தேடுதல்

கிறிஸ்து அரசர் கிறிஸ்து அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 45-1, மெசியா என்னும் ஒப்பற்ற அரசர்!

நாமும் உலகிற்கெல்லாம் ஒப்பற்ற அரசராக விளங்கிடும் இயேசுவுக்கு உண்மை மக்களாகத் திகழ்ந்து, அவர் வழியில் இறையாட்சியைக் கட்டி எழுப்பிடுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 45-1, மெசியா என்னும் ஒப்பற்ற அரசர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘இறைவனின் துணை இனிதாகட்டும்!’’ என்ற தலைப்பில் 44-வது திருப்பாடலில் 23 முதல் 26 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 45-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'அரசரின் திருமணப்பாடல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 17 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இந்தத் திருப்பாடலின் தலைப்பு ‘தலைமை இசைஞானிக்கு’ அதாவது, "தி லில்லி" (The Lilies) என அமைந்துள்ளது. இந்தத் திருப்பாடல் உலகின் உண்மை அரசராகிய இயேசு என்னும் மெசியாவைக் குறித்த சிறந்ததொரு முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. இக்கருத்து புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்கள் முழுவதிலும் விரவிக்கிடப்பதை நம்மால் காண முடிகிறது. மேலும் இத்திருப்பாடல் உண்மை மெசியாவைப் பற்றி மட்டுமே சுட்டிக்காட்டுகிறது, அதாவது. மெசியா என்னும்  மணமகன் திருஅவையைத் தனக்காக ஆதரிப்பது போலவும், ஓர் அரசராக அதனை ஆட்சி செய்கிறார் என்றும் காண முடிகிறது. மேலும் விண்ணக அரசை ஒன்றுக்கு மேற்பட்ட முறை, ஒரு திருமண விழாவிற்கு, ஓர் அரச திருமணத்தின் தனிச்சிறப்புடன், (காண்க மத் 22:2; 25:1) ஒப்பிடுகையில், நம்முடைய மீட்பர் இதில் அதிகம் ஒப்பிடப்படுகிறார் என்பதையும் நம்மால் அறியமுடிகிறது.

இங்கே நாம் சாலமோனைக் குறித்து எதுவும் சிந்திக்க இயலாது. ஆனால், மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியே தாவீது அரசர் முன்னறிவிப்பதாகவும், வேறு எந்த மனிதரைப் பற்றியும் அவர் இங்கே குறிப்பிடவில்லை என்பதையும் நாம் உறுதியாக உணர்ந்துகொள்ளலாம் (வச 6-7). ஆக, ஒட்டுமொத்த இத்திருப்பாடலையும் நாம் வாசித்துத் தியானிக்கும்போது, உண்மையான அரசராகிய நம் கிறிஸ்துவைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களால், அவருடைய இறையாட்சியில் முழுப் பணிவுடனும் திருப்தியுடனும், அவருடைய திருஅவையை உலகில் கட்டியெழுப்பி அதனை நிலைத்திருக்கச் செய்ய  வேண்டும் என்ற தீவிர விருப்பங்கள் நம் இதயங்களை நிறைக்கச் செய்கின்றன என்பதை நம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இத்தகைய எண்ணங்களை நம் மனதில் கொண்டவர்களாக இத்திருப்பாடலைக் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத்  தொடங்குவோம். முதலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து இப்போது தியானிப்போம். இறையொளியில் அவ்வார்த்தைகளை இப்போது வாசிக்கக் கேட்போம். “மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே! மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்; உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்துவரும்; கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார். வீரமிகு மன்னா! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!  உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட, மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்! உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக! உம்முடைய கணைகள் கூரியன; மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்” (வச. 1-5)

முதலாவதாக, “மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!” என்கின்றார் இப்பாடலின் ஆசிரியரான தாவீது அரசர்.

