தேடுதல்

திராட்சைத் தோட்ட குத்தகைக்காரர் உவமை திராட்சைத் தோட்ட குத்தகைக்காரர் உவமை 

பொதுக் காலம் 27-ஆம் ஞாயிறு : வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்வோம்!

கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் அளவிற்கு நற்கனிகள் கொடுக்கும் திராட்சைத் தோட்டங்களாக வாழ்வோம்.
பொதுக் காலம் 27-ஆம் ஞாயிறு - ஞாயிறு மறையுரைச் சிந்தனை

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  எசா 5: 1-7   II.  பிலி 4: 6-9      III.  மத் 21: 33-43)                     

ஒரு காட்டில் கழுதையும் நரியும் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் கழுதை நரியைப் பார்த்து, "நாம் இருவரும் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வோம்" என்றது. அதற்கு நரி, "என்ன மாதிரியான ஒப்பந்தம்" என்று கேட்டது "நாம் இரண்டுபேரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எங்குப் போனாலும் நாம் சேர்ந்தே போகவேண்டும். குறிப்பாக, நம் இருவரில் யாருக்கு ஆபத்து வந்தாலும் இன்னொருவர் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியது கழுதை. "சரி, அதன்படியே செய்வோம்" என்று ஏற்றுக்கொண்டது நரி. நாள்கள் சென்றன. ஒருநாள் கழுதையும் நரியும் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது எதிரே பெரிய சிங்கம் ஒன்று வந்தது. ஆகா... பெரிய ஆபத்து வந்துருச்சே என்று எண்ணிய நரி, தனது தந்திரத்தால் கழுதைக்குத் துரோகம் செய்துவிட்டு தான் தப்பிக்க எண்ணியது. அப்போது நரி கழுதையிடம், "கவலைப்படாதே நண்பா... நானிருக்க உனக்குப் பயமேன்? நான் போய் சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். நீ இங்கேயே இரு" என்று கூறிவிட்டு சிங்கத்திடம் சென்றது. சிங்கத்திடம் சென்ற நரி, "அரசே, வணங்குகிறேன். இன்று உங்களுக்கு விருந்து படைக்க ஒரு பெரிய கழுதையைக் கூட்டி வந்திருக்கின்றேன். அதை உணவாக்கிக்கொண்டு என்னை விட்டுவிடுங்கள்" என்று கூறியது. அதற்குச் சிங்கமும் ‘சரி’ என்றது. கழுதையிடம் வந்த நரி, "நான் சிங்கத்திடம் பேசிவிட்டேன். நீ போய் அந்தக் குழிக்குள் குதித்து ஒளிந்துகொள். அது உன்னை ஒன்றும் செய்யாது விட்டுவிடும்" என்று வஞ்சகமுடன்  கூறியது. தன் நண்பன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிய கழுதை ஓடிச்சென்று, அந்தப் பள்ளத்தில் குதித்து ஒளிந்துகொண்டது. உடனே சிங்கத்திடம் ஓடிய நரி, "அரசே உங்கள் விருந்து அந்தக் குழிக்குள் தயாராக இருக்கிறது. போய் உங்கள் விருப்பப்படிக் கொண்டாடுங்கள்" என்று கூறியது. அப்போது சிங்கம், குழிக்குள் இருக்கும் கழுதையை எப்போது வேண்டுமானாலும் உண்டுகொள்ளலாம், ஆனால், இந்தக் கொழுத்த நரியை இப்போதே விருந்தாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியவாறு, நரியின்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது. நரி தனது துரோகத்திற்கான பரிசை பெற்றுக்கொண்டது.

பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கை அழிந்துபோய்விடும் என்ற உன்னதமான கருத்தை முன்வைக்கின்றன. குறிப்பாக, இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் திராட்சைத் தோட்ட உவமை வழியாக உன்னதமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. முதல் வாகத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக இழைத்த துரோகச் செயல்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு என்ற இறைவார்த்தை இந்தத் திராட்சைத்தோட்ட உவமை யாருக்காகச் சொல்லப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த உவமை கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையின் அடையாளமாக அமைக்கின்றது. இன்றைய முதல் வாசகம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதலாகவதாக, கடவுளின் கடின உழைப்பும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் வெளிப்படுத்தப்படுகின்றன. செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து  காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது. ஆக, இஸ்ராயேல் மக்களுக்குக் கடவுள் நற்காரியங்கள் பல செய்தபோதும், அவர்கள் நன்றி மறந்து அவருக்கு எதிராகச் செய்த தீயச் செயல்களை எடுத்துகாட்டும் விதமாக அமைகிறது.

