விவிலியத் தேடல்: திருப்பாடல் 45-2, என்றுமுள இறைவனின் அரியணை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
முன்னொரு காலத்திலே மன்னர் ஒருவர் இருந்தார். நீதி நெறி தவறாது குடிமக்களின் துன்பம் அறிந்து சிறப்பாக ஆண்டு வந்த அவரது நாட்டிலே மாதம் மும்மாரி பொழிந்து நன்கு விளைந்து செழிப்பாக இருந்தது. மக்களும் மன்னருக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தினர். மன்னரும் அம்மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். காட்சிக்கு எளியவராக விளங்கிய அம்மன்னரிடம் கருணை உள்ளம் பெருகியது. பல நாடுகளில் இருந்து புலவர்களும் இன்னும் பலரும் அவரைப் புகழ்ந்து பாடி பரிசுகள் பல பெற்று மகிழ்ந்தனர். மன்னருடைய அமைச்சர்களும் நீதிநெறியோடு அவருக்குக் கட்டுப்பட்டு மக்கள் குறை அறிந்து நிவர்த்தி செய்து வந்தனர். இத்தகைய செழிப்பான நாட்டில் மன்னர் ஒருநாள் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் தன் மனைவி மக்களுடன் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார். அந்தத் தோட்டத்தில் உயர்ந்து செழித்து வளர்ந்திருந்த மாமரங்களில் கனிகள் இருந்தன. அப்போது அந்தத் தோட்டத்தின் மதிலுக்கு வெளியே வறுமையால் வாடிய வழிப்போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான்.
கொடிது கொடிது வறுமை கொடியது என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார் அல்லவா? வறுமையின் கொடுமையால் வாடிய அவன் பல நாட்களாக உணவின்றி நீண்ட தொலைவில் இருந்து நடந்து வந்த களைப்பில் இருந்தான். அவனுடைய கண்களில் செழித்து வளர்ந்த அம்மாமரத்தின் கனிகள் தென்பட்டன. பசியால் தவித்த அவனுக்கு அவை அமிர்தமாய் தோன்றின. அது யாருடையது? எவருடையது? என்றெல்லாம் யோசிக்காமல் கீழே கிடந்த சில கற்களை எடுத்து மரங்களிலிருந்த கனிகளை நோக்கி விட்டெறிந்தான். பசியின் கொடுமை அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது. மாமரத்திற்கும் அவன் பசி தெரிந்திருக்கும் போல அவன் கல்லெறிந்ததும் ஒன்றிரண்டு மாம்பழங்கள் கீழே விழுந்தன. ஆனால் அவனது கெட்ட நேரம், அவன் வீசிய கல் ஒன்று மன்னரின் நெற்றியினைத் தாக்கியது. உடனே இரத்தம் பீறிட்டது. ‘ஆ’ என்று வலியால் அலறிய மன்னரை அவரின் மனைவி தன் சீலையை கிழித்து இரத்தம் வராமல் கட்டுப்போட்டாள். மன்னன் வலியால் துடிக்க பதறிய வீரர்கள் நாலாபுறமும் ஓடிச் சென்று மதிலின் வெளியே நின்று கொண்டிருந்த வழிப்போக்கனை கையும் களவுமாகப் பிடித்துவந்தனர். அது மன்னரின் தோட்டம் என்றும், அதில் திருடியது தவறு, அதிலும் தான் வீசிய கல் மன்னரை தாக்கிவிட்டது என்றும் அறிந்த வழிப்போக்கன் தன் வாழ்வு இன்றோடு முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தான். அப்போது, நடுங்கியபடியே மன்னர் முன் நின்ற அவனை நோக்கி, "என் மீது கல்லெறிந்தாயா?" என்று மன்னர் கேட்டார். அதற்கு அவ்வழிபோக்கன், "மன்னா! பசியின் கொடுமையால் மாமரத்தின் மீது கல்லெறிந்து பழங்களைப் பறிக்க முயற்சித்தேன். அதில் ஒன்று தவறி தங்கள் நெற்றியின்மீது பட்டுவிட்டது!" என்று நடுக்கமுடன் சொன்னான்.