இங்கே 'மன்னரைக் குறித்து' என்ற வார்த்தைகள் நிச்சயமாக ‘கிறிஸ்து’ என்ற மன்னரை அல்லது அரசரைக்  குறிக்கின்றன என்பதை நாம் ஆணித்தரமாக உணர்ந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், தாவீது, தானே ஒரு அரசராக இருந்துகொண்டு எப்படி தன்னைத்தானே புகழமுடியும் என்ற கேள்வியை எழுப்பும்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆக, கிறிஸ்து என்ற அரசரைக் குறித்து தான் கவிதைப் புனைகின்றபோது தனது நெஞ்சம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது என்கின்றார். மேலும் ‘திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே’ என்ற வார்த்தைகள் குறித்து நாம் தியானிக்கும்போது, ஒரு கைதேர்ந்த கவிஞர் தனது எழுதுகோலைக் கொண்டு கவிதை புனைகின்றபோது அவ்வெழுதுகோல் அவரின் கைகளில் கழிநடனமிடுவதைப் போல தனது நா ஆகிவிடுவதாகக் கூறுகின்றார் தாவீது. கவிதை எழுத பயன்படும் எழுதுகோல் எந்தளவிற்கு விரைவாக எழுதுகிறதோ அந்தளவிற்கு நாவும் விரைவாகச் செயல்படுகிறது என்கின்றார். அதாவது, அவரின் எழுதுகோல் விரைவாக எழுதுவதுபோல, அவருடைய நாவும் மிக விரைவாகப் பேசுகிறது என்பதை இங்கே ஒப்பிட்டுக் கூறுகிறார் தாவீது.

இரண்டாவதாக, "மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்; உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்துவரும்; கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார்" என்கின்றார் தாவீது அரசர். இந்த வார்த்தைகளை நாம் பார்க்கும்போது, புதிய ஏற்பாட்டில் லூக்கா நற்செய்தியில் வரும் நிகழ்வு நம் நினைவுக்கு வருகின்றது. அதாவது, இயேசு ஆண்டவர் தனது சொந்த ஊரான நசரேத்துக்கு வருகின்றார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுகிறார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்படுகிறது. அதனை தனது பணிவாழ்வின் இலட்சியங்களாக அங்கிருக்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றார். அதனைத் தொடர்ந்து, 'அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்' (காண்க லூக் 4:22) என்று வாசிக்கின்றோம். இங்கே அவருடை அழகுடன், அவருடைய ஞானமும் அறிவாற்றலும் ஒருங்கே வெளிப்படுவதைக் கண்டு வியக்கின்றனர் அம்மக்கள். மேலும், "கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார்" என்ற இறைவார்த்தைகள், இயேசுவின் திருமுழுக்கின்போது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (காண்க லூக் 4:3-21) என்று உரைத்த இறைத்தந்தையின் வார்த்தைகளுடன் ஒத்துப் போகின்றன. அவ்வாறே இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” (காண்க லூக் 9:35) என்று இறைத்தந்தை உதிர்க்கும் வார்த்தைகளும் இங்கே நினைவு கூறத்தக்கவை.

மூன்றாவதாக, “வீரமிகு மன்னா! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்! உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட, மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்! உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக! உம்முடைய கணைகள் கூரியன; மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்”  என்கின்றார் தாவீது. இங்கே மெசியா என்னும் அரசர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதையும் நீதிநெறி தவறாமல் அவர் அனைத்து மக்களுக்கும் எப்படி நீதி வழங்குவார் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர். இவ்வார்த்தைகளை நாம் தியானிக்கும் வேளையில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும் (காண்க எசா 9:6-7) என்று உண்மை மெசியா குறித்து இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது. மேலும் அன்னை மரியாவுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கும் நிகழ்வில், கபிரியேல் என்னும் வானதூதர் "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று வாழ்த்தியபோது, இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (காண்க லூக் 1:26-33) என்று கூறுவதைக் காண்கின்றோம். ஆக, இயேசு என்னும் இறைமகனே இவ்வுலகின் உண்மையான அரசர் என்பது அன்னை மரியாவுக்கும் அவர் வழியாக நம் அனைவருக்கும் மேலும் முன்னறிவிக்கப்படுகின்றது.

ஆகவே, தாவீது தான் இஸ்ரேல் மக்களின் மாபெரும் அரசராக விளங்கியபோதும், தன்னைக் காட்டிலும் அரசர்க்கெல்லாம் அரசராக இயேசு என்னும் மீட்பராகிய மெசியா மட்டுமே துலங்கிடுவார் என்பதை மிகவும் தாழ்ச்சியுடன் இவ்வுலகிற்கு வெளிக்காட்டுகின்றார். எனவே, நாமும் உலகிற்கெல்லாம் ஒப்பற்ற அரசராக விளங்கிடும் இயேசுவுக்கு உண்மை மக்களாகத் திகழ்ந்து, அவர் காட்டும் வழியில் இறையாட்சியைக் கட்டி எழுப்பிடுவோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2023, 13:23