தேடுதல்

முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா. முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா. 

மிகுந்த வேதனையைத் தரும் ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தாக்குதல்

நீண்ட காலமாக துன்புற்று வரும் குடும்பங்களின் வலி மிகப்பெரியது, அவர்களின் துன்பம் விரைவில் முடிவிற்கு வர தொடர்ந்து செபிக்கின்றோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரும் வெடிகுண்டுகளும் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்ப்பதில்லை, மாறாக அவை எப்போதும் புதிய பிரச்சனைகளையே உருவாக்குகின்றன என்றும், காசாவில் மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்து ஆர்த்தடாக்ஸ் ஆலயம் மீதான தாக்குதல் மிகுந்த வேதனையைத் தருகின்றது என்று கூறியுள்ளார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.

அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை Tg2000 என்ற இத்தாலியத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ள எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா அவர்கள், ஏற்கனவே நீண்ட காலமாக துன்புற்று வரும் குடும்பங்களின் வலி மிகப்பெரியது என்றும் அவர்களின் துன்பம் விரைவில் முடிவிற்கு வர தொடர்ந்து செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேலிய விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல், புனித போர்பிரியோ கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆலயக்கட்டிடங்களில் ஒன்றை அழித்ததில், ஏறக்குறைய 18 பேர் உயிரிழந்துள்ளனர், 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உறுதியான நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அதேவேளையில் தாக்குதலினால் மிகுந்த அச்சத்தோடு இருப்பதாகவும் எடுத்துரைத்தார் முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா.

மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் காயமடைந்த பலர் காசாவில் உள்ள திருக்குடும்ப கத்தோலிக்க தலத்திருஅவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த அருள்பணியாளர் கேப்ரியல் ரோமானெல்லி அவர்கள், காசாவில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையில் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டோர் வரவேற்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 50 க்கும் மேற்பட்ட ஊனமுற்ற சிறார்,  மிகவும் நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் காயமடைந்தவர்கள் போன்றோர், இத்தாக்குதலினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2023, 11:48