உடனே அமைச்சர், "மன்னா! உங்களின் தோட்டத்தில் திருட முற்பட்டது மட்டுமில்லாமல் தங்களையும் காயப்படுத்தி உள்ளான். இவனுக்குத் தக்க தண்டணை தர வேண்டும் என்று கூற, "என்ன தண்டணை அளிக்கலாம் அமைச்சரே?" என்று கேட்டார் மன்னர். அதற்கு அவ்வமைச்சர், "மாமன்னரே அதை நீங்களே முடிவு செய்யுங்கள்!" என்றார். "அமைச்சரே, இந்த மரங்களுக்கு எத்தனை அறிவு?" என்று மன்னர் வினவ, அதற்கு அவர், "ஓர் அறிவு!" என்றார். “மனிதனான அதிலும் மன்னரான எனக்கு எத்தனை அறிவு?” என்று மன்னர் திரும்ப கேட்க, “ஆறறிவு மன்னா!” என்றார் அமைச்சர். "ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்குக் கனிகளைப் பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா? வறுமை கொடியது! அதனால் இவன் பழம் பறிக்க கல்லெறிந்தான். அது தவறுதலாக என் நெற்றியின்மீது பட்டுவிட்டது. அதற்காக இவனுக்குத் தண்டணை தரலாமா? முதலில் இவனின் பசியினை போக்குங்கள்! பிறகு இவனின் வறுமையைப் போக்க நமது அரண்மணையில் இவனுக்கு ஏற்ற ஒரு வேலையினை வழங்குங்கள்! அல்லது உழைத்து பிழைக்க சிறிது நிலம் தானமாக கொடுங்கள்! என்றார் மன்னர். மன்னரின் கருணையை எண்ணி மகிழ்ந்து காலில் விழுந்து வணங்கினான் வழிப்போக்கன்.
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'மெசியா என்னும் ஒப்பற்ற அரசர்' என்ற தலைப்பில் 45-வது திருப்பாடலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து 06 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும். அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! (வச. 6-9). நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தைகளில் மீண்டுமாக மெசியா என்னும் ஒப்பற்ற அரசரின் பண்பு நலன்கள் குறித்துக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, "என்றுமுளது உமது அரியணை" என்ற வார்த்தைகள் கூர்ந்து நோக்கத்தக்கன. கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அன்னை மரியாவுக்கு அறிவிக்கும் கபிரியேல் வானதூதர், “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (காண்க லூக் 1:31-32) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். இங்கே தாவீது கூறும் 'இறைவனே, என்றுமுளது உமது அரியணை' என்ற வார்த்தைகள் மெசியா என்னும் கிறிஸ்துவின் அரசாட்சி என்றென்றும் நிலையானது என்பதை அன்னை மரியாவுக்கு வானதூதர் கூறும் வார்த்தைகள் வழியாக உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும் எரேமியா நூலிலும் மெசியாவின் ஆட்சிபற்றி எடுத்துக்காட்டப்படுகிறது. “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்” (காண்க எரே 23:5).
மேலும், “அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு! அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்; எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்; கைம்பெண்களைக்கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகிறார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள். தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்? கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்; இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள்” (காண்க எசா 10.1-4) என்று இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் கூறும் வார்த்தைகள், "உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு" என்று தாவீது கூறும் வார்த்தைகளை மீண்டுமாகத் பிரதிபலிக்கின்றன.
ஆகவே, இப்படிப்பட்ட நீதியும், உண்மையும், நேர்மையும் கொண்டு ஆட்சி செய்யும் கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார் என்ற வரிகளால் மெசியா என்னும் அரசரைக் குறித்து அழகு செய்கின்றார் தாவீது அரசர். இப்படிப்பட்ட அரசர் எப்படி அழகுற விளங்குவார் என்பதை, “நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும்” என்று எடுத்துக்காட்டுகிறார் தாவீது அரசர். இறுதியாக, "அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!” என்று உரைக்கின்றார் தாவீது. இங்கே பட்டத்து அரசி என்பது அன்னை மரியாவைக் குறிப்பதாக நாம் பொருள் கொள்ளலாம். காரணம், ஆண்டுதோறும் நாம் கொண்டாடும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவில் இதனைக் குறித்து நாம் தியானிக்கின்றோம். "அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்" என்று திருவெளிப்பாட்டு நூலில் அன்னை மரியா அரசியாக எடுத்துக்காட்டப்படுகிறார். அதுமட்டுமன்றி, “பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன" (காண்க 11: 19; 12: 1, 19) என்ற வார்த்தைகள் அவ்வரசியின் மகனாகிய மெசியா என்னும் அரசரைக் குறிக்கின்றது என்பதும் நமக்குத் தெளிவுபடத் தெரிகிறது.
ஆகவே, அநீதிகளை அகற்றி, அனைவருக்குமான அன்பான உலகத்தை உருவாக்கும் இறைவனின் என்றுமுள அறியணையின்மீது நமது கண்களைப் பதிப்போம். அத்தகையதொரு ஆட்சியில் நீடித்து வாழும் வாய்ப்பைப் பெறுவதற்கான தகுதியை உருவாக்கிக்கொள்வோம். அதற்காக ஆண்டவராம் இயேசுவிடம் இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்