஓட்டைப் பானை “நானும் உன்னைப் போல் இளமையில் நன்றாகத்தான் பாட்டிக்கு உழைத்தேன். எனக்கு வயதாகி விட்டதால் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. அதற்கு நான் என்ன செய்வது?” என்று கூறி கவலைப்பட்டது. பானைகளின் உரையாடலைக் கேட்ட பாட்டி ஓட்டைப் பானையிடம் “நீ கவலைப்படாதே. உன்னிடம் உள்ள ஓட்டையிலிருந்து ஒழுகும் நீர் சிந்தும் இடங்களில் எல்லாம் சின்னஞ்சிறிய பூக்களின் விதைகளைப் போட்டு வைத்தேன். உன்னிடம் இருந்து கிடைக்கும் நீரினால் அவ்விதைகள் முளைத்து தற்போது பூத்துக் குலுங்குகின்றன. நீ அதனைக் கவனித்தது இல்லையா?. இனியும் நீ உன்னை உபயோகமற்றவனாகக் கருதாதே” என்று கூறினார். அதனைக் கேட்டதும் ஓட்டைப்பானை தன்னுடைய தாழ்வான எண்ணத்தை மாற்றிக் கொண்டது. தான் பயனுள்ளவனாக இருந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து மகிழ்ந்தது. அதேவேளையில், நல்ல பானை தனது ஆணவத்தால் தலைகவிழ்ந்தது.
ஆகவே, யாரையும் எதற்காகவும் தாழ்வானவர்களாகக் கருதி வெறுத்தொதுக்கும் மனப்பான்மையைக் களைந்தெறிவோம். இயேசுவின் பாதையில் அவருடன் இணைந்து பயணித்து அவரைப்போல் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மக்களாக வாழ்வதற்கான அருளை வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்