2023ஆம் ஆண்டிற்கான இளையோர் மாமன்ற வரைவு அறிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
இளைஞர் பணி இணைந்து பயணித்தலாக இருக்க வேண்டும்; அது ஒன்றாகப் பயணம் செய்வதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்' என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இளைஞர் மாமன்றம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தென்னிந்தியாவின் வேளாங்கண்ணியில் நடைபெற்று அதன் வரைவு அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் வேளாங்கண்ணியில் நடைபெற்ற தமிழக இளைஞர் மாமன்றத்தில் 17 மறைமாவட்டங்களிலிருந்து 95 இளம்பெண்கள், 144 இளைஞர்கள் மற்றும் 58 வழிகாட்டிகள் கலந்துகொண்டு, இளைஞர் மாமன்றத்தின் வரைவு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.
இளைஞர்கள் இயக்கமாக இணைந்து செயல்படுதல், இயேசுவின் நற்செய்தி விழுமியங்களை உள்வாங்கி வாழ்வாக்குதல், பன்முகத்திறன்கள் கொண்டு சாதிக்க முனையும் இளைஞர்களுக்கானத் தலைமைத்துவப் பயிற்சி, அன்றாட வாழ்வியல் தளங்களில் விழத்தாட்டும் சவால்கள், சமூகப் பங்களிப்பை உணர்தல், இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவ்வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இளைஞர் மாமன்ற வரைவு அறிக்கை
1. இன்று நாம் வாழும் சூழலில் மானுடநேயத்திற்கும் நமது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை விழுமியங்களான இறையாண்மை, சமத்துவ சமூகத்துவம், சமய சார்பின்மை, மக்களாட்சி போன்றவற்றிற்கும் எதிரான செயல்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் இளைஞர்கள் இயக்கமாக இணைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகிறது. இச்சூழலில் நம் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தையும் இளம் மாணாக்கர் இயக்கத்தையும் பங்குகளிலும் கல்விக்கூடங்களிலும் பரவலாக்கி அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தி ஆற்றல்மிக்க இயக்கமாகச் செயல்படுவதைக் கடவுளின் அழைப்பாகவும் மானுடச் சமூகத்தின் தேவையாகவும் உணர்கிறோம். அதற்கான செயல்பாட்டில் இளைஞர்கள், அவர்களை ஊக்குவிக்கும் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலை நம்பிக்கையாளர், திருநிலையினர் போன்;றோரின் உடனிருப்பையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துதல்.
2. என்றும் வாழும் இளைஞர்; இயேசுவின் நற்செய்தி விழுமியங்களை உள்வாங்கி இயேசுவின் மனநிலையோடும் பார்வையோடும் ஆளுமையோடும் இளைஞர்கள் ஆழமான அருள்வாழ்வில் வேரூன்றி ஆற்றல்மிக்க தூய ஆவியாரால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவு, உணர்வு, உறவு சார்ந்த வளர்ச்சியையும் நம்பிக்கையையும் உறவையும் பெற்று அஞ்சா மனநிலையோடு சமூக மாற்றத்திற்காகச் செயலாற்றுதல்.
3. அளப்பரிய ஆற்றலுடன் பன்முகத்திறன்கள் கொண்டு சாதிக்க முனையும் இளைஞர்களைத் தலைமைத்துவப் பயிற்சி, சமூக அரசியல் பகுப்பாய்வுப் பயிற்சி, திறன்வளர் பயிற்சி போன்றவை வழியாக ஆற்றல்படுத்தி முடிவெடுக்கும் திருஅவை, சமூகத் தளங்களில் இன்றியமையாத பங்கேற்பாளர்களாக உருவாக்குதல்.
4. அன்றாட வாழ்வியல் தளங்களில் இளைஞர்களை விழத்தாட்டும் சவால்களான வேலைவாய்ப்பின்மை, போதை, ஊடக அடிமைத்தனம், மன அழுத்தம், உறவுச்சிக்கல்கள், சாதி மத பாலின ஏற்றத்தாழ்வுகள், தலைமை வழிபாடு, வெறுப்பரசியல், ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றைத் துணிவுடனும் மனத்தெளிவுடனும் எதிர்கொள்ளவும் தெளிந்த உள்ளத்துடன் எழுந்து நடக்கவும் வெற்றியாளர்களாகத் திகழவும் திருஅவை உடனிருந்து வழிகாட்டுதல்.
5. தங்களின் சமூகப் பங்களிப்பை உணர்ந்த இளைஞர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு சமூக நீதி படைக்க ஒத்த கருத்துடையவர்களுடனும் தோழமை இயக்கங்களுடனும் இணைந்து செயல்படுதல்.
6. இன்றைய நுகர்வுப்பண்பாடும் முதலாளித்துவத்தின் இலாப வெறியும் இயற்கை வளங்களைப் பெருவாரியாக அழித்துக் கொண்டுவரும் இக்காலச் சூழலில் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையிலிருந்து நாம் அந்நியப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகிறோம். இச்சூழலில் இளைஞர்கள் இயற்கையைப் பாதுகாக்க அறச்சினம் கொண்டு போராடவும் இறைவனின் அழகிய படைப்பாம் இயற்கையோடும் பல்லுயிர்களோடும் இணைந்து வாழும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றவும் மானுடச் சமூகத்தின் பொதுவீடாம் புவியைப் பாதுகாக்கவும் முனைந்து செயல்படுதல்.
திருஅவையை இளமையோடு புதுப்பிப்பதற்கு இளைஞர்களின் ஈடுபாடும் உருவாக்கமும் அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து 15-ஆவது ஆயர் மாமன்றத்தை இளைஞர்களுக்கென 2018-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார். இம்மாமன்றத்தின் முடிவுகள் 'கிறிஸ்து வாழ்கிறார்' எனும் திருத்தூது ஊக்கவுரையாக வெளியிடப்பட்டன. இவ்வுரையின் முடிவுகளைச் செயல்படுத்த தமிழக ஆயர் பேரவை 2020-ஆம் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்