இரண்டாவதாக, இஸ்ரேல் மக்களோடு தான் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த பாவச் செயல்களுக்கு நீதி வழங்க வேண்டுகிறார் கடவுள். எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? என்று கடவுள் எழுப்பும் இந்தக் கேள்விகள் அவர்பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக்காட்டுகின்றன. இன்று நாம் வாழும் சமுதாயத்தில் குடும்பம், உறவுகள், நண்பர்கள், பணித்தளங்கள் என எல்லா இடங்களிலும் எத்தனை எத்தனை துரோகச் செயல்களை நாம் காண்கின்றோம். ‘உனக்கு நான் என்ன குறை வைத்தேன் ஏன் நீ இப்படித் துரோகம் செய்கிறாய்? உன்னை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, பெயரும் புகழும் தேடிக்கொடுத்த எங்களுக்கா இத்தனைத் துரோகங்களை செய்கிறாய்’ எனத் தனது பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர்கள் எழுப்பும் கேள்விகள் துயரம் மற்றும் துரோகத்தின் உச்சமாக அமைகின்றன.

மூன்றாவதாக, எதிர்பார்த்த பலனைத் தராத, அதாவது, நன்றிமறந்த இஸ்ரயேல் மக்கள் பெறப்போகும் அழிவை வெளிப்படுத்துகிறார் இறைவன். “என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; “நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை; நெருஞ்சியும்,  முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.” எந்தயொரு நிலையிலும் உடன்படிக்கையை மீறித் துரோகம் இழைப்போருக்கு எவ்விதமான அழிவுகள் நிகழும் என்பதை இங்கு நாம் அறியமுடிகிறது.

உரிமையாளரின் மகனைக் கொன்ற கொடிய குத்தகைக்காரர் (உவமை)
உரிமையாளரின் மகனைக் கொன்ற கொடிய குத்தகைக்காரர் (உவமை)

இன்றைய நற்செய்தி வாசகம் இதே கருத்தை வேறுவிதத்தில் பதிவு செய்கிறது. தங்களின் அயோக்கியத்தனத்தை மறைத்து தங்களை யோக்கியமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் மேலாதிக்கச் சிந்தனைகொண்ட பரிசேயர், சதுசேயர், திருச்சட்ட அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக்குருக்கள் ஆகியோருக்காகத்தான் இந்தக் ‘கொடிய குத்தகைக்காரர்’ உவமையை இயேசு கூறுகின்றார். இந்த உவமையில் நிலக்கிழாரை இறைத்தந்தையாகவும் அவர் அனுப்பும் ஆட்களைத் தோட்டத் தொழிலாளர்களாகவும், தனக்கு வரவேண்டிய பலனைப் பெற்றுவர நிலக்கிழார் அனுப்பும் பணியாளர்களை பெரிய மற்றும் சிறிய இறைவாக்கினார்களாகவும், இறுதியாக அனுப்பப்படும் அவரது ஒரே மகனை மீட்பராகிய மெசியாவாகவும் உருவகித்து இந்த உவமையைக் கூறுகின்றார் இயேசு. அதனால்தான், தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள் என்று வாசிக்கின்றோம். மேலும் இந்த உவமையின் இறுதியில், “திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்க. அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் என்றார்கள்” என்றும் கூறுவதைக் காண்கின்றோம். அப்படியென்றால், பரிசேயர், தலைமைக் குருக்கள் உள்ளிட்டோர், அவர்களைவிடவும் கீழானவர்ககளாகக் கருதி வெறுத்தொதுக்கப்பட்ட வரிதண்டுவோரும் விலைமகளிரும், நோயாளர்களும் இறைவனின் திராட்சைத் தோட்டமாகிய இறையாட்சிக்கு உட்படுவர் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டு இந்த உவமையைக் கூறுகின்றார் இயேசு.

ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்தான். ஒரு நாள் மாலைப் பொழுதில் அரசரின் அரண்மனையிலிருந்து வந்த ஒரு தூதன், அரசரின் கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பவருக்கு நூறு பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தபடி சென்றான். அதாவது, ஒரு குள்ளநரி அரசரின் மடிமேல் குதித்து உட்காரத் தயாராவது போன்ற ஒரு கனவு அது. இதைக்கண்ட அந்த இளைஞன் “எனக்கு மட்டும் இதற்கு அர்த்தம் தெரிந்தால் எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்” என எண்ணியபடி ஊரைத் தாண்டி ஒரு அரச மரத்தடியில் வந்து அமர்ந்தான். அப்பொழுது அங்கிருந்த ஒரு பறவை, “எனக்கு இதற்குப் பதில் தெரியும்; உனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியைத் தருவதாக இருந்தால் உனக்கு உதவுகிறேன்” என்றது. அதற்கு அவ்விளைஞன் சம்மதித்தான். “அரசர் மடியில் மடியில் அமர வந்த குள்ளநரி நம்பிக்கை துரோகத்தின் அடையாளம். ஆதலால் அரசர் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை கூறியது. உடனே அரசவைக்குச் சென்று இப்பதிலைக் கூறிப் பரிசு பெற்று வந்தான் அவ்விளைஞன். ஆனால், கிடைத்த பரிசில் பாதியை பறவைக்குக் கொடுக்க மனமில்லாமல் வேறு வழியாக வீட்டிற்குச் சென்றுவிட்டான். கிடைத்தப் பணத்தை வங்கியில் முதலீடு செய்து பெரும்பணக்காரனாக ஆனான். ஐந்து ஆண்டுகள்  கழிந்த பின் அரசரின் படைத்தலைவர் அந்த இளைஞனின் வீட்டிற்கு வந்து அவனை வெளியே அழைத்தார். அவனிடம், “அரசர் மறுபடியும் ஒரு கனவு கண்டுள்ளார். அக்கனவில் இரத்தம் தோய்ந்த ஒரு பெரிய கத்தி அரசரின் தலையைச் சுற்றி வந்தது. அதன் விளக்கம் என்ன?” என அறிய விரும்புகிறார்” என்றார். அவ்விளைஞன் இதற்கு எப்படி பதில் சொல்வது என்று பயந்தபடி பழைய ஆலமரத்தடிக்குச் சென்று பறவையைத் தேடினான். மீண்டும் அங்கு வந்த அந்தப் பறவை “அரசரின் கனவுக்கு விளக்கம் கூறினால் இம்முறையாவது எனக்குப் பாதிப் பரிசை தருவாயா” என்று கேட்டது. இம்முறையும் சரி என்று வாக்களித்தான் இளைஞன். “கத்தி வன்முறையின் அறிகுறி, ஆதலால், அரசர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை விளக்கியதை அரசரிடம் கூறி மீண்டும் பரிசைப் பெற்றான். ஆனால் இம்முறையும் பணத்தைப் பறவைக்குக் கொடுக்க மனமில்லாமல் வேறு வழியாக வீட்டுக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு வேளை பறவை அரசரிடம் தன்னைப் பற்றி புகார் செய்து விடுமோ என எண்ணி ஒரு கல்லை எடுத்துப் பறவை மீது வீசினான். ஆனால், பறவை காயம் ஏதுமின்றித் தப்பியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விளைஞன் நடந்ததை எல்லாம் மறந்து விட்டான். அரசருக்கு மறுபடியும் ஒரு கனவு. இம்முறை ஒரு வெள்ளைப் புறா தன் மடி மீது அமர்ந்தவாறு ஒரு காட்சி. மீண்டும் அந்தப் பறவையைத் தேடிச் சென்றான் இளைஞன். அவன் செய்த துரோகத்தை மறந்துவிட்டு மீண்டும் அவனிடம் வந்த அந்தப் பறவை, “அமைதியின் அறிகுறிதான் அந்த கனவின் விளக்கம்” என்று கூறியது. உடனே, அரசரிடம் கூறிப் பத்தாயிரம் பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றான் அவன். ஆனால், இம்முறை அவன் தனக்குக் கிடைத்த மொத்த பரிசையும் பறவையிடம் கொடுக்கச் சென்றான். அப்பொழுது அங்கு வந்த பறவையைக் கண்டு முழு மனதுடன்  மன்னிப்பு கேட்டான். அதற்கு அந்தப் பறவை, எனக்குப் பணம் தேவையில்லை. உனது மனதின் உண்மைத்தன்மை அறியவே உன்னிடம் பணம் வேண்டும் எனக் கேட்டேன் என்று தெய்வீக உணர்ச்சியுடன் பதிலளித்தது.

மேலும் “சற்று யோசித்து பார். முதலில் உனக்குளே நம்பிக்கை துரோகம் என்ற எண்ணம் பரவிக் கொண்டிருந்ததால் உன் நடவடிக்கை அப்படி இருந்தது. இரண்டாவது, வன்முறையைப் பற்றி நினைத்து செயல்பட்டதால் என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தாய். ஆனால், இப்போது உன்னிடத்தில் நம்பிக்கையும், அமைதியும் இருப்பதால் நீ நல்ல மனதுடன் நடந்து கொள்கிறாய். சூழ்நிலைக்கு ஏற்ப எண்ணங்களும் மாறுகின்றன. சிலர் நன்றி மறந்து துரோகம் இழைக்கின்றனர். மற்றும் சிலர் மனசாட்சிக்கு ஏற்ப நேரிய உள்ளத்துடன் நடந்துகொள்கின்றனர்" என்று கூறிவிட்டு பறவை பறந்து சென்றுவிட்டது.

பறவைப் போன்று இப்படிப்பட்ட உயர்ந்த மனநிலையுடன் வாழவேண்டும் என்பதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்” எண்டு அறிவுறுத்துகிறார் புனித பவுலடியார். ஆகவே, கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் அளவிற்கு நற்கனிகள் கொடுக்கும் திராட்சைத் தோட்டங்களாக வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2023, 10:48